ஆய்வாளர் : முனைவர் அ. அப்சர், உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை.
முன்னுரை :
தமிழ் இலக்கிய உலகு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட செழுமையான பரப்பினையுடையது. இசுலாம் தமிழகத்தில் காலூன்றிய காலம்தொட்டு இன்றுவரை இவ்விலக்கியப் பரப்பிற்குத் தம் பணிகளால் அணிசேர்த்த தமிழ் முசுலீம்கள் மிகப்பலர். அவர்கள் தொட்டுத் துலக்காத – தொட்டதால் துலங்காத தமிழ் இலக்கியத் துறையே இல்லை எனலாம். தமிழ் இலக்கியப் பரப்பில் எத்தனை வகைகள் – வடிவங்கள் உள்ளனவோ அத்தனை வகைகளிலும் வடிவங்களிலும் தங்கள் பங்களிப்பினை வழங்கி முத்திரை பதித்தவர்கள் தமிழ்முசுலீம்கள். பல்சந்தமாலை ஆசிரியர் தொடங்கிவைத்த இந்தச் சீரியபணி இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொய்வின்றித் தொடரவே செய்கிறது. அவ்வழி கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் முசுலீம்களின் காப்பிய ஆக்கப் பணியினைக் குறித்துப் பேசுகிறது இக்கட்டுரை.
”காப்பியமென்பது ’காவ்யம்’ எனும் ஆரியச்சொல் திரிந்த மொழி கவியால் செய்யப்படுவது காவியம்”.1 ஒரு சமுதாயத்தின் விருப்பு வெறுப்பு நம்பிக்கை முதலியவற்றை வளர்த்துப் பண்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே; “பாட்டு, காவியம், நாடகம், கதை முதலியன இயற்றித்தரும் புலவர்கள் சட்டம் இயற்றும் ஆட்சியாளரை விடவும் ஆற்றல்மிக்கவர்கள்; தத்துவ ஞானிகளைவிடவும் செல்வாக்கு மிக்கவர்களாய் மனிதர்களின் உள்ளத்தை ஆள்பவர்கள்”2. செல்வாக்குமிக்க, புலத்துறை முற்றிய இத்தகைய புலவர்களின் படைப்புகள் பலவற்றுள்ளும் என்றும் நிலைத்திருக்கும் பெருமை காப்பியத்திற்கே உரிய தனிச்சிறப்பு. ”இது நடையாலும் பொருளாலும் இன்பத்தையும் பயனால் உறுதிப்பொருளையும் பயப்பதுபோல் பிறவகை நூல்கள் பயப்பதில்லை”3.
தனிச்சிறப்பு வாய்ந்த இக்காப்பிய உருவாக்கத்தில் தமிழ் முசுலீம்கள் பலரும் பண்டுதொட்டே முனைப்புடன் ஈடுபட்டு வந்துள்ளனர். அதற்குச் சீரிய எடுத்துக்காட்டாய்த் திகழ்வது “சீறாப்புராணம்” என்பது நாம் அறிந்த ஒன்றே! இருபதாம் நூற்றாண்டும் கூட இசுலாமியத் தமிழ்க்காப்பிய உருவாக்கத்தில் பரந்துபட்ட பங்களிப்பினை ஆற்றியிருக்கிறது. ஏறத்தாழ இருபத்தொரு இக்கால இசுலாமியத் தமிழ்க்காப்பியங்கள் இருப்பதாக ஒரு பட்டியல் கூறுகிறது4. அண்மையில் வெளிவந்த எம்.ஆர்.எம். அப்துற்-றஹீமின் ‘நபிகள் நாயகக் காவியம்’ என்ற நூலையும் சேர்க்க இவ்வெண்ணிக்கை இருபத்திரண்டு ஆகிறது.
