மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை பிச்சையிட்ட காதையில் சாதுவனைப் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. சாதுவனுக்கும் நாகர் தலைவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

துயில் நீங்கிய சாதுவன்

ஆதிரையின் நிலை இங்கு இப்படியிருக்க அவள் கணவன் சாதுவன், கடற்கரையில் மிக உயர்ந்த மலையடிவாரத்திலுள்ள ஒரு மர நிழலை வந்து அடைந்தான். மேகங்களையுடைய பெரிய கடலில் சிக்கி வருந்திய துன்பம் மிகுந்து, இறந்தவனைப் போல உறக்கம் கொண்டான். அப்போது அச்சத்தினைத் தரும் அம் மலையில் வாழும் நக்க சாரணர் இனிமை இல்லாதவராய் அங்கு வந்தனர். சாதுவனின் அருகில் சென்று, 'இவன் மிகவும் வருந்தியுள்ளான். தனியாக வந்துள்ளான். இரங்கத்தக்க நிலையில் இருக்கின்றான். புலால் பொதிந்த இவனது உடம்பு நமக்கு உணவாகும்' என்று கருதி அவனை எழுப்பினர்

குருவிடம் செல்லுதல்

சாதுவன் நாகரின் மொழியை ஐயமறக் கற்றவன். ஆதலின், அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசினான். கொடுந்தொழிலை உடைய நாகர் சற்றுத் தள்ளி ஒதுங்கி நின்று வணங்கி அவனுடன் பேசலாயினர். 'மிக்க வலிமை உடையவனே, கேட்பாயாக! இங்கு எங்களுடைய குரு இருக்கிறார். அவரிடம் செல்வோம் வருவாயாக!' என்று கூறினர். அவனும் அவர்களுடைய குருவைக் காண அவர்களுடன் சென்றான். கள்ளைக் காய்ச்சும் பானைகளும் மிகுதியான புலால் நாற்றமும் வெண்மையான உயர்ந்த எலும்புத் துண்டுகளும் கலந்துள்ள ஓர் இடத்தில், ஆண் கரடி தன் பெண் கரடியுடன் இருந்தாற்போல அந்தக் குருமகன் தன் மனைவியுடன் இருந்தான். சாதுவன் தன் பேச்சுத் திறத்தால் அவனைக் கவர்ந்தான். அவனது அன்புக்குரியவனானான். கிளைகள் ஓங்கிய ஒரு மரத்தின் நிழலில் அந்தக் குருமகன் அருகில் சென்று அமர்ந்தான்.

குருமகன் உபசரிப்பு

நாகர் குருமகன் சாதுவனை நோக்கி, "நீ இங்கு வரக் காரணம் என்ன?" என வினவினான். சாதுவன் அவனுக்குத் தான் அலை கடலில் பட்ட துன்பங்களை எடுத்துரைத்தான். குருமகன் தன் மக்களைப் பார்த்து, "அலைகடலில் துன்புற்ற இவன் உணவின்றி வருந்தியிருக்கிறான். நம்மால் இரக்கம் காட்டத் தக்கவன். ஆதலில், வாருங்கள் மக்களே! இந்த நம்பிக்கு இளமை பொருந்திய ஒரு பெண்ணைக் கொடுத்து, விருப்பம் தரும் கள்ளையும் புலாலையும் வேண்டுமளவு கொடுங்கள்!" என்றான்.

மறுப்பும் திகைப்பும

குருமகனின் உரையைக் கேட்ட சாதுவன், அதிர்ச்சியுற்று "கொடுமையான சொற்களைக் கேட்டேன். அவற்றை வேண்டேன்!" என்றான். "பெண்டிரும் உணவும் இல்லையானால் மக்களுக்கு இவ்வுலகத்தில் அடையக்கூடிய பயன் வேறேதேனும் உண்டோ? உண்டெனில் நாங்களும் அறியுமாறு சொல்வாயாக!" என்று சினத்துடன் கூறினான். 'கூறுக' என மீண்டும் அதட்டினான்.

சாதுவனின் அற உரை

சாதுவன், "அறிவை மயக்கும் கள்ளினையும் நிலையற்ற உயிர்களைக் கொல்லுதலையும் கலக்கமற்ற அறிவினையுடையோர் விலக்கினர். பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போன்றாகும். 'நல்லறங்களைச் செய்கின்றவர்கள் இன்பம் எய்துதற்கு அரிய மேலுலகங்களை அடைதலும் தீமைகளைச் செய்கின்றவர்கள் தாங்கற்கரிய துன்பத்தைத் தரும் நரகங்களை அடைதலும் உண்மை! ஏன உணர்தலால் மன வலிமை மிக்க அறிஞர்கள் அவற்றை நீக்கினர்! இவற்றை நீ அறிக" என்றான்.

