Article no : NPIJT030826
ஆய்வுச் சுருக்கம் :
எஸ். இராமகிருஷ்ணனின் படைப்புகள் சமூகம் சார்ந்த யதார்த்தங்களை மிக ஆழமாகக் கூறும் தன்மை உடையது. இவரின் படைப்பில் உறுபசி மற்றும் இடக்கை ஆகிய இரண்டு புதினங்களும் மனித வாழ்வில் நிகழும் சமூக சிக்கல்களை ஒருபகுதியாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரை இவ்விரு புதினங்களில் காணப்படும சமூகச் சிக்கல்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கட்டுரையில் ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலை, தீண்டாமைக் கொடுமை, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, வறுமை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகளை எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகளில் இருந்து எடுத்து வலுவாக எடுத்துரைக்கப்படுகின்றன. இந்தச் சமூகத்தில் நிகழும் அவலங்கள் வெறும் பேசு பொருளாக மட்டுமின்றி மனிதநேயம், சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் சமூக நீதியை வெளிப்படுத்தும் வகையில் படைப்பாளர் கதைக்களத்தைக் கையாண்டுள்ளார்.
ABSTRACT :
S. Ramakrishnan’s works possess the unique quality of deeply portraying social realities. Among his creations, the novels Urupasi and Idakkal are crafted around the social problems that occur in human life. This article aims to explore the social issues depicted in these two novels.
In this study, the plight of oppressed women, the cruelties of untouchability. the negligence of officials, poverty and unemployment are powerfully highlighted through S. Ramakrishnan' s works. These social sufferings are not presented merely as subjects of discussion but are woven into the narrative to express humanism, equality, women,s rights and social justice
Furthermore, S. Ramakrishnan novels conclude the assertion that literature has the power to bring about significant social change. By linking an individual's life circumstances with social events, his works emphasize the transformation of the future society into one filled with equality. This is the ultimate finding of the study.
திரவுச் சொற்கள் :
தீண்டாமை, வேலையின்மை, வறுமை, தொன்மை, தொழில்நுட்பம் , சிந்தனை.
KEY :
UNTOUCHABILITY, UNEMPLOYMENT, POVERTY, THOUGHT, TECHNOLOGY, LITERATURE, ANTIQUITY.
முன்னுரை :
நவீன கால இலக்கிய எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள். இவர் ஒரு உலகம் சுற்றும் எழுத்தாளர். இவர் கண்டு, கேட்ட, உற்றாய்ந்து செயலாற்றி கண்டறிந்த தேடல்களின் விளைவுகளே படைப்புகளாக உருவாகின்றன. இக்கட்டுரைக்காக எடுத்துக்கொண்ட உறுபசி & இடக்கை ஆகிய இரண்டு புதினங்களும் இன்றைய சூழலில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையைச் செதுக்கிக் கொள்ள தேவையான கருத்துகள் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இப்புதினங்களில் மனிதனின் வறுமை நிலை, வேலையின்னம, தீண்டாமை கொடுமைகள், பெண்களின் நிலை, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு என்று பல கோணங்களில் இப்புதினம் சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் நிறுத்துகின்றன. இது போன்ற படைப்புகளில் மனிதர்களின் நிகழ்காலம் மற்றும் இறந்தகால வாழ்க்கை முறையினைக் கொண்டு உருவாக்கப்படுவதால் எதிர்கால மனிதர்கள் தங்களின் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொள்ள துணைப் புரிகின்றன. பெருவாரியான நவீன கால இலக்கியங்கள் சமூகம் சார்ந்த சிந்தனைகள் நிறைந்த கருத்துக்களை வெளிக்கொணரும் வகையிலும் மற்றும் மனித வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் வகையிலும் அமைகின்றன. இது போன்ற புதினங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை சமூகச் சிந்தனைகள் நிறைந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எஸ். இராமகிருஷ்ணன் அவர்களின் புதினமும் சமூகமும் :
பொதுவாக புதினங்கள் அனைத்தும் சமூகத்தோடு நெருங்கிய தொடர்புடையது. புதினங்கள் மனிதர்களின் வாழ்க்கையை செம்மைபடுத்தும் வண்ணம் மூன்று காலத்தையும் வெளிக்கொணரும் வண்ணமே உருவாக்கப்படுகின்றன. ஆதலால் வாழ்க்கையை மிகச் சிறந்த சிற்பமாக செதுக்கிக் கொள்ள மனிதர்களுக்கு புதினங்கள் துணைப் புரிகின்றன.
