🔴 ATTENTION READERS 📢 Website Maintenance ! Currently, the website is under maintenance. You may experience some issues or difficulties while reading. Thank you for your understanding and patience.
கடைசி உதவி | February 2026 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

கடைசி உதவி | February 2026 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 


அன்வர் நேரமாகிவிட்டதே என்று அவசர அவசரமாக அலுவலகத்திற்கு ஓடினார். வழியில் கமாலியா தெருவில் வழக்கம்போல் பெரியவர் அமானுல்லா கையில் டிபன் பாக்ஸுடன் திண்ணையில் இருந்தார். அன்வர் கை கடிகாரத்தைக் காட்டி நேரமாகிவிட்டது என்று சொல்லி சென்றார்.

அன்வரின் நண்பர் அஹ்மதின் தந்தைதான் அமானுல்லா. அன்வரும் அஹ்மதும் வகுப்பு தோழர்கள். அன்வருக்கு அஞ்சல் துறையில் எழுத்தராக வேலை கிடைத்தது. மாத ஊதியத்தில் மாறாத நேரான வாழ்க்கை. இப்பொழுது அன்வர் துணை அஞ்சலக தலைவர். அஹ்மதுக்கு இந்தியாவில் வேலை கிடைக்கவில்லை. மும்பையில் பழி கிடந்து துபாய் சென்று நல்ல ஊதியத்தில் பணி புரிகிறார். சர் அஹ்மது தெருவில் அன்வர் வீட்டிற்கு ஆறு வீடுகள் தள்ளி நவீனமான பல மாடி கட்டிடம் கட்டியிருக்கிறார். கீழ் வராண்டாவில் கடைகள், மேல் மாடியில் குடியிருப்புகள் வாடகை ஏராளம் அவருக்கும் பல்லாயிரம் ஊதியம்.

அஹ்மதின் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் அவரின் மனைவி மாமனார் மாமியாரை அவளுடன் வைத்துக் கொள்ளாது விரட்டி விட்டார்.

அன்வர் அலுவலகம் செல்லும்பொழுதும் திரும்பி வரும்பொழுதும் அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கிக் கொடுப்பார்.

அன்வரின் வருகையை எதிர் பார்த்து அமானுல்லா காலை சிற்றுண்டி வாங்கி வருவதற்காக வாசலில் காத்திருப்பார். வயதான காலத்தில் அவரால் கடைக்குச் சென்று வாங்கி வர இயலாது.

அன்று காலையும் அவர் அப்படிதான் அமர்ந்திருந்தார். அன்வர் காலை எழுந்ததே தாமதம். புகை வண்டி வந்துவிடும் என்று ஓடி விட்டார் ஆனால் பாழாய்ப் போன புகை வண்டி அன்று தாமதம்.

நாள்முழுவதும் வேலையே ஓடவில்லை. அன்வருக்கு நண்பரின் தந்தையே ஆனாலும் அவரின் தந்தையைப் போல் நினைத்து பணி செய்தார் அன்வர்.

அமானுல்லாவும் பிறருக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்று எண்ணுபவர். அன்வரின் சேவையை அவரின் மகன் கடமையாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அன்று அன்வரின் வருத்தம் மாறவேயில்லை.

அன்று அன்வரும் தேநீர் அருந்தவில்லை.

மாலையில் வேலை முடிந்து கமாலியா தெரு முனையில் திரும்பும்பொழுது அமானுல்லா வீட்டு வாசலில் கூட்டம் தெரிந்தது. 

சோர்வை மறந்து அன்வர் ஓடிவந்தார்.

மாலை நாலு மணிக்கு இறந்துவிட்ட அமானுல்லா மையித்தைப் பார்த்து அன்வர் கதறி அழுதார்.

அமானுல்லாவின் கடைசி நாளில் கடைசி முறையாக உதவ முடியவில்லையே என்று அன்வரின் அகம் அடங்காமல் அழுது கொண்டிருந்தது.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam February month magazine 2026


Post a Comment

0 Comments