எப்படிச் சேரும்?

'உடலை அதனைக் கேட்ட குருமகன் பெருஞ்சிரிப்பு உடையவனாய், விட்டுப் பிரிகின்ற உயிரானது வேறொரு வடிவத்தினை மேற்கொண்டு, பிறிதோர் இடம் சென்று புகும்' எனக்கூறினாய். அவ் உயிர் எப்படிச் சென்று புகும்? அத் திறத்தினை விளக்கமாகக் கூறுக?" என்றான்.

யாவரும் அறிவர்

குருமகன் உரைகேட்ட சாதுவன், “சினம் கொள்ளாது இதனைக் கேட்பாயாக! உயிரானது இருக்கும்போது உடல் தன்னகத்தே இன்ப துன்பங்களை உணரும். அத்தகைய உடல், உயிரானது தன்னை விட்டுப் பிரிந்தால் வெட்டித் தீயில் இட்டாலும் தான் ஒன்றும் உணராது, எனவே, அவ் உடம்பிலிருந்து சென்றது ஒன்று உண்டு என்பதனை நீ அறிவாயாக! அப்படிச் சென்ற உயிருக்கு ஒரு புகும் இடம் உண்டு என்பதனை நான் மட்டுமன்றி யாவரும் அறிவர். உடம்பு இவ்விடத்தில் இருக்க, உயிர் பல காவத தூரம் கடந்து செல்லுதலைக் கனவிடத்தும் காண்பாய்! அவ்வாறே பிரிந்த உயிர் தன் வினைப் பயனை நுகர்தற்குரிய உடலிலே புகும் என்பதனை நீ தெளிவாக அறிவாயாக!" என்றான்.

எமக்குரிய அறம் யாது?

சாதுவனின் உரையினைக் கேட்ட குருமகன், சாதுவனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். பின், "கள்ளையும் புலாலையும் கைவிட்டால் இந்த உடம்பினுள் தங்கியிருக்கும் உயிரைப் பாதுகாக்கும் வகை அறியேன். வரையறை செய்யப்பட்ட வாழ்நாள் வரை, இறப்பு வரும் வரை எமக்கு ஏற்ற நல்ல அறங்களை எடுத்துக்கூறுக" என்றான்.

சாதுவன் உரைத்த அற வழி

சாதுவன் மகிழ்ந்து, "நன்று உரைத்தாய். இனி நல்ல வழியிலே செல்வாய். உனக்குப் பொருத்தமான அறத்தினைக் கூறுவேன். உடைந்த மரக்கலத்திலிருந்து மக்கள் தப்பி இங்கு வந்தால், அவர்களைக் கொல்லும் தொழிலைக் கைவிட்டு, அவர்களது அரிய உயிரைக் காப்பாற்றுக. முதுமையுற்று இறக்கும் விலங்குளைத் தவிர, பிற எவ்வுயிரிடத்தும் கொலைத் தொழிலை விலக்குவாயாக!" என்றான்.

இவ் அறம் செய்வோம். ஏற்க இப்பரிசு!

அதனைச் செவி ஏற்ற நாகர் தலைவன், "இந்த அறம் எங்களுக்குப் பொருத்தமானதே! இதனை நாங்கள் செய்வோம். உனக்கு ஏற்ற அரிய பொருள்களைக் கொள்வாயாக! முன்பெல்லாம் மரக்கலம் கவிழ்ந்தால் தப்பி வந்த மக்களை உண்டோம். அவர்களுடைய மிக்க பொருள்களே இவை. சந்தன மரக் கட்டைகள், மெல்லிய ஆடைகள், சிறந்த பொருட் குவியல்கள் ஆகிய இவற்றை எல்லாம் கொள்க" என்று கூறினான்.

ஊர் திரும்பித் தானம் செய்தான்

சாதுவன் அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலத்தில் ஏறி இப் புகார் நகரை அடைந்தான். இந்தக் கற்புடைய செல்வி ஆதிரையுடன் வாழந்து தன் மனையிடத்தே நல்ல பல தானங்களையும் செய்தான்.