சித்திரக்கவி அலமுநூரின் ஞான ஒளிச்சுடர், ‘வள்ளல் நபிகளின் வரலாறு’ பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், ஈரடிக் கண்ணிப்பாக்களில் அமைந்த இந்நூலில், ஆசிரியரின் இந்நோக்கம் விளக்க்ம் பெறவில்லை. காப்பிய இலக்கணம் ஒரு சிறிதும் பெற்றிராத இந்நூலைக் காப்பிய வகையில் சேர்ப்பது பொருந்தாது. மாறாகப் பெருமானாரின் சிறப்பினைப் புகழ்வதையே நோக்கமாகக் கொண்டு பாடப்பட்ட இந்நூலை, ‘பெருமானார் புகழ்ப்பா மாலை’ எனக் கொள்வது பொருந்தும். இதுபோன்றே, அல்லாமா இக்பாலின் ஜாவீதுநாமாவும் காப்பியப் பொருண்மையைப் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்நூலையும் எஞ்சியுள்ள இருபது நூல்களுள், சாரண பாஸ்கரனாரின் யூசுப் ஜுலைகா, கவிஞர் ஜின்னாஹ்வின் பிரளயம் கண்ட பிதா, கவி.கா.மு. ஷெரீபின் பல்கீஸ் நாச்சியார் காப்பியம், அடியற்கை பஷீரின் பொறுமைக்கடல் ஆகிய நான்கும் முறையே யூசுப் நபி, நூஹ் நபி, சுலைமான் நபி, ஐயூப் நபி எனும் நபிமார்கள் வரலாறு கூறுவன. தை.கா. காதர்கனியின் முஸ்தபாவின் கர்பலா களத்தில் இமாம் ஹுசைன், நாயகப்பேரர் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாற்றையும் கூறுவன. இசுலாமியப் பெரியார்களான உவைஸுல் கர்னீ, ஹிந்துல்வலி காஜா முஈனுத்தீன் சிஷ்தி ஆகியோர் இருவரின் வரலாற்றைக் கூறுவனவாகக் கவிஞர் ஜின்னாஹ்வின் தாய்க்கென வாழ்ந்த தனயன், அதிரைத் தாஹாவின் அஜ்மீர் நாயகக் காப்பியம் ஆகியவை திகழ்கின்றன. கவிஞர் ஜின்னாஹ்வின் மற்றொரு நூலான, ”மஹ்ஜபீன் – புனித பூமியிலே – இரட்டைக்காப்பியங்கள் வீரர் சுல்தான் சலாஹூத்தீன் புகழ்பாட, கவிஞர் மூஸாவின் காதல் யாத்திரை, லைலா மஜ்நூன் கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இவையல்லாத பத்து நூல்களும் பெருமானார்ப் புகழ்ப்பாடுவன.இவற்றுள் கவிஞர்.மு. மேத்தாவின் நாயகம் ஒரு காவியம், வலம்புரிஜானின் நாயகம் எங்கள் தாயகம், கவிஞர் அபூஹாஷிமாவின் அண்ணலே யாரசூலுல்லாஹ் எனும் மூன்று நூல்களே இங்கே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இம்மூன்று நூல்களுமே புதுக்கவிதைப் புனைவுகள். பெருமானாரின் வாழ்வைப் பாடும் இவ்விலக்கியங்களில் கவிஞர்களின் நோக்கம் வேறுபட வழியில்லை; வரலாற்று நிகழ்வுகளைப் பாடும் போக்கிலேயே இவை வேறுபடுகின்றன. எனவே, காப்பிய மரபுகளின் வழி இக்காப்பியங்களின் நோக்கும் போக்கும் அமைந்துள்ள திறம் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.
காப்பிய மரபுகள் :
தமிழில், காப்பியங்கள் சங்கமருவிய காலம்தொட்டே தோன்றியிருப்பினும், காப்பியமரபுகளைப் பேசும் இலக்கணங்கள் தண்டியலங்காரத்துக்குப் பின்பே தெளிவாக வரையறுக்கப்பட்டது. காப்பிய இலக்கணத்தைக் குறித்து முழுவதுமாகப் பேசும் நூல் தண்டியலங்காரமே எனினும், தொல்காப்பியத்திலேயே காப்பியம் குறித்த கருத்துகள் பேசப்பட்டுள்ளமை உரையாசிரியர்களின் உரைவழித் தெரியவரும்.
