ஆய்வாளர் : தி. தருண்சர்மா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை - 600014 

நெறியாளர் : முனைவர் த. மோகன்தாஸ், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 600 005.

Article No : NPIJT02082026

Abstract :

This article examines the publication history of the Kurunthokai from a historical perspective. Specifically, it offers a comparative analysis of the editions published by scholars such as Ra. Raghava Iyengar, Po. Ve. Somasundaranar, Sami Chidambaranar, and Mu. Shanmugam Pillai, highlighting their unique features, approaches to commentary, editorial methodologies, as well as their respective merits and shortcomings. Furthermore, the study elucidates the publication history of the Kurunthokai and the evolution of its commentarial tradition.

ஆய்வுச் சுருக்கம் :

இக்கட்டுரை குறுந்தொகை நூலின் பதிப்பு வரலாற்றை வரலாற்று நோக்கில் இராகவையங்கார். பொ.வே. சோமசுந்தரனார், சாமி சிதம்பரனார், மு. சண்முகம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் வெளியிட்ட பதிப்புகளின் தனித்துவங்கள், உரைநெறிகள், பதிப்பு முறைகள் மற்றும் அவற்றின் சிறப்புகளும் குறைகளும் ஒப்பீட்டு அடிப்படையில் விளக்கப்படுகின்றன. மேலும், குறுந்தொகையின் பதிப்பு வரலாற்றையும் உரைமரபின் பரிணாம வளர்ச்சியையும் தெளிவுபடுத்தும் ஆய்வாக அமைகிறது.

Key Words :

Kuruntokai, Publication History. Commentary Style, Sangam Literature, Editors, Textual Variants, Commentary Tradition, Reprint.

திரவுச் சொற்கள் :

குறுந்தொகை, பதிப்பு வரலாறு, சங்க இலக்கியம், பதிப்பாசிரியர்கள், பாடவேறுபாடு, உரைமரபு, மீள்பதிப்பு.

முன்னுரை :

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகைக்கு உட்பட்ட அகநூல்களில் ஒன்றாக குறுந்தொகை சிறப்பிடம் பெறுகிறது. இதன் பாடல்கள் பல்வேறு காலங்களில் பல அறிஞர்களால் சுவடிகளின் அடிப்படையில் பதிப்பிக்கப்பட்டு, உரைகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிப்பும் தனித்தனி உரைமுறைகளையும் ஆய்வுக் கண்ணோட்டங்களையும் கொண்டிருப்பதால், குறுந்தொகையின் பதிப்பு வரலாறு தமிழாய்வில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

ரா. இராகவையங்கார், பொ.வே. சோமசுந்தரனார், சாமி சிதம்பானார், மு.சண்முகம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களின் பதிப்புகள் குறுந்தொகை உரைமரபின் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இக்கட்டுரை, இப்பதிப்புகளின் தனிச்சிறப்புகள், உரைநெறிகள், பாடவேறுபாடுகள் மற்றும் ஆய்வுப் பங்களிப்புகளை ஆராய்ந்து, குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றின் பரிணாம வளர்ச்சியை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரா. இராகவையங்காரின் உரைப் பதிப்பு (1947) :

ரா. இராகவையங்கார் குறுந்தொகையைப் புலவர் பெயரினைத் தலைப்பாகக் கொண்டு பதிப்பித்துள்ளார். இம்முறை 1940-ல் எஸ். வையாபுரிப்பிள்ளை சங்க இலக்கியத்தைத் தொகுத்தவற்றைப் பார்த்துப் பின்பற்றியுள்ளார். ரா. இரா. மதுரையில் வாழ்ந்த காலத்தில் 1899-ல் குறுந்தொகையைச் சுவடியிலிருந்து படியெடுத்து வைத்திருந்தார். அக்கையெழுத்துப்படி பின்னர் தமக்கு உதவியது என்றும் மு. சண்முகம் பிள்ளை தமது நூலில் (1994:359) குறிப்பிட்டுள்ளார்.

