ஏட்டில் இருக்கும் பெண் சுதந்திரம் | February 2026 | மு. முஹம்மது சுஹைப்

 


கற்பு, கண்ணியம், நல்லுறவு பேணுதல் நம் நாட்டின் தலைசிறந்த பண்புகளில் ஒன்று. 

தாய், தந்தை, தமக்கை, தமையன், தோழன் மற்றும் தோழி என எல்லா உறவுகளிலும் ஆணும் பெண்ணும் சமமாகவும், ஒருவருக்கொருவர் துணையாகவும் இருக்கின்றனர். 

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற அவல நிலை எல்லாம் மாறி இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெற்றோர்கள் ஆண் பெண் என இரு பாலரையும் எல்லா வித துறைகளிலும் படிக்க வைத்து சாதித்து பெரும் அறிஞர்களாகவும் மற்றும் விஞ்ஞானிகளாகவும் உருவாக்குகின்றனர்.

எல்லாவற்றிலும் இருவரும் சமம் என்றானபோது நல்லவை கெட்டவை இரண்டிலும் நியாயம் என்பது இருவர்களுக்கும் பொதுவானது தானே? அப்படியானால், எல்லாவித கட்டுப்பாடுகளும் , அடக்குமுறைகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்துவது ஏன்? .

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு போன்ற பல தலைவர்கள் ஆங்கிலேயரிடம் போராடி இந்திய நாட்டைச் சுதந்திரம் அடைய செய்ததுபோல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மகாகவி பாரதி & கலைஞர் மு. கருணாநிதி போன்றோர்கள் தமிழ்நாட்டில் பெண் சுதந்திரம் பற்றி பேசியவர்கள். பேசியதோடு மட்டுமில்லாமல் அதற்கான வழிகளையும் உருவாக்கினர்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், சமூக சமத்துவத்திற்காகவும், பெண்களின் விடுதலைக்காகவும் தீவிரமாகப் போராடி, சுயமரியாதை திருமணங்களுக்கு ஆதரவு அளித்தவர் தந்தை பெரியார்.

தனது ஆட்சிக் காலத்தில் திராவிட இயக்கத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்ததோடு மட்டுமில்லாமல் மேலும் பெண்களுக்கு உரிமை வழங்க பல சட்ட சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தார் பேரறிஞர் அண்ணா.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே! என முழங்கினான் பாரதி.

பெண்களுக்கான சொத்துரிமை & குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் பெண் உரிமைகளை நிலைநாட்டியவர் கலைஞர் மு. கருணாநிதி .

மேற்குறிப்பிட்ட இந்த சமத்துவம் மற்றும் பெண் சுதந்திரம் நம் முன்னோர்கள் போராடி பெற்று தந்தவை. இவையெல்லாம் இன்று ஏட்டளவில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மக்களின் மனதில் ஆணாதிக்க நிலை மற்றும் பெண் அடக்குமுறை நீங்கி விட்டனவா? என்று கேள்வி எழுப்பினால் அது பதிலற்று தான் போகும். 

இக்கட்டுரையைப் படிப்போர் என்னுடைய இந்த கருத்துக்கு முரண்படலாம். அது குறித்து விளங்குவதும் எனது கடமையாக கருதுகிறேன்.

கீழ்காணும் சில நிகழ்வுகளை படித்த பின்னர், முரண்பட்டவர்களின் கருத்துகளில் மாற்றம் ஏற்பட செய்யும்.

சமூக வலைதளங்களான முகநூல் (Facebook), படவரி (Instagram), புலனம் (WhatsApp) போன்றவைகளில் ஆணும் பெண்ணும் தன்னை அழகாக பாவித்து கொண்டு படங்களை பதிவிடுகின்றனர்.

இந்த செய்திகள் பெற்றோர்களுக்கு தெரிய வரும் போது, பெண் பிள்ளையை கண்டித்து அவளிடம் இருந்து கைப்பேசியை பறிக்கும் அதே பெற்றோர், ஆண் பிள்ளை புகைப்படத்தை பதிவிட்டதை பார்த்து, "என் மகன் எம்புட்டு அழகா இருக்கான்" என்று ஊரெல்லாம் உரைக்கின்றனர்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் "இன்னொரு வீட்டில போய் வாழ போறவ, அவளோட முகத்தை ஆயிரம் ஆம்பளைங்க பார்த்தோம் நல்லா இருக்குமா? மோசமான இந்த காலத்துல என்னென்னமோ நடக்குது பெண் பிள்ளைகளை பத்திரமா வச்சுக்கணுமா இல்லையா? " என்று கூறும்.

அதே பெற்றோரின் வாதம், ஆண் பிள்ளையும் இன்னொருவரின் கணவன் என்பதனை மறந்து கட்டுபாடுகள் தகர்ந்து காணாமல் போகிறது.

வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்களிடம், "காவாலி பசங்க சுத்துவாங்க, பார்த்து சூதானமா போ, குனிஞ்ச தலை நிமிராமல் நடப்பது தானே பெண் பிள்ளைக்கு அழகு, நாளைக்கு ஒரு வீட்ல போய் வாழ போறவ" என அக்கறையோடு சேர்ந்த அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றனர்.

ஏதாவது ஒரு வீட்டிலாவது வெளியில் செல்லும் ஆண் பிள்ளையை பார்த்து, " உன் கூட பொறந்த அக்கா தங்கச்சி மாதிரி தான் மத்த பொம்பள புள்ளைங்க ரோட்டுல வருவாங்க போவாங்க, அவங்க யாரு என்னன்னு ஏறெடுத்து பாக்குறது நம்ம வேலை இல்லை! நீ இன்னொருத்தவளுக்கு புருஷனாக போறவன், அதை மனசுல வச்சிக்கிட்டு வெளியே போயிட்டு வா" என்று சொன்னதுண்டா ? இவ்வாறு சொன்னதாக ஒரு பொழுதேனும் கேட்டது உண்டா ?.

அதற்கு வாய்ப்பே இல்லை. இன்றளவும் இங்கு பெண் பாதுகாப்பு என்ற போர்வையில் ஆணாதிக்கம் ஊடுருவி ஆட்சி செய்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் இந்த பாராபட்சம்?

பாதுகாப்பு வேறு, அடக்குமுறை வேறு என்பதனை மக்கள் என்று விளங்கிக் கொள்வார்களோ?

இருபது வருடங்களுக்கு முன் வெளியான ஒரு திரைப்படத்தில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் சொன்ன வசனம் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. "உங்களையெல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது டா!

கட்டுப்பாடு கண்ணியம் சுய ஒழுக்கம் எல்லாம் ஒரு சாராரை மட்டுமே சார்ந்தே இன்றளவும் இருப்பது ஏன்? 

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும் ஆணாதிக்க நிலை இன்றளவும் மக்கள் மனதில் இருக்கத் தானே செய்கிறது.

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று. 

இதில் ஆணோ? பெண்ணோ? யார் செய்தாலும், தவறு தவறுதான்.

இருப்பினும் ஆண் செய்யும்போது அது தவறாகக் கருதப்படாமல் பெண் செய்யும் போது தவறாகக் கருதப்படுவது இணையம் வளர்ந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இந்தப் போக்கு வருத்தத்திற்குரியது.

- மு. முஹம்மது சுஹைப்

Published in Nagore Puranam February month magazine 2026


Post a Comment

0 Comments