காப்பியம் பொருள்வரையறை :
காப்பியத்தைக் குறிக்க ‘எபிக்’ (EPIC) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, “ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தன்னேரிலாத் தலைவனது சொள்களை அல்லது ஒரு நாட்டின் கடந்தகால வரலாற்றினைக் கூறும் பாடல்பகுதி” எனப் பொருள் கூறுகிறது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி5. மேனாட்டு ஆய்வாளர்கள் இதிகாசத்தைக் குறிக்கவே ‘எபிக்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்திய இலக்கியத் திறனாய்வு நூல்களில் காப்பியங்களைக் குறிக்கவே ‘எபிக்’ (EPIC) என்ற இச்சொல் மிகப் பெரும்பான்மையும் பயன்படுத்தபடுகிறது.
ஒருகதையைப் பாடல் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட பொருள் தொடர்நிலைச் செய்யுளைப் பிற்காலத்தவர் காப்பியம் என்றனர்6. எனினும் கதையும் காப்பியமும் வேறுவேறு. கதை, பொய்ப்பொருள் புணர்த்துக் கூறப்படுவது7. அடியார்க்கு நல்லார் கருத்துப்படி, காப்பியம் என்பது உலகில் உயிருடன் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற தன்னேரிலாத் தலைவன் ஒருவனது வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்து நாடகப்பாங்கில் அமைக்கப்பட்டதொரு இலக்கியவகை எனலாம்.
காப்பிய அமைப்பு :
காப்பியமானது காண்டம், சருக்கம், பரிச்சேதம் போன்ற பிரிவுகளை உடையதாதல் வேண்டும் என்பது காப்பிய மரபு. அபுஹாஷிமாவின் ‘அண்ணலே யாரசூலுல்லாஹ்’ தவிர மற்ற இரு காப்பியங்களும் (நாயகம் ஒரு காவியம் – மு. மேத்தா, நாயகம் எங்கள் தாயகம் – வலம்புரி ஜான்) இத்தகைய அமைப்பினைப் பெற்றிருக்கவில்லை. புதுக்கவிதையால் இயன்ற காப்பியங்களாக இவை இருப்பது, பழையமரபு போற்றப்படாமைக்குக் காரணமாதல் கூடும். எனினும், மற்ற இருகாப்பியங்களைப் போலவே புதுக்கவிதை யாப்பில் அமைந்திருப்பினும், அண்ணல் நபிகளின் மக்காவாழ்க்கை – மதினாவாழ்க்கை என இருபாகங்களைக் கொண்ட அபுஹாஷிமாவின் காப்பியத்தில் இம்மரபு போற்றப்பட்டுள்ளது. காலச்சூழலுக்கு ஏற்ப பழைய காண்டப்பகுப்புமுறையை விடுத்து, பாகம் எனத் தன் பகுப்புக்குப் பெயரிட்டுள்ளார் ஆசிரியர்.