ரா.இரா.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலந்தொட்டே (1935-41) குறுந்தொகைக்கு உரை எழுதினார் என்றும், அவர் மறைவிற்குப் பின்னர் (1946) குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து முதல் 111-பாடல்களுக்கு இவரின் உரையை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 'குறுந்தொகை விளக்கம்' என்ற பெயரில் வெளியிட்டது என்பது இப்பதிப்பின் வழி அறியலாம்.

எஞ்சிய 112-401 வரையிலான பாடல்களுக்கு, மும்பை டாட்டா ஆராய்ச்சியின் நிறுவனத்தில் புல முதன்மையராக இருந்த ரா.இராவின் பேரனாகிய விஜயராகவனிடமிருந்து பெற்றுக் குறுந்தொகை முழுமைக்குமாக 1993-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

"இப்பதிப்பின் பொறுப்பாசிரியர்களாக சு. சாமிஐயா, வெ. பழநியப்பன் ஆகியோர் பணியாற்றினர். அப்பதிப்பில் 346, 347, 348, 349, 350, 351, 353 ஆகிய 7 பாடல்களுக்கு உரை கிடைக்கவில்லை என்றும், அதனால் அப்பகுதியை உவே.சா. உரையைக் கொண்டு நிறைவு செய்துள்ளதாகவும் பதிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்."" (ரா. இரா. குறுந்தொகை விளக்கம், பக். XI-XVIII).

பதிப்பு முறை

ரா. இரா. பதிப்பின் நூன்முகப்பில் இவருடைய நிழற்படம், வாழ்க்கை வரலாறு, உரைச் சிறப்புப் பாயிரம் ஆகியன இடம் பெற்றுள்ளன. குறுந்தொகை விளக்கம் முதற்பதிப்பிற்கு 1996-இல் சிதம்பரநாதச் செட்டியார் எழுதிய முகவுரைப் பகுதி புதிய பதிப்பிலும் தந்துள்ளார். இதில் ரா. இராவின் உரைச்சிறப்பு, ஆராய்ச்சித் திறன், உரையின் பொருத்தம், பொருத்தமின்மையும் சுட்டிக்காட்டித் திறனாய்வு செய்துள்ளார். மேலும் மூலம், உரையைத் தொடர்ந்து செய்யுள் குறிப்பகராதி, புலவர் பெயரகராதி, பாடப்பெற்றோர் பெயரகராதி, அருஞ்சொல் பொருளகராதி பிழைத்திருத்தம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பதிப்பின் சிறப்பு :

"சௌரிப் பெருமானாங்களாரது குறுந்தொகைப்பதிப்பு சிற்சில விடங்களிற் பொருள் விளக்கமின்றிப் பிழையுடன் காணப்படுவதால் அப்பிழைகளை நீக்கித் திருத்தமான பாடத்துடன் வேறொரு புதிய உரையினை இயற்றி வெளியிடுதல் ஐயரவர்களின் நீங்காத கடமையாயிற்று என்று முகவுரையில் சிதம்பரநாதன் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உரைகாரராகிய ஐயரவர்களின் உரைப் பதிப்புக்கும், மூன்றாம் உரைகாரராகிய ஐயங்காரின் உரைப்பதிப்பிற்கும் பொருள்கோள் பற்றிய கருத்துரை, சிறப்புரை, பாட வேறுபாடுகள் முதலிய பகுதிகளில் வேறுபாடுகள் உள்ளன.

அவற்றை அறிந்து கொள்ளல் அவசியம் என்கிறார் சிதம்பரநாதன்.² ( ரா. இரா. குறுந்தொகை விளக்கம், முகவுரை, ப.7)

மீள்பதிப்பு :

அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக 'குறுந்தொகை விளக்கம்' என்னும் குறுந்தொகைப் பதிப்பு பற்றிய விவரம் வருமாறு: முதற்பதிப்பு-1947, 2-ம் பதிப்பு-1956. 3-ஆம் பதிப்பு 1958. 4-ஆம் பதிப்பு-1983. இந்நூல் பொருளடக்கம், முகவுரை- டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அணிந்துரை, குறுந்தொகை விளக்கம், முதற் குறிப்பகராதி, பிழைத்திருத்தம் என்ற பகுதிகளை உட்கொண்டுள்ளது. 112 பாடல்களுக்கு மட்டும் உரை விளக்கம் உடையதாக உள்ளது இப்பதிப்பு.