“ மனித வாழ்க்கையின் மதிப்புகளை வெளியிடக் கூடிய மிகத் தொன்மையான எண்ணங்கள் இலக்கியத்தில் வளர்ந்திருப்பது நாவலின் பங்கு ஆகும். படைப்பாளரின் உள்ளக் கருத்தை முழுச் சுதந்திரத்தோடு வெளியிடுவதற்கு ஏற்ற சாதனமாக நாவல்கள் அமைகின்றன “.¹
ஆக சமூகம் சார்ந்த கருத்துகளை ஓர் எழுத்தாளன் சுதந்திரமாக எழுத உரிமை இருப்பதால் நவீன கால இலக்கியமான புதினங்கள் சமூகச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் மிக முக்கிய காரணியாக உள்ளது. இந்த வகையில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி & இடக்கை ஆகிய இரண்டு நாவல்களும் சுவாரசியமான கதாப்பாத்திரத்தின் வாயிலாக சமூகச் சிந்தனைகளைத் தன் படைப்பின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். நடப்புக்காலங்களில் தோன்றும் பெருவாரியான புதினங்கள் பலவும் நிகழ்கால நிகழ்வுகளை முன் நிறுத்தி படைக்கப்படுகின்றன. ஆக புதினங்கள் இன்றைய சமுதாயச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
சமுதாயச் சிந்தனைகள் இல்லாமல், சுய நலத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மூடர்களும் இன்றையச் சூழலை உணர்ந்து கொள்ள இது போன்ற புதினங்கள் துணைபுரிகின்றன. இது மட்டும் அல்லாது இது போன்ற நாவல்கள் சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் வல்லமைக் கொண்டவையாக திகழ்கின்றன.
சமூகச் சிந்தனைகள் நிறைந்த புதினங்கள் அனைத்தும் மனிதனின் சமூக வாழ்வியல், நேர்க்கோட்டு வாழ்க்கை , சிக்கலான நூற்பின்னல், தெளிவு, முரண், முற்போக்கு, பிற்போக்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைகின்றன.
பெண்ணியம் :
இன்றையச் சூழலில் பெண்கள் உறுதி கொண்ட மன நிலை உடையவர்களாக இருக்க வேண்டும். எவரும் எளிதில் அவர்களை உடைத்து கலைந்தெரியக்கூடிய பொம்மைகளாக இருக்க கூடாது. சிக்கலான வாழ்க்கைச் சூழலில் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மன உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும். இதனை வெளிக்கொணரும் வண்ணம் உறுபசி புதினத்தில் சம்பத்தின் மனைவி ஜெயந்தி முதிர்கன்னிப் பருவம் எய்தியவளாக இருந்தாலும் பொருந்தாத பாலுறவுகளுக்கு அப்பாற்பட்டவளாக உள்ளாள். ஜெயந்தியிடம் எளிமை, அன்பு, மன்னித்தல் மற்றும் தவறு செய்தோரைக் கண்டு மனம் நொந்து கொள்ளுதல் எனும் பண்புகள் இருந்தன. நிரந்தரப் பணி ஏதுமில்லாமல் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மனம்போனப் போக்கில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த சம்பத்திற்கு மனைவியாகும் சூழல் புரட்சிகர உறுதிப்பாட்டை அவளுக்குத் தந்தது.
“ மனித வாழ்வில் உணர்வுகள் என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் குடிகொண்டிருக்கும். ஆணுக்கு இருக்கும் அதே உணர்வுகள் பெண்ணுக்கும் இருக்கும் “.²
மேற்கண்ட கருத்தை சற்றும் உணராதவன் சம்பத். சம்பத் அர்த்தமற்றவனாகவும், ஜெயந்தியை ஒரு சதை பிண்டம் போல உறுபசிக்கு மட்டும் உட்படுத்தியது போன்றும் கதையில் இடம் பெற்றுள்ளன. ஜெயந்தி பாலியல் கோட்பாடுக்குள் கட்டுண்டவள் ஆவள்.
"பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருங்கிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு “
மேற்கண்ட குறளுக்கு இணங்க சுதந்திர காற்றையே சுவாசிக்க விரும்பினால் ஜெயந்தி. தனது கணவனின் உறுபசி ஏவலுக்கு அடிபணிந்து வாழும் பெண்ணாக புதினத்தில் சூட்டப்பெறுகின்றாள். இத்தகு சூழலில் இன்று பல பெண்கள் வாய்த்திறக்காமல் கைப்பாவையை போல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்தச் சமூதாயத்தில் இத்தகு சூழலை உடைத்து வெளிவர வேண்டும் என்பதே எஸ்.இரா போன்ற எழுத்தாளர்களின் எண்ணம்.
