ஆய்வாளர் : லி. ஷாகின் , முனைவர்பட்ட ஆய்வாளர், புதுக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 600014

நெறியாளர் : முனைவர். கு. சுந்தரமூர்த்தி, தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 600014 

Article No : NPIJT01082026

ஆய்வுச் சுருக்கம் :

"பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவல" எனும் பவணந்தி முனிவரின் வரிக்கிணங்க, காலம் மாற இலக்கிய வகைகளும் மாற்றம் பெறத் துவங்கின. நிற்க நேரமில்லாமல் ஓடும் இச்சமூகம் பாடல்களைப் பொருள் பிரித்து விளங்கிக் கொள்ள முடியாமல் உரைகள் தோன்றலாயின. இதன் காரணமாகவே உரைகள் முளைவிடத் துவங்கின. உரைநடையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக சிறுகதை, புதினம் தொடங்கி இன்று குறுங்கதை, மீகுறுங்கதை வரை வளர்ந்துவிட்டது. இவ்வளர்நிலையின் காரணமாக பல்வேறு வகையான மக்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடு பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் ஹலிமாவின் நாவல்கள் புலப்படுத்தும் பன்நோக்கு பார்வையை இக்கட்டுரையில் காணலாம்.

பெண்ணெழுத்து :

பெண் சுதந்திரம், பெண்ணியம் எனப் பேசிக்கொண்டிருக்கும் அதே காலத்தில் சில பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே தயங்கும் நிலையும் உள்ளது. மரபுகளை உடைத்துக் கொண்டு வெளிவரும் பல பெண்களால் தங்கள் வலிகளை நேரடியாக சொல்லி விட முடிவதில்லை. அவ்வாறு சொல்ல இச்சமூகம் அவர்களை அனுமதிப்பதும் இல்லை. மதம், இனம், மொழி மற்றும் பாலியில் பாகுபாடுகள் இன்றும் நடந்தேறிய வண்ணமே உள்ளதால் தங்கள் வலிகளை எழுத்துக்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

முன்னுரை :

மனிதன் தன் சிந்தனையை வெளிப்படுத்தத் துவங்கும்போது இலக்கியம் உருபெறுகின்றது. அக்கால மக்கள் நாடு கடந்து சென்று வியாபாரம் செய்து வந்ததை இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர். 'யவனர் என்னும் சொல் முதலில் கிரேக்கர்களையும், பின்பு அவர்களைத் தொடர்ந்து வந்த ரோமானியர்களையும் பின்னர் அரேபியர்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.

பதிற்றுப்பத்தில் யவனர்கள் பற்றிய குறிப்பு உள்ளதும் காணக் கிடைக்கிறது. "இன்னிசைப் புணரி இரங்கு பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்ய' போன்ற குறிப்பு காணப்படுகின்றது.

இலக்கிய வளர்நிலை : 

மக்கள் கால நிலைக்கு ஏற்ற வகையில தம்மைத் தகவமைத்து கொள்வது போல் இலக்கியங்களும் மாற்றம் பெற்றன. அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில் நவீன இலக்கியங்களான கவிதை, நாவல் , சிறுகதைகள் ஆகியன வளர்ச்சிப் பெறத் துவங்கி தத்தம் இடங்களை நிலை நிறுத்திக் கொண்டன.

புதின இலக்கியம் : 

நாவலின் தோற்றம் என்பது இலக்கிய உலகின் புதிய விடிவெள்ளியாகக் கருதப்பட்டது. மக்களின் வாழ்வியல் அதன் போக்கிலேயே யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாக நாவல் இலக்கியம் தோன்றியது. புதினத்தின் தோற்றம் பற்றி ஹென்றி லாரன் என்ற ஆய்வாளர் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். "நாடகத்தின் ஒளியானது மிக வேகமாக இலக்கிய வானில் குன்றிடவே புதிய விண்மீன் வரவை எதிர் நோக்கினர்”. புதிய இலக்கிய வடிவம் ஒன்றைத் தருவதால் வேடிக்கை உணர்வைத் தருவதுடன் அறக்கருத்தைத் தந்து முன்னேற்றும் நன்மை உடையதாகவும், எளிமையுடையதாகவும் அந்தக் காலத்தின் தேவையை நிரப்பக்கூடியதாகவும் அமையும் வகையில் ரிச்சர்ட்சன் புதிய வடிவத்தைப் படைத்தார் என்கிறார். 

எழுத்தாளர்கள் அவரவர்களின் பண்பாடுகளை நாவல் இலக்கியத்தில் எழுதிப் பதிவிடத் துவங்கினர். அவ்வாறு இஸ்லாமிய மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், ஆண் மையப்பார்வை, மதம் சார்ந்த பெண்களை ஓடுக்கும் நிலைகள் என அனைத்தையும் பதிவு செய்யத் துவங்கினர்.

