புறநானூறு | 188 & 195 பாடல் விளக்கம்



புறநானூறு பாடல் எண் : 188

பொருண்மொழி

வாழ்நாளின் பயன் 

தன் குறையாக (தன் கூறாக)ப் பிறக்கும் குழந்தைச் செல்வம். எல்லாச் செல்வப் பேறுகளையும் படைத்து அவற்றைப் பலரோடு கூடி உண்ணும் பெருஞ்செல்வர் ஆயினும் அந்தக் குழந்தைச் செல்வம் இல்லை என்றால் பயன் இல்லை. பலரோடு கூடி உண்ணும்போது  இடையிலே குழந்தை சின்னச்சின்ன அடி வைத்து நடந்துவந்து கையை நீட்டித், தான் உண்ணும் உணவில் கையை வைத்து,  அதே கையால் தன்னையும், தன் தாய்தந்தையரையும் தொட்டு, வாயால் சோற்றைக் கவ்வி, கையை விட்டுத் துளாவி, நெய் மணக்கும் சோற்றைத் தன் மேனியிலும், தன் பெற்றோர் மேனியிலும் உதிர்த்துக்கொண்டு எல்லாரையும் மயக்கும் பாங்கினது அந்தக் குழந்தைச் செல்வம்.

பாடல் :

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக்

குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,

இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,

நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், 

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக் குறை இல்லை தாம் வாழு நாளே.

* * * * *

புறநானூறு பாடல் எண் : 195

பொருண்மொழி

நல்லவர்களே! நல்லவர்களே! பலராகி வாழும் நல்லவர்களே! நல்லவர்களே என்று நல்லவர் அல்லாதவர்களை அழைப்பது ஏளனக் குறிப்பு . கயல்மீன் முள்ளைப்போல் வெண்மைநிறம் கொண்டிருக்கும் நரைமுடியைக் கன்னமெல்லாம் கொண்டிருக்கும் நல்லவர்களே! பிறருக்கும் பயன்படாமல் வாழும் நல்லவர்களே! உங்களது உயிரைக் சூலம் ஏந்திய பெருந் திறனாளி ஒருவன் வாங்கும்போது “அய்யோ வாங்குகிறானே!” இன்று வருந்துவீர்கள். இப்போது எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். இப்போதே நீங்கள் ஒன்று செய்யுங்கள். அதனால் நீங்கள் சாகும்போது கவலை இல்லாமல் இருக்கலாம். உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் நல்லது-அல்லாததைச் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதுதான் எல்லாரும் மகிழ்வது. நல்ல வழியில் நடக்கும் வழியும் அதுதான்.


பாடல் : 

பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,

பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்

எல்லாரும் உவப்பது; அன்றியும்,

நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.


திணை பொதுவியல்; 

துறை பொருண் மொழிக் காஞ்சி.

நரிவெரூஉத்தலையார் 

பாடியது.


Post a Comment

0 Comments