மூன்று காப்பியங்களுமே படலம் போன்ற அமைப்பு முறையைக் கொண்டதாக அமைந்துள்ளன. பெருமானார் வாழ்வில் இடம்பெற்ற இன்றியமையா நிகழ்வுகள் இத்தலைப்புகளால் சுட்டப்படுகின்றன. முகம்மதை வளர்ப்பவர் யார்?8 (மு.மே), அபுதாலிஃப் அரவணைப்பில் அருமைநாயகம்9 (வ.ஜா), அபுதாலிஃப் அரவணைப்பில் அண்ணல்10 (அபூ) எனச் சற்றே வேறுபட்டோ, முகமது – நபியானார்11 (மு.மே), நபிகளார் நாயகம்12 (வ.ஜா), அண்ணல் பெருமான் நபிகள் பெருமான் ஆனார்13 (அபூ) என முழுமையும் ஒன்று போலவோ இத்தலைப்புகள் அமைந்துள்ளன. எனினும் மாறுபட்ட தலைப்புகளே அதிகம். சான்றாக, கதீஜா நாயகியாரின் மறைவை மேத்தா, ‘கதீஜா நாச்சியார் மரணம்’14 என்றும், அபூஹாஷிமா ‘கதீஜா நாயகியார் மறைவு’15 என்று சற்றே நாகரிகமாகவும் குறிக்க, வலம்புரிஜான் இந்நிகழ்வைக் ‘கதீஜா விளக்கு கண்வளர்ந்தது’16 என நனி நாகரிகமாகக் குறிப்பிடுவதைக் கூறலாம். ‘பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்’ எனும் தலைப்பில்,
“ கடிகொள் பொன்னக ரத்தினில் கதிர்கொள்மாளிகையில்
குடிபு குந்தனர் கத்தீஜா எனும்குலக் கொடியே”17
என உமறு, இந்நிகழ்வைத் தம் சீறாக்காப்பியத்தில் சுட்டுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. உயர்ந்த இலக்கியங்களில் அமங்கலச் சொற்கள் இடம்பெறக் கூடா எனும் இத்தகைய இலக்கிய மரபு வலம்புரிஜானின் காப்பியத்தில் போற்றப்பட்டுள்ளது.
”பெருமானாரின் வாழ்வின் சிறப்பு நிகழ்வுகளைக் கூறும் இத்தகைய தலைப்புகளுக்கு இடையில், அந்நிகழ்வினைத் தொடர்ந்து பெருமானார் வாழ்வில் நடந்த வேறுநிகழ்வுகள் சிறு சிறு உட்தலைப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வைப்பு முறையால், சிறப்பு நிகழ்வுகளைக் கூறும் தலைப்புகளின் பொருளமைதி சிறக்கவில்லை. எனவே, இவ்வமைப்பு முறையை நோக்கும்பொழுது, படலம் போன்றதொரு அமைப்பு முறையைத் தங்களின் காப்பியங்களில் புகுத்துவது இவ்வாசிரியர்களின் நோக்கம் இல்லை என்பதும், பெருமானார் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை சிறப்புற எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கம் என்பதும் புலப்படும்.”
யாப்பமைதி :
சங்ககாலத்திற்கு முன் கலிப்பா, பரிபாடல் சிறந்திருந்த நிலைமாறி, சங்ககாலத்தில் ஆசிரியப்பா உச்சம் பெற்றது. நீதி நூற்காலம் வெண்பாவை வரவேற்க, தொடர்ந்து வந்த பக்தி இலக்கிய – காவிய காலங்களோ விருத்தப்பாவிற்கு வெண்சாமரம் வீசின. முதல் காப்பியமாகிய சிலம்பு ஆகிய யாப்பில் அமைந்திருக்க பிற்காலக் காப்பியங்களான கம்பராமாயணம், பெரியபுராணம் போன்றவை விருத்தயாப்பில் அமைந்திருப்பது, சங்ககாலம் தொட்டு காலத்திற்கேற்ப யாப்பு வகையிலேயே இலக்கியங்கள் அமைகின்றன என்பதற்குத் தக்க சான்று. இது புதுக்கவிதை யுகம்; எனவே இக்கால இலக்கியங்கள் புதுக்கவிதை யாப்பில் தோன்றுவது இயல்பு. அவ்வழி, நாயகம் ஒரு காவியம், நாயகம் எங்கள் தாயகம், அண்ணலே யாரசூலுல்லாஹ் எனும் மூன்று நூல்களுமே புதுக்கவிதை யாப்பில் அமைந்துள்ளன.
”அண்ணலாய் மானுடத்தின்
ஆருயிராய் வந்துதித்த
பொன்னொளியைப் பாடப்
புதுக்கவிதை கொண்டுவந்தேன்”18
எனப் புதுக்கவிதை யாப்பில் தன் காப்பியத்தைப் புனைந்ததாக மேத்தா கூறுகிறார்.
