நான் பாமர மக்களைப் போல் ஊருக்குள் உலாவ சென்ற செய்தியை நீ எப்படி தெரிந்து கொண்டாய்?. என்னைக் கொல்லும் அளவிற்கு எனக்கும் உனக்கும் எந்த பகையும் இல்லை. யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே நீ என்னைக் கொல்ல முற்பட்டிருக்கிறாய். நடந்தவைகளை மறைக்காமல் கூறிவிட்டால் கருணையின் அடிப்படையில் தண்டனையுடன் உன் தலை தப்பிக்கும் என்றார்.
அந்தக் கயவன் மன்னர் பிரானின் காலில் விழுந்து, சேரமான் பெருமாளே! என்னை மன்னித்து விடுங்கள். ராஜகுருவே தங்களைக் கொலை செய்ய உத்தரவிட்டார். இதனை நான் அஞ்சி மறுத்த போது, பத்தாயிரம் பொற்காசுகள் மற்றும் பல தங்க நாணயங்கள் தருவதாக கூறினார். பணத்தின் மீது கொண்ட மோகத்தினால் இத்தகைய தவறு இழைத்து விட்டேன் என்று உடல் நடுங்க அச்சத்துடன் கூறினான்.
கயவனின் இந்த கூற்றைக்கேட்ட மன்னர் கதி கலங்கிப் போனார். நான் யாரை எனது அரசபீடத்தின் தூணாக கருதினேனோ அவரா என் தலையைத் துண்டாக்க உன்னைத் தூண்டியது! என்றவாறு ஆச்சரியத்தில் மூழ்கினார். வியப்பில் ஆழ்ந்த மன்னரின் கைகளில் இருந்த அந்த கூரிய வாள் அவரின் உணர்வின்றி கீழே விழுந்தது.
நிலைகுலைந்து போனவராய் அப்படியே சாய்ந்த மன்னரை பிடித்த அமைச்சர், கயவனின் தோள் மீது தனது வாளை வைத்து, நடந்தவைகளை மறைக்காமல் கூறிவிடு. "நீ குற்றம் சாற்றுவது இந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிம்ம சொப்பனமான ராஜகுரு மகா சந்நிதான குருநாதர் மீது". ஏதேனும் மறைத்தோ கூட்டியோ சொன்னால் நீ மட்டுமல்ல உனது ஒட்டுமொத்த பரம்பரையே இந்த சாம்ராஜ்யத்தின் மக்களின் முன்னிலையில் துரோகிகளாக பிரகடனப்படுத்தி தூக்கிலிடப்படுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள் என்று எச்சரித்தார். அமைச்சரின் இந்த கோபம், அந்தக் கயவனின் முகத்தில் மேலும் உயிர் பயத்தை அதிகமாகியது.
தலை குனிந்து கண்களில் நீர் ததும்பியவனாய், மன்னரை நோக்கி " சேரமான் பெருமாள் வேந்தே! முதலில் நான் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நம் நாட்டு ஒற்றர் படையின் தலைமை ஒற்றனான வேணுகோபாலின் நெருங்கிய நண்பன். நானும் வேணுகோபாலும் ஒன்றாக தான் சென்று ராஜ குருவை சந்திப்போம். நீங்கள் நினைப்பதைப் போன்று ராஜகுரு உண்மையான மகா சன்னிதானம் மிக்க குருநாதர் இல்லை. யாரேனும் ராஜகுருவின் கூற்றுக்கோ அவரின் கோட்பாடுகளுக்கோ எதிராக குரல் எழுப்பினால் அவர்களை அடையாளம் காட்டி கொலை செய்ய சொல்வார். சில காலங்களாக தங்களின் சமரச கருத்து ராஜ குருவிற்கு ஏற்புடையதாக இல்லை. அவைகளுக்கெல்லாம் ராஜகுரு தங்களிடம் பலமுறை மறுப்பு தெரிவித்தும் தாங்கள் அதனை ஏற்க மறுத்து விட்டீர்கள்.