பொ.வே.சோமசுந்தரனாரின் பதிப்பு :

பொ.வே. சோமசுந்தரனார் 1909-ல் தஞ்சாவூர் மாவட்டம், பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்தார். தமது 10-ஆம் வயதில் தாயை இழந்து தாய்மாமனால் வளர்க்கப்பட்டார். இவர் இளமைக் கல்வியைப் பெறுவதற்கே போதிய ஆதரவு இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி 'சர்க்கரைப் புலவர்" என்பவரின் ஆதரவால் கல்விக்கற்று, பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு ஏற்பட்டு பல படைப்பிலக்கியங்களையும், சில சங்க இலக்கியங்களுக்கு விளக்க உரைகளையும் எழுதி வந்துள்ளார்.

மேலும், சமயம், இசை தொடர்பான பிறநூல் செய்திகள் தெரிந்த வல்லவர்களைக் கண்டு கேட்டு அறிந்து உரைகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டார். "தமிழ்ப்பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு நலத்தைப் பேணாமையில் பக்கவாதம், மூச்சுத்திணறல் முதலிய நோய்களால் துன்புற்ற பொ.வே.சோ. 1972-ல் திசம்பர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உணர்வற்ற நிலையில் இருந்த பொ.வே.சோ, 1972 ஜனவரி மாதம் இயற்கை எய்தினார் என அறிகின்றோம்.(ஆ.மணி, குறுந்தொகை உரைநெறி, ப.76) இதில் 1972 ஜனவரி என்பது தவறு. 1973 என்று வந்திருக்க வேண்டும். இவை அச்சுப்பிழையாக இருக்கலாம்.

குறுந்தொகை - பதிப்பு :

குறுந்தொகையைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1955-ல் பொ.வே.சோ உரையோடு வெளியிட்டது. குறுந்தொகைக்கு ஏற்கனவே விரிவான உரை இருக்கும் செய்தியையும், இப்புதியவுரை மாணவருக்கும் அறிஞருக்கும் பொருந்தும் விரிவும் சுருக்கமும் இன்றி அளவாக அமைந்துள்ளது என்ற செய்தியையும் 'பதிப்புரை' கூறுகின்றது. இதில் விரிந்த உரை எனச் சுட்டப்பெறுவது உ.வே.சோ உரையாக இருக்கலாம் என்பது நமது கருதுகோள்.

பொ.வே.சோ. முந்தைய உரையை இன்னார் உரையென்று தெளிவாகச் சுட்டிலிருக்கலாம். அவ்வாறு சுட்டாததால் இலக்கிய வரலாற்றிலும், பதிப்பு வரலாற்றிலும் பல குழப்பங்கள் நிகழும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. பொ.வே.சோ. எழுதிய 'அணிந்துரை' குறுந்தொகை வரலாறு, பாடுபொருள், பாடத்திறம், சொல்லமைதி, உவமையமைதி, நகைச்சுவை, வாலாற்றுக் குறிப்புக்கள், கற்பதற்குரியோர், நூற்பயன் ஆகிய செய்திகளை விளக்குகின்றது.