”வாழ்க்கை அங்கே
மூர்க்கர்களால்
முன்மொழியப் பட்டது
முரடர்களால்
வழிமொழியப் பட்டது”19
எனப் புதுக்கவிதை யாப்பு ஆங்காங்கே சிறந்திருந்தாலும்,
”உம்முடைய மைத்துனரும் தங்கை யாரும்
ஒருங்கிணைந்தார் முகம்மதுவின் சன்மார்க் கத்தில்
நம்நகத்தை நாம்வளர விட்டு விட்டு
நறுக்குவதோ பிறர்விரலை நியாயம் தானோ?”20
என மரபுக்கவிதை யாப்பே, காப்பிய நெடுகிலும் பரந்து காணப்படுகிறது. மேலும்,
”தூது சென்றவர் வந்தார் - செய்தி
சுற்றத் தாரிடம் தந்தார்
முகமது நல்லவர் என்றார் - புது
மோக நிலையினில் நின்றார்”21
என ஏறத்தாழ 21 இடங்களில் இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ”புதுக்கவிதை, ”மரபுக்கவிதை, இசைப்பாடல் ஆகியவற்றை இணைத்து இக்காப்பியத்தை ‘முக்கவி’த்
தோப்பாக்கியிருக்கிறார் மேத்தா என்பர்22.
எனினும் நான்காவது கவியாக,
”இதயம் தடுமாற இல்லத்தில் நுழைத்ததும்
”போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள்”
என்று நடுககுற் றவராய் நாயகம் உரைத்தார்”23
என வசனகவிதைகளும் இக்காப்பியத்தில் ஆறு இடங்களில் இடம் பெற்றிருக்கக் காணலாம்.
வலம்புரிஜானின் காப்பியம் முழுமையும் புதுக்கவிதை யாப்பிலேயே அமைந்திருப்பினும், கதீஜா நாயகத்தின் மறைவைப் பாடும்பொழுது,
”மண்ணுக்குள் மறைந்து கொண்ட
மாதவைத் தேடித் தேடி
பாத்திமா அழுதார் மற்ற
பிள்ளைகள் அரற்றி னார்கள்
ஆண்டாண்டு புரண்ட போதும்
மறைந்தவர் வாரா ரென்று
அரும்புகள் அறிய மாட்டார்”24
என மரபுக்கவிதை யாப்பும் ஒருசில இடங்களில் இடம்பெற்றிருக்கக் காணலாம். அதுபோன்றே
“ தூக்கம் வருகிறபோது
குழந்தைகளின் கைகளிலிருந்து
பொம்மைகள் நழுவிவிடுமே
அதுபோல் இலைகள்
மரங்களிலிருந்து
சந்தடி இன்றி
மண்ணில் உதிரும்
என்றான் இக்பால்”25
எனச் சில இடங்களில் வசனகவிதையும் இடம்பெற்றுள்ளது. மாறாக அபூஹாஷிமாவின் காப்பியம் புதுக்கவிதை யாப்பில் அமைந்துள்ளதாக இனம் காணப்பட்டாலும் வசனகவிதைப் போக்கே நூல் நெடுகிலும் மேம்பட்டிருக்கக் காணலாம். இக்காப்பியத்தை உரைநடையின் தன்மைகளை மிகுதியாகப் பெற்ற ‘கட்டறுத்த கவிதை’ எனக் கூறுவர்.26
”குறைஷிகள்
இரையைத் தப்ப விட்ட
நரியைப் போல்
ஆனார்கள்! “27
”அபூசுப்யான்
ஒரு குன்றின் மீது
ஏறிக் கொண்டான்!”28
போன்ற தொடர்களை இதற்கு சான்றாகக் கூறலாம். மடக்கி எழுதப்படாமல் தொடர்ந்து எழுதப்பட்டால் இவை சொற்றொடர்களாகவே தோற்றம் பெறும். எனினும்,
”புண்ணியத்தைக் கழுவேற்ற
புறப்பட்டு வந்த உமர் – தன்
பாவங்களைக் கழுவேற்றினார்”29
”ஹம்ஸா
வீரத்தை விதைத்துக் கொண்டே
விதையாகிப் போனார்!”30
”முஸ்லிம் ஒருவர்
எண்பது வெட்டுகள் பெற்று
சொர்க்கத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்!”31
என்பன போன்ற புதுக்கவிதைப் பூக்கள் ஆங்காங்கே மலர்ந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.