ஆய்வு எல்லை :

எழுத்தாளர் சாரா அவர்கள் எழுதிய தல்ச்சா, ஹலிமா ஆகிய இரண்டு புதினங்களும் ஆய்வின் எல்லைகளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

காயல்பட்டின மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் :

எழுத்தாளர்கள் புதின இலக்கியத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதி மக்களின் வாழ்வியல் வழக்காறுகளையும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் தங்கள் எழுத்துக்களின் மூலம் பதிவு செய்து உலகறிய செய்து வந்தனர். அவ்வகையில் சாரா அவர்களின் புதினங்களில் காயல்பட்டின வட்டார/பகுதி வாழ்வியல் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை, கந்தூரி விழா (தர்கா விழா):

சிலவற்றை மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஒன்றை உண்மை என்று நம்புவதில் இரு கூறுகள் அடங்கியுள்ளன. அதாவது அறிவுபூர்வமான ஒரு கூறும், உணர்ச்சிப்பூர்வமான மற்றொரு கூறும் நம்பிக்கையினுள் அடங்கியுள்ளன.

ஒவ்வொரு பிரிவினைச் சேர்ந்த மக்களும் தங்கள் இறையாண்மையைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு சின்ன மக்கா என்று அழைக்கப்படும் காயல்பட்டினத்தில் வருடந்தோறும் அங்குள்ள தர்காக்களில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அவ்விழா நடத்தப்படுவதன் மூலம் தங்கள் இறையாண்மையை வெளிப்படுத்துகின்றனர். "சாயப்பா தைக்கா கந்தூரிக்கு ஒட்ட என்னவெல்லாம் செய்யலாம் எனக் குடும்பம் குடும்பமாகப் பேசி முடிவெடுத்தனர். சில வீட்டில் கல்யாணங்கள் நிச்சயிக்கப்பட்டன, சில வீடுகள் மாப்பிள்ளை, பெண் முடிவானது. எல்லாமே சாயப்பாவின் அருளினால் தான் என்று மக்கள் நம்பினர்.

பண்டிகைக் காலங்கள் :

மக்கள் தங்கள் பண்பாடுகளைப் பண்டிகைகளின் வழியாக வெளிப்படுத்துவார்கள். சில பண்டிகைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அமையும். அவ்வகையில் இரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றாக உள்ளது. அந்த இரம்ஜான் பண்டிகையையும், நோன்பு நேர இரவுகளையும் காயல்பட்டின மககள் பின்வருமாறு கொண்டாடியும் கடைப்பிடித்தும் தங்கள் இறையாண்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

காயல்பட்டினம் நோன்புக் கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் முழுக்க பள்ளிவாசல்களில் ரமலான் கால பயான்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அதிகாலை சுபுஹில் துவங்கும் நோன்பு அந்தி நேரத்து மஃரிப் வரை தொடரும். 

காலை அடங்கி இருக்கும் ஊர் மாலை நேரத்தில் அமைதியாக எழுந்திருக்க ஆரம்பிக்கும். அந்தி சாய சாய ஊர் பரபரப்பாகும். தெருக்குத் தெரு தற்காலிக வாடகைக்கடைகள் முளைக்கும். பள்ளிவாசல்களில் ஊத்துக் கஞ்சி மாலையிலேயே துவங்கிவிடும்.

திருமண முறைகள் :

ஆயிரம் காலத்துப் பயிர் எனக் கூறப்படும் திருமண நிகழ்வானது அனைத்து இல்லங்களிலும் நடைபெறும் முக்கிய சுப நிகழ்வாக உள்ளது. திருமண முறைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும்' ஏற்ற வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் திருமணமானது மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை நடைபெறும். அதில் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களும் சிறு சிறு மாற்றங்களுடன் திருமண நிகழ்வினை நடத்துகின்றனர்.

"காயல்பட்டினம் வாழ்வியல் மிக வித்தியாசமானது. அரேபியப் பழக்க வழக்கம், இலங்கைப் பழக்கவழக்கம், கேரள பழக்க வழக்கம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பிசைந்து ஒரு புது உருவத்தைக் கொடுத்திருப்பார்கள். முக்கியமாக பிள்ளைகளைக் கல்யாணம் செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் பழக்கம் அங்கு அறவே இல்லாமல் இருந்தது" .