பாடிய சான்றோர் என்ற தலைப்பில் புலவர் பெயர்களையும் அவர்கள் பாடிய குறுந்தொகைப்பாட்டு எண்களையும் சுட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து மூலமும் உரையும் அமைந்துள்ளன. பதிப்பின் இறுதியில் 'செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை அருஞ்சொற்பொருள் அகரவரிசையில் சொல், பொருள், பாட்டெண் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. பொ.வே.சோ.வின் பதிப்பில் சுவடிகள் பயன்படுத்தப் பெற்றதாகப் பதிப்புரையிலோ, அணிந்துரையிலோ எந்தக் குறிப்பும் இல்லை. தி.சௌ.அ. உ.வே.சா, ரா.இரா ஆகியோரின் பதிப்புக்களை ஆராய்ந்து பொருட்சிறப்புடையதாக தாம் கருதும் பாடங்களைப் பதிப்பித்துள்ளார். பெரும்பாலான இடங்களில் உவேசா கொண்ட பாடங்களைப் பின்பற்றி உள்ளார். பொ.வே.சோ. அவர்கள் குறுந்தொகையைப் பின்வரும் உரைத்தன்மையில் பதிப்பித்துள்ளார். 1. கூற்று, 2. துறையும் துறை விளக்கமும், 3. திரண்டபொருள், 4. மூலபாடம், 5. புலவர் பெயர், 6. பதவுரை, 7. விளக்க உரை ஆகிய தன்மையில் பதிப்பித்துள்ளார். மறுபதிப்பு 1961. கழகத்தின் 783-ஆம் வெளியீடாக பெருமழைப்புலவர் திரு. பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரையுடன் வெளியிடப்பட்டுள்ளன.

முனைவர் ஆ.மணியின் குறுந்தொகை, உரைநெறிகள் (2011) :

'குறுந்தொகை உரைநெறிகள்' எனும் இந்நூல் 304 பக்கங்களைக் கொண்டது. தமிழன்னை ஆய்வகத்தின் வெளியீடாக வந்துள்ளது. இதன் முதற்பதிப்பு மே 2011 இந்நூல் ஓர் ஆராய்ச்சி நூலாகும். இதில் முன்னுரை, அணிந்துரை, பதிப்புரை, நெஞ்சின் நிகழ்வுரை சுருக்கக் குறியீட்டு விளக்கம் குறுந்தொகை உரைகளின் தோற்றமும் வளர்ச்சியும், தி. சௌ. அரங்கனார் உரைநெறிகள், உவே.சா.வின் உரைநெறிகள், ரா.இராகவையங்கார் உரைநெறிகள், உரைகள் ஒப்பீடும் மதிப்பீடும், துணை நூற்பட்டியல், மேலாய்வுக் களங்கள், பின்னிணைப்பு-1 (தி.சௌ.அ. பதிப்புக்கு உதவிய கொடையாளர் பட்டியல்), பின்னிணைப்பு-2 (குறுந்தொகைப் பதிப்பு அட்டவணை), பின்னிணைப்பு-3 (தி.சௌ.அ. பதிப்பு (1915) முகப்பு) பின்னிணைப்பு-4 பதிப்பு (1937) (முகப்பு), பின்னிணைப்பு-5 (குறுந்தொகைத் துறைசொல் விளக்க அகராதி), பின்னிணைப்பு-6 ( ரா.இரா. புதிய பாடங்கொண்ட இடங்கள்), பின்னிணைப்பு-7 (குறுந்தொகை உரைநெறிகள் வகைப்பாட்டு அட்டவணை ஆகியன இடம்பெற்றுள்ளன.

சக்திதாசன் சுப்பிரமணியன்-பாரதி பதிப்பு (1958) :

குறுந்தொகைக் காட்சிகள் (மூலமும் விளக்கமும்) எனும் 1958-ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. இந்நூல் முன்னுரை, பதிப்புரை, பொருளடக்கம், குறிஞ்சித்தொகை, பாலைத்தொகை, மருதத்தொகை, நெய்தல் தொகை, விளக்கக் குறிப்புகள், பாடிய புலவர்கள், பாடப்பெற்ற புலவர்கள், பாடப்பெற்ற மலைகள், ஊர்வன, நடப்பன, பறப்பன, மலர்கள், செடிகள், மரங்கள், அக வாழ்வும் ஆனந்தமும், குறுந்தொகை என்பது என்ன? பாடற்முதற்குறிப்பு அகராதி, அருஞ்சொல் அகராதி என 400 பக்கங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. பாடல்களின் வைப்பு முறையிலும், புலவர் பெயர் விளக்கத்தின் போது உ.வே.சாவிடமிருந்து மாறுபட்டே செல்கிறார். மறுபதிப்பு 1977-ல் வெளிவந்தது.

