புறக்கணிக்கப்பட்ட பங்களிப்புகள் | மு. முஹம்மது சுஹைப் | August 2024


ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்து சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தவர்களை நினைவு கூறுவதற்கான நாட்களில் இது. வியர்வை சிந்தி விளைவித்த பொருட்களை கூட விளை நிர்ணயம் செய்ய விடாது வரிவிதித்து அதனுள் பெரும் பங்கினை ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற கொடுங்கோல் ஆட்சிகளின் நிலைகளை கண்டு மனம் உடைந்து புரட்சிகரமாக சுதந்திரத்தை தீ மூட்டினர். அதன் விளைவாக ஆங்கிலேயே ஆதிக்கம் அச்சுதந்திரத் தீக்கு இரையானது.

விடுதலை போரின் வரலாற்றை எழுதுவோரில் பலர் வட இந்தியாவின் வரலாற்றை மட்டுமே போதும் என்று கருதி எழுதுகின்றனர். தமிழர்கள் இன்னுயிர் நீத்ததை மறைத்துவிட்டனர்.

1857 ஆம் ஆண்டு சிப்பாய் கழகத்தின் போது தான் விடுதலைப் போர் துவங்கியது என்பதாகவே நாம் வரலாற்றில் படித்து வருகிறோம் ஆனால் அது சரியான வரலாறு அல்ல.

சிப்பாய் கலகத்தின் முன்பிருந்தே ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்கள் நம் தமிழர்கள்.

பூலித்தேவன் என்ற பாளையக்காரன் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து வென்றான். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆங்கிலேய ஆட்சியினால் தனது கனவனை இழந்த வேலுநாச்சியார் மாவீரன் ஹைதர் அலியை சந்தித்து இக்கடுங்கோல் ஆட்சியினை நடுங்க வைப்பதற்கான திட்டங்களை தீட்டினார். அதற்கு ஏற்ப மருது சகோதரர்களின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை இம்மண்ணில் வேரூன்ற செய்யாது செய்த பெருமை வேலு நாச்சியாரையே சேரும்.

விடுதலைப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இரத்த ஆறு ஓடி கொண்டிருக்க, இந்திய திருநாட்டின் கொடி கீழே விழந்த போது அதனைத் தாங்கிப் பிடித்தவர் நம் தமிழ்நாட்டை சேர்ந்த திருப்பூர் குமரன். அதன் காரணமாகவே வரலாற்றில் இவரை " கொடிகாத்த குமரன் என்று அழைக்கின்றனர்.

இந்திய திருநாட்டின் விடுதலைக்கு சுதந்திரமே எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்டு போராட்டத்தில் பங்கேற்றவர் பாலகங்காதர் திலகர்.

இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வணிகம் செய்ய வந்து நாட்டை கைப்பற்றிய ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை கண்டு மனமுடைந்து அவர்களின் கப்பல்களுக்கு எதிராக சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கியதற்காக தேசத் துரோகி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் வ.உ.சிதம்பரனார். மேலும் சிறையில் கல்லுடைப்பது, மரம் வெட்டுவது, செக்கிழுப்பது போன்ற கடுமையான பணிகளை செய்ய வைத்து துன்புறித்தியது ஆங்கிலேய அரசாங்கம். இதன் காரணமாகவே செக்கிழுத்த செம்மல் என குறிக்கப்படுகின்றார்.

உப்பு சத்தியாகிரத்திற்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இராஜகோபாலச்சாரி தலைமையில் மகாத்மா காந்தியுடன் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் கர்மவீரர் காமராசர், விடுதலை போராட்டத்தில் இவருக்கு இருந்த ஈடுபாட்டை கண்ட ஆங்கில அரசாங்கம் தேசத்துரோகம் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது.

சென்னை மாகாண ஆளுநர் ஆத்தர் ஹோப் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு நிதியளிக்க நன்கொடைகளை சேகரித்த போது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டார் காமராசர்.

மகாத்மா காந்தியின் போதனைகளால் கவரப்பட்டு அவரது சொல்லுக்கிணங்க நாடு முழுவதும் போராடிய இளைஞர்களில் கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபும் ஒருவர்.மேலும் தனது பி.ஏ. பொது தேர்வு கூட எழுதாமல் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

நாட்டின் ஒரு புறம் மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்க மறுபுறம் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் ஆங்கிலேய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரையே சாரும்.

மேலும் மகாகவி பாரதியார், மூதறிஞர் இராஜாஜி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தமிழ் நாட்டினர் பலரும் பங்கு கொண்டு விடுதலைக்காக போராடினர்.

ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்தவர்களை மீட்கவும், நாடு விடுதலை பெறுவதற்காக போராடியதிலும் தமிழ்நாட்டின் பங்கும் இன்றியமையாதது என்பதனை இத்தருணத்தில் நாம் உணர வேண்டும்.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam August month magazine 2024

Post a Comment

0 Comments