"அன்றிரவு யானை நிலம் அதிர நடந்து செல்வதைப் போல அவள் உடலின் மீது இயங்கிக் கொண்டிருந்தான்... அன்றிரவு ஜெயந்திக்கு உறக்கம் கூடவேயில்லை.
சுட்டுப் பிடிக்கப்பட்ட குருவியைப் புசிப்பது போல் ஒரு பெண்ணை நடத்தும் ஆண்களுக்கும் புரிதல் வேண்டும். பெண்களின் மன நிலைக் குறித்து கூறபோனால் சம்பத்தின் செயல் ஒரு வகையான பாலியல்தான். 21-ஆம் நூற்றாண்டில் நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டு நிற்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகமே அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்திலும் கூட பெண்கள் இது போன்ற இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
தீண்டாமை :
" சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் தலைத்திடும் வையம்
சாதிநூறு சொல்லுவாய்- போபோபோ
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை - சாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பார்
இந்தியாவில் இல்லையே "⁵
என்ற பாரதின் வரிகள் சாதி பிசாசின் பிடரி அடியாக அமைகின்றன. இந்திய நாகரிகத்திலும், பொருளாதரத்திலும் முன்னேற்றம் கண்டிருந்தாலும் இன்னும் சாதி, சமயம் போன்றவற்றால் மனிதத் தன்மையை இழந்து மிருக குணத்துடன் வாழ்ந்து கொண்டு தான் இன்னும் பலர் இருக்கின்றனர். இந்த நிலைமை மாறும் பொழுதுதான் சாதிக்கொடுமைகள் குறையும். இக்கருத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வண்ணன் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் இடக்கை நாவலில் தீண்டாமையை தூமகேது என்னும் கதாப்பாத்திரத்தின் வாயிலாக உணர்த்தியுள்ளார்.
தூமகேது என்னும் சாமர்(சமர்) இனத்தைச் சார்ந்த ஒருவன். இவன் தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரே காரணத்தால் தான் தன் வாழ்நாள் முழுவதும் வெம்பி வேதனை கொள்ளும் அளவிற்கு மேல்சாதி மக்கள் இன்னல்களை அவனுக்கு இழைத்துள்ளனர் என்று எண்ணி மனம் போனப் போக்கில் தன் வாழ்க்கையைக் களித்துள்ளான். தூமகேதுவின் மனைவி பிரசவ வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கும் பொழுது மேல்சாதி மக்களுக்குப் பிரசவம் பார்க்கும் வைத்தியச்சி தனது கொண்ட ஊசியால் ராவின் கருப்பையில் குற்றி சேதப்படுத்தி இரத்தப் போக்கை உண்டக்கி உள்ளார். கீழ்சாதி நாய்களுக்கு எதற்குப் பிள்ளைக் குட்டிகள் என்று கூறி இச்செயலைப் புரிந்துள்ளார். இத்தகு தீண்டாமை என்னும் தரங்கெட்ட செயலால் தீய்ந்து அழிந்து போனது பச்சிளம் உயிர்.