ப.மருதநாயகம்-குறுந்தொகை முதற்பாடல் பன்முக ஆய்வுகள் :

இந்நூலாசிரியர் ஒரு பாடலை 9 வகையான அணுகுமுறையில் ஆராய்ச்சி செய்துள்ளார். அவையாவன அகமா? புறமா? கூற்றெச்சமா? குறிப்பெச்சமா? கையுறை மறுத்தலா? கடவுள் வாழ்த்தா? குருதிப்பூவின் குலைக் காந்தட்டே செங்களம் படக்கொன்று கவிதையும் பொருளும், காந்தள் என்னும் கையுறை வாசிப்பும் இலக்கிய வகையும், செங்கோலம்பும், குருதிக்காந்தளும், கதைக்குள் ஊடாடும் கவித்துவம். தமிழ்ப்பனுவல் மரபில் குறுந்தொகை முதற்பாடல் என்பதனடிப்படையில் ஆராய்ந்துள்ளார்கள்.

சாமி சிதம்பரனார் இலக்கிய நிலையைப் பதிப்பு (1983) :

இலக்கிய நிலையத்தின் மூலம் 1983-ஆம் ஆண்டு குறுந்தொகையை உரையுடன் வெளியீட்டுள்ளார். சாமிசிதம்பரனார் குறுந்தொகைப் பெருஞ்செல்வம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி நூலாக இதனை வெளியிட முற்பட்ட போது, இவர் பதிப்பில் பல இடங்களில் பதிப்பு நெறிகளைத் தவறவிட்டமையைக் காண முடிகின்றது. குறிப்பாகக் கூற்று வரிசையில் பல இடங்களில் தடுமாறும் ஆசிரியர் திணைகளைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்திய இடம் வேறுபடுகின்றது. பாடலின் மையக்கருத்தைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார்.

இவ்வாறே 400 பாடல்களுக்கும் தலைப்பிட்டே பதிப்பித்துள்ளார். எனினும் 41 பாடல்களுக்கான விளக்கம் நூலில் இல்லாமையால் அதைத் தவிர ஏனையப் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அணிந்துரையில் சு.செல்லப்பா குறிப்பிடுகின்றார். "இந்நூலில் 41 பாடல்களுக்கு உரை இல்லை பேராசிரியர் எழுதாத 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரைக் கண்டார். அதே போல் சாமி சிதம்பரனார் உரையில் விடுபட்ட 41 பாடல்களுக்கும் தக்காரைக் கொண்டு அவர் போக்கிலேயே உரைக் கண்டு அடுத்த பதிப்பில் சேர்க்க வேண்டுமென்பது என் விழைவு" (சாமி சிதம்பரனார் (உ.ஆ), குறுந்தொகைப் பெருஞ்செல்வம், சு.செல்லப்பன் அணிந்துரை) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் பாட்டு எண், பாட்டின் பொருள், பதவுரை, கருத்து, விளக்கம் என்ற முறைகளில் பதிப்பித்துள்ளார். நூலின் போக்கு, எழுந்த சூழ்நிலை, அதற்கான விளக்கம் ஆகியன கொடுத்துள்ள சாமி சிதம்பரனார் பாடலில் காணப்படும் முக்கியத் தொடர்களையும், கருத்துக்களையும் விளக்கியுள்ளார். செறிவுரைகள் எனும் தலைப்பின் கீழ் பல கருத்துக்களைக் கூறியுள்ளார். (21-கருத்துக்களைப் பாடலின் வழி) இதே போல் அரிய செய்தி என்ற தலைப்பின் கீழ் (24-கருத்துக்களை பாடல் வழி) கூறியுள்ளார். உவமைகளைக் கூறுமிடத்தில் - உவமை வரும் பாடலடிகளையும் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்புக் கொடுத்துள்ள சாமி சிதம்பானார் 400 தலைப்புகளில் குறுந்தொகைப் பெருஞ்செல்வம் என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.