'காயல்பட்டினத்தைப் பொருத்தவரை ஆண் பிள்ளைகள் தான் திருமணம் முடிந்ததும் பெட்டி, படுக்கையுடன் மனைவி வீட்டிற்கு வருகைத் தருவார்கள். இதற்காக அவர்கள் ஒரு புதுவித யுத்தியைப் பயன்படுத்தினார்கள். அதாவது, பெண் குழந்தைகளுக்கு வீடு கொடுப்பது. ஓர் ஏழை இரண்டு பெண்குழந்தைகள் வைத்திருந்தால் கூட இரண்டு குடிசையாவது தனியாகக கட்டிக் கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு வீடு என்பது கட்டாயமாக்கப்பட்டது. அதனால் பெண் குழந்தைகள் தங்கள் தாய், தகப்பனுடனேயே காலத்துக்கும் இருந்தனர்.

இதற்காக காயல்பட்டின மக்களிடம் ஒரு பின் கதையும் இருந்தது.

சாதி மத பேதங்கள் :

நவீன உலகம், அறிவியல் உலகம் என அனைத்து நிலைகளில் வளர்ந்து வந்தாலும் சாதி, மத பிரிவினைகள் அவை சார்ந்த பிரச்சனைகள் இன்னும் நடந்தேறிய வண்ணமே உள்ளது. இப்பிரச்சனையானது யார் பெரியவர்? யாருக்கு முதலிடம்? யார் புனித தளங்களுக்குள் நுழைய அனுமதி பெற்றவர் என்பதில் துவங்குகிறது. இவ்வாறான பிரச்சனைகளையும் நாம் சந்தித்த வருகிறோம்

"என்னடி ஒன்மவ எல்லா புள்ளைலுவலயம் ஒன்னா ஒட்கார வச்சி பாடம் சொல்லி கொடுக்குறா? யாரும் பாத்தா என்ன சொல்லுவாளோ! லெப்பை ஊட்டு புள்ளைலுவலும் வருதுவோ! அவொலுக்கு தெரிஞ்சுது நம்மல வச்சி பாக்க மாட்டோ"

ஆண் மையப் பார்வை :

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம் என ஒரு புறம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதே இருபதாம் நூற்றாண்டின் மறுபுறம் ஒடக்கு முறைகள் நடந்தேறிய வண்ணமே உள்ளன. பொதுவாக ஆண்சமூகம் தன்னைச் சூழ்ந்துள்ள பெண்களைத் தங்களை விட வலிமை குன்றியவர்கள் உணர்த்துவதற்காக பல்வேறு வகையில் தாழ்த்திப் பேசுவார்கள். 

இன்று ஆண்கள் பணிபுரியும் அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டாலும், பெண் தனக்கு ஒரு படி கீழ் என்பதை ஆண்கள் வர்க்கம் பல்வேறு வகையில் நிரூப்பித்துக் கொண்டே உள்ளது.

இஸ்லாமிய மதம் பொருத்தவரை பல குடும்பங்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்குக் குறிப்பிட்ட வயது வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவது வழக்கம். அவ்வாறு திருமணம் செய்து கொண்ட பெண்கள் தங்கள் பால்ய காலத்தில் கண்ட கனவுகளையும்' ஆசைகளையும் மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறார்கள். திருமணத்திற்குப் பின்பு அவர்கள் தன் கணவன் மீது கொண்ட காதலினால் தனது கனவைத் தனது கணவனின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற ஆசையினால் கூறும்போது, ஆண் உள்ளம் அவ்வளவு எளிதாகப் பெண்ணை விட்ட விடுவதில்லை, அந்த வார்த்தையை அப்பெண் வெறுக்கும் அளவிற்கு மாற்றி விடுகிறார்கள்.

"திருமணமாகி விருந்துக்குப் போன ஒவ்வொரு இடத்திலும் வக்கீலம்மாக்கு சோறு வைங்க என்ற சொல்லிச் சிரிப்பான். வக்கீலம்மாக்கு ஆனம் ஊத்துங்க என்று சொல்லிவிட்டு சிரிப்பான். வக்கீலம்மாக்கு கால் வலிக்கும் ஆட்டோல போலாமா என்று சொல்லிவிட்டு சிரிப்பான். ஹலிமாவக்கு அவன் குரல் எரிச்சல் ஆகிப்போனது.

அதைவிட வக்கீல் படிப்பு மேல் வெறுப்பு அதிகமானது. தன்னால் முடிந்த ஒரு விசயத்தை முட்டாள்களுக்காக முடியாமல் கைவிடுவது என்பது எத்தனை பெரிய கையாலாகாத் தனம் என்பதை உணர்ந்தாள்."சில நேரங்களில் பெண்கள் தங்கள் நினைத்ததைச் சாதித்து விட்டால் அதை ஏற்க மறுக்கும் ஆண்கள், எவ்வாறெல்லாம் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர். "ஆண்களும் வந்து பாராட்டி விட்டு பேச்சுடனே "நம்ம ஊர் புள்ளைனா சும்மாவா? ஆனா நீ ஒன்னும் பெருசா செஞ்சிடல! இதே நாங்க உன் இடத்தில் இருந்திருந்தா இன்னும் சரியா சென்று இருப்போம்" என்று பாராட்டுக்கு இடையில் தங்கள் ஆணாதிக்க வார்த்தைகளை வெளிக்காட்டு விட்டுச் செல்வார்கள்.