‘ இந்த ஜாதிக்கத்தி தற்கொலைப் பட்டரையில்
தயாரிக்கபட்டதப்பா
இதற்கு இரண்டு வேலை
எதிர்த்தவனை அழிப்பது எடுத்தவனையும் ஒழிப்பது'⁶
இது போன்று தீண்டாமை என்னும் கொடிய விசத்தால் எங்கோ ஒருத்தர் உயிர் நீத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். "சாதி மத மோதல்களற்ற சமுதாயத்தை உருவாக்கி, மனிதனேயத்தை உருவாக்கி, மனிதனேயத்தை வளர்த்து, மானுடத்தை உயர்த்துவதே 21-ஆம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்பாளிகளின் இன்றியமையாக் கடமையாகும்"⁷
இதனை உணர்த்தும் வண்ணமே எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும் தன்னுடைய இடக்கை நாவலில் தீண்டாமைப் பற்றிய விழிப்புணர்வு செய்திகளைப் பதிவாக்கி உள்ளார். தீண்டாமையின் கொடுமைகளால் மனிதன் அனுபவிக்கும் இன்னல்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. இதனைக் கண்ட பின்னும் மாறாத மனிதர்கள், மனிதர்கள் அல்ல.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கு :
அர்த்தமற்ற அதிகாரிகளால் இந்த நாடும் அர்த்தமற்றதாகிப் போகின்றன. சரியான நேரத்தில் கடமையைச் செய்யாதிருத்தல், பணியினை ஒத்தி வைத்தல், கையூட்டு மற்றும் நடு நிலைமை அற்ற அதிகரிகள் என்று மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட அதிகாரிகள் மக்கள் நன்மைக்காக செயல்படுவதில்லை. இதனால் அதிக பாதிப்பினை சந்திப்பது கீழ்த்தட்டு மக்கள் மட்டும். நேர்மை அற்ற அதிகாரிகளின் கையில் சிக்குண்டு இன்னல்களை சந்திக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகம் இந்த நிலையால் வரும் இடர்பாடுகளையும், மக்களின் பெரும் துன்பத்தினையும் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் தனது இடக்கை நாவலில் பதிவு செய்துள்ளார். காலா என்னும் இடத்தில் நீதிக்காக காத்திருந்து தனது காலத்தைக் காலாவிலே கழித்த குற்றவாளிகள் ஏராளம். குற்றம் புரியாமலே தகுந்த விசாரனை இன்றி சிறையில் அடைக்கப்பட்டு மன்னனின் சோம்பேரித்தனத்தால் அவை விசாரிக்காமல் சிறையில் தங்களின் நாட்களைக் கழித்த மனிதர்கள் காலாவில் இருந்தனர்.
“ குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் “⁸
மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவருக்கு தண்டனையளித்து தன் பணியைச் செவ்வனே செய்பவரை ஆட்சியாளன் எனத் திருக்குறள் உரைக்கின்றது. ஆனால் இன்றைய நவீன உலகில் மக்களைக் காக்கும் பதவியில் இருந்தும் நாட்டையும், மக்களையும் காக்க மறந்து போகின்றனர். அது மட்டும் அல்ல, சரியான நேரத்தில் குற்றங்களைக் கண்டறிந்து அதற்கான தண்டனைகளை வழங்கவும் மறந்து போகின்றனர். கட்டுப்பாடு அற்ற சமுதாயமாக வழிவகை செய்கின்றனர். இதனை உணரும் வண்ணமே இடக்கை நாவலில் எஸ்.இராமகிருஷ்ணன் காலாவில் நீதி கிடைக்காமலும, விசாரனை செய்யாமலும் தேங்கிக் கிடக்கும் மக்களின் அவல நிலையை எடுத்துரைத்து உள்ளார். இது போன்ற நிலை மாற வேண்டும் என்பதே பல எழுத்தாளர்களின் எண்ணங்களாக உள்ளது. இதன் வெளிப்பாடே இது போன்ற சமுதாயம் சார்ந்த நாவல்கள்.
வறுமை, வேலையின்மை :
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றையும் தன்னால் உருவாக்கிக் கொள்ள இயலாத நிலையையே வறுமை என்கிறோம். உலகில் உள்ள பல நாடுகளில் மிக முக்கியமாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது மிக முக்கியமான இலக்காக இருந்து வருகின்றது.
“ வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது “⁹
வறுமையின் பிடியில் இருந்து தப்பித்து வாழ்ந்த மக்கள் மிகக் குறைவு. வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் தீயின் வாயில் சிக்கியவர்களுக்கு சமம். இவர்கள் தப்பித்து வாழ வழி மிகக் குறைவு.
"குடுமி புதல்வன் பல்மான் பால்இல் வறுமுலை
சுவைத்தன்ன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின் உல் இல்
வறுங்கலம் திரிந்த, அழக் கண்டு"¹⁰ (புற;பா:160)
சங்க காலம் தொட்டு நவீன காலம் வரை வறுமை என்பது நம்மை நீங்காத காலம். மேற்கண்ட பாடல் வரிகளில் பெருஞ்சித்திரனாரின் வறுமையின் உச்சநிலையானது புலப்படுகின்றது. இதை விடக் கொடும் வறுமையைத் தொழில் நுட்பத்தில் வளர்ந்து நவீன உலகில் வாழும் பொழுதும் நம் மக்கள் அனுபவித்துக் கொண்டு இருகின்றனர். இந்தக் கீழ்நிலை மாறவும், இதற்கான தீர்வினை நாம் சிந்தித்து செயல்படுத்தும் வண்ணமே இடக்கை நாவலில் சம்பத் ஜெயந்தி என்ற இரண்டு கதாபாத்திரத்தைக் கொண்டு இக்கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் எஸ்.இராமகிருஷ்ணன். இவர் இப்புதினத்தில் வறுமையின் கொடுமையைச் சித்தரித்து உள்ளார்.