ஒட்டு மொத்தமாக நோக்குகையில் இப்பதிப்பைப் பொதுமக்கள் பதிப்பு என்றே கருதலாம். சாமி சிதம்பரனார் உரையில் உ.வே.சாவினை, 'அய்யர் அவர்களின் பதிப்பால் குறுந்தொகை முன்னிருந்ததை விடப் பன்மடங்கு மதிப்பைப் பெற்று விட்டது. அவர் எழுதியுள்ள ஆராய்ச்சி முன்னுரை அருமையானது'⁵ (சாமி சிதம்பரனார் (உ.ஆ) குறுந்தொகைப் பெருஞ்செல்வம், முன்னுரை, ப.IX) என்று பாராட்டும் பண்பு சாமி சிதம்பானாரிடம் இருந்ததை இவர் உரைப்பதிப்பில் காணமுடிகிறது.

மு.சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப்பதிப்பு (1985) :

மு. சண்முகம் பிள்ளை அவர்கள் தஞ்சைப் பல்கலைக்கழக ஓலைச்சுவடியியல் துறையில், துறைத் தலைவராக இருந்தார். இவரெழுதிய குறுந்தொகையுரை இப்பல்கலைக்கழகத்தால் 1985-ல் வெளியிடப்பெற்றது. இதன் மறுபதிப்பு 1994-ல் வெளிவந்தது. வரையறை செய்த பாடங்களுடனும், தற்கால ஆராய்ச்சி முறைகளுடனும் சிறந்த பதிப்புகள் இனிமேல்தான் வெளிவருதல் வேண்டும் என்ற வையாபுரிப்பிள்ளையின் கருத்தையுட்கொண்டு இக்குறுந்தொகை ஆய்வுப்பாட நுண்பதிப்பு வெளிவருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பதிப்பின் சிறப்பு :

அனைவரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் வகையில் சீர்பிரித்துப் பாடல் பதிப்பித்துள்ளமையும், எளிய வரையரையையும் கொண்டது இப்பதிப்பு. சான்றாக, 266-ஆம் பாடலில் ஓரடி விடுபட்டுள்ளதை தி. சௌ.அ. சுட்டுகின்றார். வையாபுரிப் பிள்ளை கண்டறிந்து இணைத்துத் தந்துள்ளார். (சங்க இலக்கியப் பதிப்பில்) மு. சண்முகம் பிள்ளை சுவடியில் இருப்பது கண்டு இணைத்துள்ளார். (1994:29)

இப்பதிப்புக்கு முன்னர் வெளிவந்த மார்ரே இராசம், சாமி சிதம்பரனார் ஆகியோரின் குறுந்தொகைப் பதிப்புகளில் அவ்வடி பாடமாகத் கொள்ளப் பெற்றமையும், உ.வே.சா பொ.வே.சோ. ஆகியோர் பதிப்புகளுள் அவ்வடியோ, அவ்வடி பற்றிய குறிப்போ இடம் பெறாமையும் இங்கு நினையத்தகும்.

மு.ரா. பெருமாள் முதலியார் சொற்களில் இனிய குறுந்தொகை எனும் உரைநூல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக 1985-ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. இதில் காணிக்கை, அணிந்துரை, முன்னுரை, தமிழ் வாழ்த்து, குறுந்தொகை பழம்பாடல், புதுப்பாடல், செய்யுள் முதற் குறிப்பு அகராதி, பிழைத்திருத்தம் எனும் கூறுகள் காணப்படுகின்றன.

