பன்முக நந்நாகை - கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 

பன்முக நந்நாகை

நாகப்பட்டினம் மாவட்ட தலைநகரம். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 18.10.1991 ஆம் ஆண்டில் பிரிந்து நாகப்பட்டினம் மாவட்டம் உருவானது. தனி மாவட்டம் உருவாவதற்கு முன்பே கீழ தஞ்சை மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.

கடல் மலி நாகை என்று கலித்தொகையும் கடல் சூழ் நாகை என்று பரிபாடலும் பாடிய ஊர். நாகப்பட்டினம் வங்கக்கடலின் வனப்பான துறைமுகம்.

துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் கலங்கரை விளக்கம் 1846 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தக் கலங்கரை விளக்கத்தன் மேல் நின்று நாகப்பட்டினம், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தை பார்க்கலாம்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது 1994 முதல் பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. 21. 9. 2017 முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் மார்க்கப் போலோ நாகப்பட்டினத்திற்கு வந்து நாகப்பட்டினத்தின் சிறப்பை நயம்பட பாராட்டி எழுதியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் கட்டிய கொடிமரம் மேடை இன்றும் கொடிமரப் பூங்காவாக விளங்குகிறது. சேகனா புலவர் நாகப்பட்டினத்தில் சிறப்பை நாகை அந்தாதியில் வகையாக எழுதியுள்ளார்.

1856 முதல் 1870 வரை நாகை வெளிப்பாளையத்திலும் நாணயக்கார தெருவிலும் 350 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள இந்திய பொருள்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சோழர் ஆட்சி காலத்தில் நாகையில் புத்தக விகாரம் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதை ஆனைமங்கல செப்பேடு அறிவிக்கிறது.

தமிழ்நாட்டில் சர்பட்டம் பெற்ற ஒரே இஸ்லாமியர் சர் அகமது தம்பி மரைக்காயர் என்ற வணிகர் செல்வந்தர், வள்ளல். அவரின் பெயரில் நாகப்பட்டினத்தில் ஒரு தெரு உள்ளது. தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் பிறந்த ஊர் நாகப்பட்டினம்.

குலாம் காதிர் நாவலர் பினாங்கில் தொடங்கிய வித்தியா விசாரிணி என்ற இதழை 1888 லிருந்து நாகூரில் பிரசுரித்தார். 1889 இல் இருந்து சீரிய சூரியன் என்ற இதழையும் பிரசுரித்தார்.

குலாம் காதிர் நாவலர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். மறைமலை அடிகள் குலம் காத்திடு நாவலரின் மாணவர்.

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கசியர்கள் நாகப்பட்டினத்தை பிடித்தனர். அவர்களின் பதிவேடுகளில் நாகப்பட்டினத்தில் இஸ்லாமியர் வாழும் பகுதியை நாகூரு என்று குறித்துள்ளனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தளபதி லாலி நாகூர் தர்காவில் கொள்ளையிட்டதோடு நாகூர் இஸ்லாமிய வழிகளிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும் கொள்ளையிட்டான்.

1796 ஆம் ஆண்டில் நாகூரில் 70 முஸ்லிம் கப்பல் வணிகர்கள் இருந்தனர். 7 கப்பல்கள் அவர்களுக்கு சொந்தமானவை. 1848 ஆம் ஆண்டில் 10 பேர் கப்பல் சொந்தக்காரர்கள்.

நாகூரை உள்ளடக்கிய நாகப்பட்டினம் நகர மன்றம் 24/11/ 1866 இல் துவங்கப்பட்டது.

நூற்றாண்டு விழா கண்ட நகர மன்றம் அன்றைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மாரிஸ் துரை தலைமையில் 12 நியமன உறுப்பினர்களைக் கொண்டது. 1877 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 12 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 1885 ஆம் ஆண்டில் நகராட்சி தலைவர் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. முதல் தலைவர் சி. வி. சுயம்பு ஐயர். 1918 ஆம் ஆண்டில் 13 உறுப்பினர்கள் 1924 ஆம் ஆண்டில் 24 உறுப்பினர்கள் 1931 ஆம் ஆண்டில் 28 உறுப்பினர்கள் 1952இல் 32 உறுப்பினர்கள் தற்போது 36 உறுப்பினர்கள்.

ஆதார குறிப்புகள் :

  1. தினமணி கொண்டாட்டம் 17/10/2021

  2. அஞ்சல் முத்துகள் இந்திய அஞ்சல் துறை தமிழ்நாடு மாநில அஞ்சல் துறை இதழ். (சிப்பி -04 முத்து -04)

  3. சமநிலை சமுதாயம் பிப்ரவரி 2013

  4. இஸ்லாமிய கலைக்களஞ்சியம் எம் ஆர் எம் அப்துல் ரஹீம்

  5. தினமணி 01/11/2016

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Post a Comment

0 Comments