பெண்களின் நிலைகள் :

சங்கம் தொடங்கி இன்று வரை ஒரு பெண் தான் சமூகத்தில் ஓர் ஆளாக வளர வேண்டும் என்று நினைத்து அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் போது இந்தச் சமூகம் அப்பெண்ணை அவ்வளவு எளிதாக வளர விட்டு விடுவதில்லை என்பது உலகறிந்த உண்மை. அதிலும் ஆண் மனம் ஒரு பெண் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்தையும் விடச் சற்று ஒரு படி மேலே சென்று இன்றும் பல கிராமங்களில் பெண்கள் தங்களின் தேவை என்ன என்பதையும் தங்கள் எந்த நிலையில் உள்ளோம் என்பதையும் அறிந்து கொள்ள இயலா அறியாமை உலகிலேயே வாழ்ந்த வருவது பெண் அடிமைத்தனத்தின் உச்சம் எனலாம்.

பெயர் தெரியாக் கிராமத்தைச் சர்ந்த பெண்கள் தங்கள் உடன் இருக்கும் ஒரு பெண் வளர்ந்து விட்டால் அவளுடன் இருக்கும் தோழியே தோள்தட்டிக் கொடுப்பதில்லை என்பதற்கு உதாரணம் பின்வரும் வரிகள்.

ஹலிமாவை அந்த ஊர் எப்படி பார்த்தது என்பது விசித்திரமானது. ஊரில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வாெரு பார்வை இருந்தது.

"நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டா. அவளால படிக்க முடியாததால இப்படி ஆகிட்டா" 

"பெண்களால இதுதான் முடியும், இதுலாம் முடியாதுன்னு ஒரு இது இருக்கு. அது எதுவும் அவளுக்குத் தெரியாதா என்ன எல்லாத்தையும் வந்து பாருங்கற மாதிரி பேசுறா"

"நம்ம ஊரு பொம்பள மாதிரியா இருக்கா ? அவ நடையும் ஒடையும். அத்தன ஆம்பிளைலுவ இருக்குற கூட்டத்துல சரிக்கு சமமால்ல நிக்கா" 

இவ்வாறு அவ்வூரில் உள்ள பெண்களே ஹலிமாவை வார்த்தைகளால் அதிகாரம் செய்து வந்தனர்.

முடிவுரை :

இக்கட்டுரையில் காயல்பட்டின மக்களின் வாழ்வியல் நிலைகளும், அம்மக்களின் வழக்காறுகளையும், இனறு கிராமப்புறத்தில் பெண்கள் தங்கள் ஆசா பாசங்களைத் துறந்து, ஆண்களின் கீழ் அடிமைகளாக எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதையும் காட்டியுள்ளார். மேலும் ஹலிமா நாவலின் மூலம் ஒரு ஆணிடம் இருக்கும் பொருளாதார சுதந்திரம் பெண்ணிடம் இல்லை. அதற்காக அவள் போராடத்துவங்கும் போது சமூகம் அப்பெண்ணை எவ்வாறெல்லாம் சித்தரிக்கிறது என்பதைத் தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அடிக்குறிப்புகள் :

  1. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு - ம. முகமது உவைஸ் பக்கம் - 03
  2. இஸ்லாமிய இலக்கிய வரலாறு - ம. முகமது உவைஸ் பக்கம் - 13
  3. Tamil virtual academy
  4. நாட்டார் வரலாற்றில் சில அடிப்படைகள் - தே. லூர்து - பக்கம் - 237 
  5. தால்ச்சா - சாரா பக்கம் - 46
  6. தால்ச்சா - சாரா -பக்கம் -72
  7. தால்ச்சா - சாரா பக்கம் - 86
  8. தால்ச்சா - சாரா - பக்கம் - 86
  9. ஹலிமா - ஜபினத் - பக்கம் - 15 
  10. ஹலிமா - ஜபினத்- பக்கம் -20
  11. ஹலிமா - ஜபினத்- பக்கம் - 61
  12. ஹலிமா - ஜபினத்- பக்கம் -35
  13. ஹலிமா -ஜபினத் - பக்கம் - 35
  14. ஹலிமா - ஜபினத்- பக்கம் -53