முனைவர். மனோன்மணி சண்முகதாஸ் (2000- உ.த.ஆ.நி.வெளியீடு)

'குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு' எனும் இந்நூல் 384 பக்கங்களைக் கொண்டு முதற்பதிப்பாக 2000-ல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக வந்தது.

இந்நூல் ஆறு இயல்களைக் கொண்டிருக்கின்றது. அதாவது ஆய்வு வரலாறும் சிக்கல்களும், இலக்கிய அகப்பாடல்களின் வரையறை, குறுந்தொகைப் பாடல்களின் தன்மையும் அமைப்பும், சங்க இலக்கிய அகப்பாடல்களின் உரைகள், குறுந்தொகையின் உரைப் பொருத்தப்பாடு நுண்ணாய்வு, சங்க அகப்பாடல்களுக்கான புதிய உரை, தொகுப்புரை, நூல் விவரப்பட்டியல் பின்னிணைப்பு எனும் பகுதிகளை உட்கொண்டதாக இந்நூல் விளங்குகிறது.

உரைத்தன்மை குறுந்தொகைப் பாடல்களுக்கு இவருடைய உரை நுட்பமானதாகவும், செறிவானதாகவும் காணப்படுகின்றது. அதாவது, பாடல்களின் தோற்றக் காலமும், தொகுப்பு நிலையும், செய்யுட்களின் அமைப்பு இலக்கண நிலை, தொடர் நிலைகளின் பயன்பாடு, கூற்று நிலைகளின் அமைப்பும் வகுப்பும், செய்யுள் பொருளமைதி, மரபுநிலை வளர்ச்சி, உரை முரண்பாடுகள், உரை முரண்பாட்டு எடுத்துக்காட்டுகளின் விளக்கம், தொடர்நிலை, தனிச்சொல்நிலை, திரிபு நிலை, உரை வேறுபாட்டின் இயல்பு நிலைகள் அதாவது பாடவேறுபாடு, கால வேறுபாடு, மரபு நிலைக் காப்பு, மொழி வளர்ச்சியும் உரைகளின் இயைபின்மையும் போன்ற கூறுகளின் அடிப்படையில் இவர் உரை அமைந்துள்ளது.

குறுந்தொகைக்கு இதுவரை 15-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க பதிப்புகள் வந்துள்ளன. உரை என்பதே மூலப் பாடப் பொருளை எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகப் பிற்காலத்தில் வந்தோர் எழுதிய விளக்கம் எனலாம். இருட்டறையில் செல்வான் ஒருவனுக்கு கைவிளக்குப் பயன்படுமாறு போல பழைய நூல்களைப் படிக்க முயல்வோருக்கு இவ்வுரைகள் பெரிதும் உதவும். கவிஞர் சக்தி அவர்களின் உரை இயல்புகளை சில சான்றுகளின் வழிக் காண்பது பொருந்தும். 'தோழி கையுறை மறுத்தது' எனும் துறைக் குறிப்புடைய குறிஞ்சித்திணை முதற் பாடலுரையில் சொற்கிடந்தவாரே முதல் விளக்கமளித்துள்ளார்.

கல்வியியல் ஆய்வுக் கட்டுரைக்கேற்ற ஆய்வு ஆழத்துடன் கூடிய முடிவுரை கீழே தரப்பட்டுள்ளது.

முடிவுரை :

