🔴 ATTENTION READERS 📢 Website Maintenance ! Currently, the website is under maintenance. You may experience some issues or difficulties while reading. Thank you for your understanding and patience.
நாளைய என் தேசம் ! | Vol.4, Issue 6 - JUNE 2026 | கவிச்சுடர் காஞ்சி கிருபா

நாளைய என் தேசம் ! | Vol.4, Issue 6 - JUNE 2026 | கவிச்சுடர் காஞ்சி கிருபா


அந்த மணலி நெடுஞ்சாலையின் ஓரத்தில் முப்பதாண்டுகளுக்கு மேல் உள்ள அந்த அரச மரம்தான் இசக்கிமுத்துவிற்கு வீடு, சொர்க்கம், உலகம் எல்லாம்.

ஒரு அரசாங்க அலுவலகத்தில் உதவியாளராகப் பணி செய்து ஓய்வு பெற்ற பிறகு தன் சொந்தங்களால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து இந்த அரச மரமே ஆறுதல்

நடைபாதையின் ஓரத்தில் இருக்கும் அரசமரம் அமைதியான தனிமையையும், உறவுகள் தர மறுத்த மன நிறைவையும் அந்த அரச மரம் தந்து நிழலாய் நின்றது.

இசக்கி முத்துவிற்கு இப்போது 62 வயது..

சொந்தங்களால் கைவிடப்பட்ட இசக்கி முத்துவிற்கு..

ஒரு நாள் நாயொன்று அடிப்பட்டு ரத்தம் சிந்தி நொண்டி நொண்டி வந்து அவரிடம் அடைக்கலம் புகுந்து சொந்தமாகிவிட்டது.

அந்த நாய் எப்பொழுதும் இசக்கி முத்து கூடவே இணைபிரியாமல் இருந்தது இசக்கிமுத்துவைச் சுற்றி சுற்றி வந்தது யாரையும் கடிக்காது .நன்றியை மட்டும் வாலாட்டிக் காட்டும் ..

அரச மரத்திலிருந்து மிக அருகிலுள்ள ஒரு குப்பைத் தொட்டி தான் இருவருக்கும் அட்சய பாத்திரம், உணவுக்கூடம்..

கொட்டப்படும் எச்சில் இலைகள், உணவு பண்டங்கள் எல்லாமே இவர்களுக்குத்தான்.

அரசு வேலையில் இருந்த போது அளவு கடந்த பாசமும் மரியாதையும் வைத்த சொந்தங்கள் ஓய்வு பெற்றதும் ஒதுக்கி விட்டார்கள் தனக்கென எதையும் வைத்துக் கொள்ளவில்லை இசக்கி முத்து.

" இத்தோட எங்க வீட்டு பக்கம் வந்தீங்கன்னா மரியாதைக் கெட்டுப் போயிடும்" பிள்ளைகள் சொன்ன வார்த்தைகள் அடிக்கடி அவர் இதயத்தைக் குத்திக் கொண்டிருந்தன.

" யோவ் எந்திரியா உன்னைத்தான் எந்திரி" மிரட்டல் சத்தம் அதிகம் வர அந்த மார்கழி மாத குளிரின் நடுவே போர்வையைச் சற்று விளக்கி ஏறிட்டுப் பார்த்தார் இசக்கி, இரண்டு போலீஸ்காரர்கள் விரைப்புடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது..

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் இசக்கி..

" யோவ் உன்னோட நாய் இங்கு எல்லாரையும் கடிக்குதாமே கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க"

" சார் இல்ல சார் அது யாரையும் கடிக்காது சார் அமைதியாக இருக்கும் சார், அன்பானது சார் எனக்கு உதவியாக இருக்கும்"

"அந்தக் கதை எல்லாம் வேணாம் பொதுமக்கள கடிச்சு துன்புறுத்தினதினால் உன்னுடன் நாயைப் புடிச்சிட்டு போக போறோம்"

" சார் வேணாம் சார் உங்க காலை புடிச்சி கேட்கிறேன் சார் வுட்டுருங்க சார் " இசக்கி முத்துவின் வார்த்தையை பொருட்படுத்தாமல் அடுத்த ஓர் ஐந்து நிமிடங்களில் ஒரு மாநகராட்சியின் வண்டி வந்து அந்த நாயை பிடித்து சென்ற பொழுது இசக்கியின் காலடியில் வந்து வாலாட்டியது நாயின் கண்களில் கண்ணீர் சொரிந்து வடிந்து கொண்டிருந்தது.

இன்னொரு நாள்...

திடீரென குப்பைத் தொட்டியை காணவில்லை.

விசாரித்தபோது வேறு ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் மாற்றி விட்டார்கள் என்று கேள்விப்பட்ட இசக்கி முத்துவிற்கு வருத்தமே மேலிட்டது..

ஒரு வாரம் கழித்து அரசு அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் சகீதமாக ஒரே கூட்டமாக நெடுஞ்சாலையை விரிவு படுத்த அந்த அரச மரத்தை அடியோடு வேரோடு சாய்த்து கீழே தள்ளினார்கள்.

இசக்கிமுத்து இடிந்து போனார்.

கண்களில் கண்ணீர் வடிந்து ஓடியது. அந்த இடத்தை விட்டு மெல்ல மெல்ல சென்று கொண்டிருந்தபோது அவர் எதிர் திசையில் பலவிதமான நாய்களோடு நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர் சிலர்..

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் பாடல் ரிங்டோன் ஆக ஏதோ ஒரு அலைபேசியில் காற்றின் வழியாக கலந்து வந்து கொண்டிருந்தது...

மனிதநேயம் மனித அன்பு எல்லாம் மறைந்து விட்ட இந்தத் தேசத்தில் நாளை என்ன நடக்குமோ ? என்ற கேள்வியோடு நடந்து கொண்டே இருந்தார் இசக்கி முத்து.

Post a Comment

0 Comments