மன்னர் பிரான் ராஜ குருவின் சொல்லிற்கு இணங்காதவராய் மாறியதற்காக தங்களைக் கொலை செய்து இந்த சாம்ராஜ்யத்தின் வாரிசு இல்லாமையைக் கருத்தில் கொண்டு ராஜ குருக்களின் கைகளிலேயே இந்த சேரநாடு இருக்க வேண்டும் என்று எண்ணியே தங்களைக் கொலை செய்ய தக்க நேரம் எதிர்பார்த்து கொண்டிருந்தார். இதற்கிடையில் அரேபியர்களின் வருகையும், அவர்களைத் தாங்கள் கண்ணியம் செலுத்துவதையும் கண்ட ராஜகுரு முதலில் அரேபியர்களைக் குற்றவாளியாக தங்களின் முன் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து கிரீடத்தை ரவிவர்மா என்ற மற்றொரு ஒற்றனை வைத்து திருடச் செய்து அவனை வைத்தே வேணுவையும் கொலை செய்துவிட்டார். கொலை பழி அரேபியர்களின் மீது விழுந்தது. இருப்பினும் அரேபியர்களின் நடவடிக்கையால் தாங்களும், நம் சாம்ராஜ்ய மக்களும் இதனை ஏற்க மறுத்து விட்டார்கள். நாளுக்கு நாள் தாங்கள் அரேபியர்களின் மீது பற்று கொண்டு அவர்களுடன் உறவு கொள்வது ராஜகுருவிற்கு வெறுப்பை மூட்டிக்கொண்டே போனது. இறுதியாக தாங்கள் பாமர மக்களைப் போல் ஊருக்குள் உலாவ சென்ற செய்தியை ரகசிய அறையின் மூலம் அறிந்து கொண்ட ராஜகுரு, ரவிவர்மாவின் மூலம் எனக்கு செய்தி அனுப்பினார். ஆரம்பத்தில் இதனை நான் மறுத்தாலும் எனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை கருதி பணம் மீது கொண்ட மோகத்தினால் தங்களைக் கொலை செய்ய முற்பட்டேன் அதன் விளைவு இன்று தாய் நாட்டிலேயே துரோகியாக தங்களின் முன் கைகட்டி நிற்கும் நிலைக்கு ஆளாகி விட்டேன் என்றவாறு அழுது புலம்பினான்.
இதனைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த மன்னர்என்ன ரகசிய அறையா? என்று அந்த கயவனை பார்த்துக் கேள்வி எழுப்பி விட்டு அப்படியே அமைச்சரை நோக்கி, அமைச்சரே! தாங்கள் இந்நாட்டில் 40 ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றுகிறீர். உமக்கு இந்த ரகசிய அறை குறித்து தெரியுமா? என்று கேட்டார். அவரோ, மன்னர் பிரானே இந்த கயவன் சொல்லி தான் இங்கு ரகசிய அறை இருப்பதே தெரியும், என்றார்.
மன்னர் கோபத்தின் உச்சத்தில் எழுந்து தனது வலக்கரத்தால் அந்த கயவனை இழுத்துக் கொண்டு அந்த ரகசிய அறை எங்கே இருக்கு, என்பதை இப்போது காட்ட வேண்டும் என்று அழைத்து சென்றார். கயவனோ அதன் நுழைவாயிலோ இங்கு இல்லை. அரண்மனைக்கு வெளியே உள்ள கேணியின் அருகாமையில் சுரங்கமாக ஆரம்பமாகி இந்த அரண்மனையில் உள்ள எல்லா அறைகளின் பின்புறங்கள் வழியாகவும் சென்று அது ராஜகுருவின் அறையை சென்று நிறைவடையும். இந்த நுழைவாயிலின் மூலம் நேரடியாக ராஜ குருவைச் சென்று சந்தித்து விட்டு இதன் வழியாகவே மீண்டும் வெளியே வந்து விடுவோம். நாங்கள் அரண்மனைக்கு உள்ளே செல்வதும் வெளியே வருவதும் எங்களையும் ராஜகுருவையும் தவிர வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றான்.
கயவன் சொல்வதையெல்லாம் கேட்ட மன்னருக்கு பெரும் ஆச்சரியமும் ஆதங்கமும் உண்டானது. மூவரும் அந்த இரகசிய அறையினுள்ளே சென்று பார்த்தனர். அதனுள்ளே இரு ஒற்றர்களைப் பார்த்த மன்னர், இவர்கள் யார்? என்று கேட்க தங்களின் அறைக்கு பின்புறம் நின்று கொண்டு அறையினுள் நடப்பவை நோட்டுமிட்டு அதனை ராஜகுருவிடம் கொண்டு சேர்க்கும் ஒற்றர்கள் என்று பதிலளித்தான். இதனைக் கேட்ட மன்னரும் அமைச்சரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
சாம்ராஜ்யத்தை ஆளும் மன்னரின் அறையில் நடப்பவைகளை ஒட்டு கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு ராஜ குரு கீழானவரா? என்றவாறு மன்னரும் அமைச்சரும் பார்த்துக் கொண்டனர்.