இக்கட்டுரையின் வழி, குறுந்தொகைக்கு வெளிவந்த பல்வேறு பதிப்புகள் வெறும் மறுபதிப்புகளாக அல்லாமல், காலந்தோறும் புதிய உரைநெறி பாடவேறுபாடு, விளக்கமுறை மற்றும் ஆய்வுக் கண்ணோட்டங்களைமுன் வைத்துள்ளன என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு பதிப்பாசிரியரும் தமக்குக் கிடைத்த சுவடிகள், முன்னைய பதிப்புகள் மற்றும் இலக்கண மரபுகளை ஒப்புநோக்கி, குறுந்தொகையின் மூலப்பாடத்தைச் செம்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ரா.இராகவையங்கார் பொ.வே. சோமசுந்தரனார், சாமி சிதம்பரனார், மு. சண்முகம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களின் பதிப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமான ஆய்வுமுறையையும் உரைநெறியையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான பதிப்புகள் பிற்கால் ஆய்வாளர்களுக்கு நம்பகமான அடிப்படை ஆதாரங்களாக விளங்குகின்றன. மேலும், பதிப்பாசிரியர்களின் கருத்து வேறுபாடுகள், பாடத் தேர்வு முறைகள் மற்றும் உரை விளக்கங்களில் காணப்படும் மாற்றங்கள், சங்க இலக்கியப் பதிப்பியலில் விமர்சனப் பதிப்பு, அணுகுமுறையின் தேவையை வலியுறுத்துகின்றன. இதன் மூலம் குறுந்தொகைத் தொடர்பான ஆய்வுகள் இன்னும் விரிவடைய வேண்டிய துறையாக இருப்பதும், சுவடிகளை அடிப்படையாகக் கொண்ட புதிய ஒப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் வெளிப்படுகின்றன.

எனவே, குறுந்தொகைப் பதிப்பு வரலாறு என்பது நூல் வெளியீடுகளின் வரிசையைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் பதிப்பியல், உரையியல் மற்றும் சங்க இலக்கிய ஆய்வின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தும் அறிவியல் ஆவணமாகும் என்பதே இவ்வாய்வின் முக்கிய முடிவாகும். இவ்வாய்வு, எதிர்காலத்தில் குறுந்தொகைக்கான செம்பதிப்பு, டிஜிட்டல் பதிப்பு மற்றும் உரைமரபு ஒப்பாய்வுகளுக்கான அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் :

  1. அரங்கசாமி தி. சௌ (உரை.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும் (முதல் உரைநூல்), முல்லை நிலையம் 9. பாரதிநகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17, மறு பதிப்பு-2008.
  2. இராகவையங்கார். ரா (உரை. ஆ.). குறுந்தொகை விளக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு- 1993.
  3. சண்முகம்பிள்னை. மு.(பதி. ஆ.), குறுந்தொகை மூலமும் உரையும் (பல்வகை ஆய்வுப் பகுதிகளுடன்), தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு, தஞ்சாவூர். முதற்பதிப்பு -1985.
  4. சாமிநாதைய்யர் உ.வே (உரை . ஆ) குறுந்தொகை மூலமும் உரையும் (ஆராய்ச்சி பதிப்பு), உவே.சா நூல் நிலையம், கடற்கரை சாலை, பெசன்ட் நகர், சென்னை. மறுபதிப்பு-2009
  5. சோமசுந்தரனார் பொ. வே. (உரை. ஆ) குறுந்தொகை மூலமும் உரையும், கழகம் வெளியீடு., டி.டி.கே.சாலை, சென்னை- 18. மறுபதிப்பு -2007.
  6. சிதம்பரனார், சாமி (உரை ஆ). குறுத்தொகை பெருஞ்செலவம், இலக்கிய நிலையம், சௌராஷ்டிரா நகர், 7-வது தெரு, சென்னை -94. முதற்பதிப்பு 1983.
  7. மணி ஆ.குறுந்தொகைத் திறனுரைகள், கங்காராணி பதிப்பகம், 26/11. பஜார் சாலை (தரைத்தளம்) சைதாப்பேட்டை சென்னை -15. முதற்பதிப்பு 2009.
  8. மணி ஆ, குறுந்தொகை உரைநெறிகள், தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி - 605 009, முதற்பதிப்பு 2011
  9. ஜானகி, இரா., (தொகு. ஆ) சங்க இலக்கியப் பதிப்புரைகள் (முதற் பதிப்புகள் மட்டும்) பாரதி புத்தகாலயா வெளியீடு, சென்னை. மறுபதிப்பு -2011