" வறுமை எவ்வளவு கொடுமை என்பதை ஒவ்வொரு மனிதனும் அவசியம் உணர வேண்டும். வறுமையின் கோரத்தைக் காண்பிக்கும் போது உள்ளம் உருகாதவர்கள் இருக்க முடியாது"¹¹
ஒரு தனி மனிதனின் வறுமைக்கு அடிப்படைக் காரணம் வேலையின்மை. அந்த வேலையின்மை மக்கள் தொகைப் பெருக்கத்தால் உண்டானவை. ஆக இந்தச் சமுதாயத்தில் நமக்கு உண்டாகும் தீங்கு நாம் செய்யும் செயலில் இருந்தே பிறக்கின்றன.
முடிவுரை:
இந்தச் சமுதாயத்தில் மனித வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டுவது இலக்கியம் ஆகும். நவீன இலக்கியங்கள் பொதுவாக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் காலக்கண்ணாடியாகவும், கலங்கரை விளக்கமாகவும் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. இலக்கியங்கள் சமுதாய நிகழ்வுகளை வெளிப்படுத்தக் கூடியவை. தனிமனிதன் குடும்பமாகவும், பல குடும்பங்கள் சேர்ந்து சமுதாயமாகவும் உருவாகின்றன. தனிமனிதர்களின் உள்ளம் சார்ந்த போக்குகள் இச்சமுதாயம் ஒன்றுபட்டு வளர்ச்சி பெறும் வண்ணன் அமைகின்றன.
"மனிதன் மனிதனோடு கலந்து பழகும் வாழ்க்கை, அவன் வாழுகின்ற சமுதாயத்தின் அமைப்பு பற்றி எடுத்துரைப்பது தான் சமூகவியலின் பணியாகும். இப்பணியை மேற்கொள்ளும் சமூகவியல் என்ற சொல் ஆகஸ்ட் காம்டே என்ற அறிஞரால் கி.பி. 1839-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கி.பி.1876-இல் ஐக்கிய அமெரிக்காவிலும், 1889-இல் பிரான்ஸ் நாட்டிலும், 1907 இல் இந்தியாவிலும் அறிமுகமானது. ஆனால் 1939 ஆம் ஆண்டு தான் பம்பாய் பல்கலைக்கழகம் தனிப்பாடமாக நிறுவியது."¹²
ஆக முக்கால சமூக வாழ்க்கைச் சூழலில் பட்டறிந்ததைப் படைப்பாளர்கள் படைப்புகளாகப் படைகின்றனர். தமது வாழ்நாட்களில் கேட்டு அறிந்தவற்றைக் கொண்டு ஒழுங்கமைப்பு செய்து, மிகச் சிறந்த சமுதாயமாக மலர எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் தனது படைப்புகளைக் கொண்டு ஒழுங்கமைப்பு செய்து. மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இவ்வாறான கூறுகளில் எஸ்.இராமகிருஷ்ணனின் உறுபசி & இடக்கை ஆகிய புதினங்களில் சமுதாய சிந்தனைகளைக் கட்டுருவாக்கும் தகவமைப்புகள் இப்புதினங்களில் காணப்படுகின்றன.
பின்னிணைப்பு :
- இரா.தண்டாயுதம் - சமூக நாவல்கள் - பக்கம் - 20-21
- சு.அட்சயா - பெண் படைப்பாளர்கலின் புதினங்களில் உளவியல் - பக்கம் - 144
- குறள் - 58
- எஸ்.இராமகிருஷ்ணன் - உறுபசி - பக்கம் - 40
- பாரதியார்-முரசு-பாடல்-1
- வைரமுத்து-இதனால் சகலமானவர்களுக்கும் - பக்கம் - 111
- https://ta.wikipedia.org/s/1te
- குறள் - 549
- tamilandvedas.com/tag/-வறுமையை ஒழிப்போம்
- புறநானூறு-பாடல்-160
- tamilandvedas.com/tag/- வறுமையை ஒழிப்போம்
- கலையரசி-எஸ்.இராமகிருஷ்ணனின் புதினங்களின் சமுகவியல் சிந்தனை - பக்கம் - 241

0 Comments