கவிக்கோ அப்துல் ரகுமான் :
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர்; தந்தை உருது கவிஞர் சையத் அஹமத், தாயார் ஜைனத் பேகம்; மதுரையில் கல்வி பயின்று, தியாகராசர் கல்லூரியில் பட்டம் பெற்றவர்; சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர்; 'வானம்பாடி' இலக்கிய இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய புதுக்கவிதையின் முன்னோடி; ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்; பால்வீதி, நேயர் விருப்பம், ஆலாபனை உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும், புதுக்கவிதையில் குறியீடு போன்ற ஆய்வு நூல்களையும் படைத்துள்ளார்; அன்னம் பதிப்பகத்தை நிறுவியவர்; கவிதை அறக்கட்டளை அமைத்து சிறந்த கவிதை நூல்களுக்கு பரிசளித்து வந்தவர்; சாகித்ய அகாதமி விருது, தமிழன்னை விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்; 2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இருந்தார்; 2017 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் காலமானார்.
பாருக்குள்ளே நல்ல நாடு
அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.“என்ன குற்றம் செய்தீர்கள்” ? என்று கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொன்னார்கள்..
ஒருவன் சொன்னான் எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள் என்றான்.
இன்னொருவன் சொன்னான் “என் வருமானத்தைக் கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்று சொன்னேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள்.
நான் கரி மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. உடனே கறுப்பு பணம் வைத்திருந்ததாகச் சொல்லிக் கைது செய்து விட்டார்கள்.
என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்
அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன். அரசுப் பணியாளரைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” என்ற திரைப்படச் சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்களை (40 தொகுதிகள்) அவதூறு செய்ததாக சிறைச்சாலைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன். அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக சிறையில் அடைத்துப் போட்டுவிட்டார்கள்
ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்” என்று எழுதினேன், கடத்தல்காரன்” என்று கைது செய்து விட்டார்கள்.
“நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில் உண்மையை எழுதினேன். நாட்டில் அமைதித் தன்மையைக் குலைத்ததாகச் சொல்லி சிறையில் கொண்டு வந்து விட்டார்கள்”
சுதந்திர தின விழாவில் ‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பசி மயக்கத்தால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சொல்லி சிறையில் அடைத்து விட்டார்கள்.
அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்துமாரு புராணக்கதையில் கண்ணன் சொல்லியிருக்கிறான் என்று சொன்னேன். என்பெயரோ கண்ணன் அதனால் “பயங்கரவாதி” என்று என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
நான் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தேன். சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது என்று கவிக்கோ கிண்டலாக நாட்டுநடப்பைக் கவிக்கோ எடுத்துரைக்கிறார்.

0 Comments