காதல் மேகம் - உவமைக் கவிஞர் சுரதா

 


உவமைக் கவிஞர் சுரதா : 

"உவமைக் கவிஞர்" என்று போற்றப்படும் சுரதா அவர்கள், 1921 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி பழையனூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். பாரதிதாசன் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக தனது பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டு, பின்னர் அதுவே சுருங்கி சுரதா என வழங்கப்பட்டது.

மரபு மாறாமல் கவிதைகள் எழுதுவதில் வல்லவரான சுரதா, தனது கவிதைகளில் பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தி கருத்துக்களை எளிய முறையில் விளக்குவதில் சிறந்து விளங்கினார். இதன் காரணமாகவே அவர் "உவமைக் கவிஞர்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

இவர் கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம் எனப் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். "தேன்மழை" இவரது புகழ் பெற்ற கவிதை நூலாகும். மேலும், பல திரைப்படப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். "அமுதும் தேனும் எதற்கு", "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" போன்ற இவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை.

சுரதா அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி காலமானார். அவரது உவமை நயம் மிக்க கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

காதல் மேகம் :

அவள் முழுநிலா வெளிச்சத்தில் மூவருலா நூல்படித்துக் கொண்டிருந்தாள். காள மேகம் ஆவலொடு அவளைக் காணவந்தான். “ஆரணங்கே” என்றழைத்தான், பேசவில்லை. “காவியமே! கடல்நீரை உந்தித் தள்ளும் காவிரியே! கதவைத் திறப்பாய்” என்றான். பாவையவள் தெருக்கதவைத் திறக்கவில்லை. பழம் பழுத்து வாய்திறந்தும் பேசவில்லை.

மங்கலப்பொன் போன்றவளே! ஏனோ இந்த மனமாற்றம்?” எனக்கேட்டான். “இங்கிருப்போர் என்னை இகழாதிருக்க வேண்டின் என் மதத்தில் நீ சேர வேண்டும். இல்லையேல் உங்களை நான் விரும்பமாட்டேன் என்றாள். தமிழ்க் கவிஞனான அவன் திருநீறு பூசிக்கொள்ளும் சைவ சமயத்தைச் சார்ந்தவன். செங்கமலம் தெருக்கதவைத் திறந்தாள். நெற்றியைச் (திருநீறை) சீர்திருத்தம் செய்துகொண்டு உள்ளே வந்தான்.

இருநெஞ்சங் கொண்டவளின் மகளே! தெங்கின் இளநீரே! இனி நமக்குள் ஆண்பால், பெண்பால் என்ற இரு பிரிவன்றி வேறெந்தப் பிரிவுமில்லை, பேதமில்லை. திருமங்கை ஆழ்வாரின் நெற்றிக்கோடு (நாமம்) தேவையில்லை. என்னைப் பார் பெண்ணே! எனக்கு உன்னோடு சம்பந்தம் உண்டு அதனால் நான் சம்பந்தன் என்றான்.

“மேலும் அவன் கூறுகிறான், மதமென்ன மதம் பெரிய மதம். உன் சம்மதமிருந்தால் அதுவே எனக்குப்போதும். சமணம், பௌத்தம், கௌமாரம், ஆகியமதங்கள் இருளறுக்குமோ? எல்லாம் வாய் மதமன்றி வேறென்ன? உயிரெழுத்து வந்தால் குற்றியலுகரம் மெய்விட்டு ஓடும். (படகு + ஓட்டி = படகோட்டி) அதுபோல மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும். மதி பொங்கப் பொங்க மதங்கள் மங்கும்.

நாம் இருவரும் இரட்டையர் இணையெதுகை. நீயோ ஈரவயல் நானோ ஏர் உழவன். கட்டில் எந்திரத்தின் சாசனமே. அன், அம் என்னும் சாரியையே, பருப்பளவு குற்றத்தை இந்த நாடு பனையளவாகப் பெரிதுபடுத்திப் பேசும் என்பதை நான் அறிவேன். இந்தக் குருட்டு உலகம் இனிமேல் என்னைக் குறை கூறும், கூறட்டும் கவலையில்லை என்றான்.

எப்போதும் இனிப்பவளே! ‘ழ’ கரம் என்னும் எழுத்து போல சிறந்தவளே! பொதுச்சீர் மாதே! உப்பே! பெண் ஓவியமே! அணிகளுக்கொல்லாம் தலைமை தாங்கும் உவமையணியே! எனக்கு வாய்த்த முப்பாலே! உப்புக்கரிக்காத கடலே! செம்பொன் முத்தே! முழுமதியே! மூவசைச்சீர் கனியே! சேற்றுத் தாமரையே! நீண்டகூந்தல் கொண்ட இளம்பிறையே! கேளாய்.

தென் கடலில் முத்திருக்கும் செல்வமே. நீ திறக்கும் வாய் வாசலிலே முத்திருக்கும்; தென்மலையில் மணக்கும் சந்தனம், சிற்றின்பத்தனமும் உன்னிடமிருக்கும். தென்திசையில் குளிர் தென்றல் படுத்திருக்கும். சிவந்த அல்லி உன் உதட்டில் படுத்திருக்கும். தமிழகத்தில் பேரறிவு மிளிர்ந்திருக்கும். தேன்சுவை உன் பேச்சில் மிகுந்திருக்கும் என்று தன் காதலியைப் புகழ்ந்துரைக்கிறான்.

மேலும் அவன் கூறுகிறான் ‘எப்போதும் குளிரும் நிலா முகம் அல்லிப் பூவை நினைவூட்டும். உன்னுடைய வாயிதழும், மெல்லிய கொடியிடையும், பார்வை உணர்ச்சிகளும், ஒய்யார நடையும், காலில் சதங்கை எழுப்பும் சங்கீதச் சுவையும், மாந்தளிர் நிறமும், தமிழமுதப் பேச்சும், பூச்சும் மதங்களை நம்பாத எந்தன் நெஞ்சை மயக்குதடி. நச்சினவர்க்கு இனிய மாதே!

முத்தி நெறி அறியாதார் மூர்க்கர் என்றால், முத்த நெறி அறியாதார் வீணரன்றோ? கத்தி நெறி வீரரிடம் போய்ச் சேரட்டும், காதல் நெறி நம் நெஞ்சில் உறவாடட்டும். பத்தி நெறி தலை நரைத்த பின்னர் இதயத்தில் வந்து பதியட்டும். மெத்தை ஏறும் வித்தை எல்லாம் கற்றவளே! திருவானைக்காலில் விளங்கும் திருவில்லே! தஞ்சை நெல்லே!”

பூவெல்லாம் உன் உடலின் மீது பூத்திருக்க, நீ அவற்றைப் பார்த்திருந்தும் காலமெல்லாம் சென்று,சென்று கால்நோவப் பூப்பறித்துச் சூடும் பெண்ணே! என்னுடைய நாவில் நீ! நெஞ்சில் நீ! நல்ல தமிழ்ப்பாடல் நீ என்று வர்ணித்தான். ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள். “உடம்படுமெய்” இலக்கணத்தை இரவில் கண்டார்.

Post a Comment

0 Comments