அதன் பின்னரே மன்னருக்குப் பல உண்மைகள் தெரிய வந்தன. அந்த இரு ஒற்றர்களையும் கைது செய்து மூவரையும் கடுங்காவலில் வைக்கும் படி அமைச்சருக்கு உத்தரவிட்டார் சேரமான் பெருமாள்.
இச்செய்தி ராஜகுருவை எட்டியது. ராஜகுருவோ ரவிவர்மாவின் மூலம் இந்த மூவரையும் கொலை செய்ய திட்டமிட்டார். இருப்பினும் மன்னரின் உத்தரவுக்கிணங்க அரேபியர்களில் குஹாபாவிடம் ரவிவர்மா பிடிபட்டான்.
ராஜகுரு ராம நம்பியின் இந்த சதி திட்டம் மன்னருக்கு மீண்டும் அம்பலமாகவே மன்னர் ராஜகுருவை அருகாமையில் இருந்த அரேபியர்களின் கப்பல் கட்டும் துறைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். ராஜகுரு காவலாளிகளிடம் மறுப்பு தெரிவிக்க காவலர்கள் ராஜகுருவைப் பாமர மக்களைப் போல் வேடம் அணிந்து தூக்கிக் கொண்டு வந்து மன்னர் முன் நிறுத்தினர்.
ராஜகுரு ராம நம்பி மன்னரை நோக்கி சேரமான் பெருமாளே! இது என்ன கொடுமை? என்னை ஏன் இப்படி அழைத்து வருகின்றீர். நான் ராஜகுரு என்பதனை மறந்து விட்டீரா ? . அழைப்பு விடுத்திருந்தால் நானே தங்களைச் சந்தித்திருப்பேனே, இப்படி காவலர்களைக் கொண்டு கள்வர்களைப் போல் என்னைத் தூக்கிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் என்ன? என்றவாறு தனக்கே உரிய பாணியில் தனது குரலை உயர்த்தி கேட்டார்.
மன்னர் அருகில் இருந்த அரேபியர்களைப் பார்க்க, அவர்கள் ராஜகுரு ராமநம்பியின் உண்மை விசுவாசிகளான மூன்று நபர்களையும் சங்கிலியால் கட்டி அவ்விடத்திற்கு இழுத்து வந்தனர். அந்த மூவரையும் பார்த்த ராஜகுரு அதிர்ந்து போனார்.
சேரமான் பெருமாளே! இங்கு என்ன நடக்கிறது? நமது ஒற்றர்களை ஏன் கைது செய்துள்ளீர்கள்? என்று கேட்க ஆத்திரமடைந்த அமைச்சர், குருவே தங்களின் சாயம் வெளுத்து விட்டது. நீங்கள் இந்த சாம்ராஜ்யத்திற்குச் செய்த துரோகம் அதைவிட மேலாக நமது மன்னரைக் கொலை செய்ய தீட்டிய திட்டம் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்றார்.
கண் விழி பிதுங்கியவராய் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தப்பிக்க முயன்ற ராஜ குரு ராமநம்பியை கப்பல் கட்டும் துறையில் இருந்து வெளியேற விடாமல் அரேபியர்கள் மடக்கி பிடித்தனர். ரவிவர்மா, இரண்டு ஒற்றர்கள், ராஜகுரு ராம நம்பி என நால்வரும் மன்னரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
மன்னர் ராஜ குருவின் அருகில் வந்து அவரை கைகூப்பி வணங்கி விட்டு "குருவே! என் தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் இந்த சேர நாட்டை ஆளும் பதவியே வேண்டாம் என்று தான் இந்த சேர நாட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். தாங்கள் தானே முன்வந்து என்னை இந்த சேர நாட்டின் மன்னராக மணிமுடி சூட்ட செய்தீர்கள். தங்களின் வேண்டுகோளுக்கிணங்கியே நானும் இதனை ஒப்புக்கொண்டேன்.
