Nagore Puranam
சிற்பியை இழந்த சிற்பங்கள் (தொடர் - 01) | Vol.4, Issue 6 - JUNE 2026 | கேப்டன் ஜ. ஹாஜிராம் பீவி

சிற்பியை இழந்த சிற்பங்கள் (தொடர் - 01) | Vol.4, Issue 6 - JUNE 2026 | கேப்டன் ஜ. ஹாஜிராம் பீவி


ரதி தனது மகள்கள் அபி மற்றும் சசியைப் பார்த்து, "பள்ளிக்குச் செல்ல நேரம் ஆச்சு, எழுந்திரிங்க..." என்று மெதுவாக எழுப்பினாள். அவர்கள் இருவரும் கண்களைச் சிறிது திறந்து, "அம்மா... ஐந்து நிமிடங்கள்... ப்ளீஸ்..." என்று சொல்லிவிட்டு மீண்டும் போர்வைக்குள் முகத்தை மறைத்துக் கொண்டார்கள்.

இன்று அவர்களுக்கு அரையாண்டு பரிட்சை இருந்தாலும், அதற்கான அவசரம் அவர்களின் முகத்தில் தெரியவில்ல.

அந்தச் சோம்பேறித் தூக்கம், கவலையற்ற குழந்தைத்தனம் ரதியின் இதயத்தை மெதுவாகத் தொட்டது.

அவள் அவர்களைப் பார்த்தபடியே சில நொடிகள் அமைதியாக நின்றாள். பிறகு, அவளது மனம் மெதுவாகத் தனது குழந்தைப் பருவத்தை நோக்கி நகர்ந்தது.

அந்த வயதில், "இன்னும் ஐந்து நிமிடங்கள் தூங்கட்டுமா?" என்று கேட்கும் உரிமையே அவளுக்கு இல்லை.

விடியற்காலையில் கண் விழித்தவுடன், நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்தான் அவளுக்கு முன் நின்றது.

மற்ற குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகும் நேரத்தில், அவள் மற்றவர்களின் வீட்டில் தண்ணீர் எடுத்து, பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.

புத்தகத்தின் வாசனை அவளுக்குத்  தெரியும் ஆனால் அது அவளது கைகளில் நீண்ட நேரம் தங்கியதில்லை.

சில நேரங்களில், வீட்டின் மூலையில் கிடந்த பழையப் புத்தகத்தை எடுத்து, அதில் இருந்த எழுத்துகளை மட்டும் பார்த்திருக்கிறாள்.

ஆனால் அடுத்த நிமிடமே, "ரதி, அந்த வேலையை முடிச்சுட்டியா?" என்ற குரல்-அவளை மீண்டும் அவளது நிஜத்திற்குள் இழுத்துவிடும்.

இப்போது, அவள் முன்னால் படுத்திரப்பவர்கள் அவளது மகள்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த அமைதியைப் பார்த்தபோது, அவள் இழந்த குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது.

அந்த நினைவுகளோடு சேர்ந்து- ஒரு சிறிய நிம்மதியும் இருந்தது; அவள் அனுபவித்த வாழ்க்கையை, அவர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை.

அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த ஐந்து நிமிடங்கள் கூட அவள் போராடி வாங்கிய ஐந்து நிமிடங்கள்தான் என்று அவள் மனதில் தோன்றியது.

அவள் மெதுவாக அவர்களின் தலைமுடியை வருடி, “அபி... சசி... எழுந்திரிங்க... பரிட்சைக்கு நேரமாகிடும்..." என்ற மீண்டும் அழைத்தாள்.

அந்தக் குரலில் கட்டாயம் இல்லை, ஆனால் ஒரு கனவு இருந்தது. அவள் படிக்க முடியாத கனவு - அவர்கள் மூலம் நனவாக வேண்டும் என்ற ஒரு தாயின் அமைதியான வேண்டுதல்.

தொடரும்....

Post a Comment

2 Comments