ஆனால் தாங்களோ என்னுயிரைப் பறித்து இந்த நாட்டைக் கைப்பற்றும் சதி திட்டம் தீட்டி உள்ளீர்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
நீங்கள் இந்த நாட்டில் பல தவறுகளைச் செய்து விட்டு அதற்கான தண்டனைகளில் இருந்து தப்பி அப்பாவிகளை அந்த தண்டனைகள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி இருக்கிறீர்கள். தற்போது தங்களின் உண்மை தன்மை குறித்து நான் அறிந்து கொண்டேன். இப்போது நான் என்ன செய்ய? என்றவாறு ராஜகுருவின் கண்களை நோக்கி கேள்வி எழுப்பினார் மன்னர் சேரமான் பெருமாள்.
அருகே இருந்த காவலாளி இடுப்பில் வைத்திருந்த வாலை உருவி மன்னரைத் தாக்க முற்பட்டார் ராஜகுரு. உடனே விழித்துக் கொண்டவராய் அமைச்சரின் வாளை உருவி ராஜகுருவின் நெஞ்சைப் பிழந்தான் மன்னரைக் கொல்ல முற்பட்ட கயவன். மன்னரின் ஆடை முழுதும் ராஜகுருவின் இரத்தக் கறை.
சேர நாட்டின் மகுட மணியாக திகழ்ந்த ராஜகுரு ராமநம்பியின் இறுதி நிலையை கண்ட மன்னரின் கண்களில் நீர் ததும்பியது.
அரேபியர்கள் தாங்கள் அணியும் வெள்ளை நிற ஆடையை மன்னரிடம் கொடுத்து, சேரமான் பெருமாள் வேந்தரே! தாங்கள் இரத்தக்கறையுடன் அரண்மனைக்கு செல்வது சிறந்ததல்ல, இந்த வெள்ளை நிற ஆடை அணிந்து அரண்மனைக்கு செல்லுங்கள் என்றனர்.
அருகிலுள்ள நீர் நிலையத்தில் முகம் கை கால்களைக் கழுவி ஆடையை மாற்றிக் கொண்டு வந்த மன்னரைப் பார்த்த அமைச்சர், மன்னரே! தாங்கள் சேரமான் பெருமாள் என்பதே தெரியவில்லை. இந்த வெள்ளை நிற ஆடையில் தாங்கள் பார்க்க அரேபியர்கள் போலவே இருக்கின்றீர் என்றவாறு கூறினார்.
வந்த மன்னர், தலைமை அமைச்சரே! உங்களுக்கு இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்லவா? ராஜகுரு ராம நம்பியின் இத்தகைய சதி திட்டம் மற்றும் அவரது நடவடிக்கைகள் எல்லாம் எனக்கு முன்பே தெரியும். இரு மாதங்களுக்கு முன் அவர் என்னைக் கப்பல் கட்டும் துறையில் கூலிக்காரர்களை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினார். அந்த கொலையாளிகளிடம் இருந்து என்னைக் காப்பாற்றியவர்கள் இந்த அரேபியர்கள் தான். அந்தக் கொலையாளியைப் பிடித்து விசாரித்த போது ராஜகுருவின் பெயரைச் சொல்லிவிட்டு தனது கழுத்தை தானே அறுத்து இறந்து விட்டான். இதனை நான் அரசவையில் சொன்னால் ராஜகுருவின் மீது களங்கம் விளைவிப்பதாக எல்லோரும் கருதுவார்கள். அதன் காரணமாகவே தான் அரேபியர்களை மறுநாள் காலையில் விருந்தாளிகளை போல் இந்த நாட்டிற்குள் தங்கி வியாபாரம் பார்த்துக் கொண்டு நடப்பவைகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ராஜகுரு ராமநம்பியின் உண்மை முகம் வெளியில் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன் என்றார். இதனைக் கேட்டு அமைச்சர் பெரிதும் வியப்புற்றவராய் அரேபியர்களில் குஹாபாவை பார்க்க அவரும் சிரித்துக் கொண்டே ஆம் என்பது போல் தலையை ஆட்டியபடி மன்னரைப் பார்த்தார்.
அவ்வாறே நடந்தவைகளை எல்லாம் மன்னர் அமைச்சருக்கு விளக்கிக் கொண்டே அமைச்சர், மன்னர், அரேபியர்கள் மற்றும் காவலாளிகள் என அனைவரும் அரண்மனையை வந்தடைந்தனர்.
- மு. முஹம்மது சுஹைப்
Published in Nagore Puranam April month magazine 2025

0 Comments