காப்பியத் தொடக்கம் :
காப்பியத்தொடக்கம் வாழ்த்து, வணக்கம், வருபொருளுரைத்தல் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் அமைதல் வேண்டும் எனத் தண்டியாசிரியர் கூறுவதால் இம்மூன்றும் ஓரினப்பட்டனவே எனக் கருதுவர்32. ஆசி, நமஸ்காரம், வஸ்து நிர்த்தேசம் எனும் வடமொழிக் கருத்தை ஒட்டி வாழ்த்து, வணக்கம், வருபொருளுரைத்தல் எனக் கூறப்பட்டாலும், தமிழில் இவை கடவுள்வாழ்த்து எனவே வழங்கப்படும். இம்மூன்றுடன்,
வைத்த பெருங்காப் பியநிலையும் வாழ்த்தியல்பார்
மெய்த்த அவையடக்கம் வீறுசால் – முத்திதரும்
தெய்வ வணக்கமுடன் செய்பொருளும் முன்வரவாங்(கு)
எய்த உரைப்பதுதான் ஏய்ந்து”33
என அவையடக்கத்தையும் சேர்த்து நான்காகக் கூறுவர் மாறனலங்கார ஆசிரியர்.
காப்பிய வருணனை :
மலை, கடல், நாடு, நகரம், பெரும்பொழுது – சிறுபொழுதுகளாகிய பருவங்கள், சூரிய சந்திர தோற்றம் – மறைவு போன்ற வருணனைகள் பாடப்படுவது காப்பியமரபாகும். காப்பியங்களின் அழகுக்கு அழகூட்டுவனவாகிய இக்காப்பிய வருணனைகளுள் ஒரு சிலவே இந்நூல்களில் இடம்பெற்றுள்ளன. ’கடலின் பெருமையைப் பாசியா பகர்வது?’34 என்பன போல உருவங்களாகவோ, உவமைகளாகவோ காணப்படுகின்றனவே தவிர மலை, கடல் பற்றிய வருணனைகள் இவ்விலக்கியங்களில் காணப்படவில்லை.
பழைய காப்பியங்களில் புனைவுகளாகக் கூறப்படும் நாட்டுவளம் போலன்றி,
“இது
மணல்காடு
மனிதர்கள்
விலங்குகளாய் வாழ்ந்த
வனக்காடு!”35
என அன்றைய அரேபியாவின் இருண்டகால வாழ்வை யதார்த்தமாகப் பாடுவதாகவே காட்டு வருணனை அமைந்துள்ளது.
“மக்கா
மாநிலத்தின் இதயம்
மாண்புகளையும்
மா தவ மனிதர்களையும்
பிரசவித்த பூமி!”36
“மதீனா!
நகரங்களின் சிகரம்!
இதன் பெயரைச்
சொல்லச் சொல்ல நாவில்
சுரந்து வரும் அமுதம்!”37
என மக்கா – மதீனா மாநகரங்களை வருணிப்பதன் மூலம், நகரச்சிறப்பு பாடும் மரபை ஓரளவு நிறைவுசெய்கிறார் அபுஹாஷிமா, மற்ற இருவர் நூல்களில் இந்நூல்களின் சிறப்பு பேசப்படவில்லை. ‘தண்ணீரை அடைகாத்த மேகம், மழைக்குழந்தை பெற தாயிஃப் நகரைத் தேர்ந்தெடுத்து’38 எனத் தாயிஃபையும். ‘பச்சை வண்ணத்தில் பதியப்பட்ட ஓவியச் சிற்றூர்’39 எனக் குபாவையும், அவற்றின் குளிர்ச்சிக்காகவும், பசுமைக்காகவும் சிறப்பித்துக் கூறும் வலம்புரிஜான், மக்கா, மதீனாவின் சிறப்புகளைக் கூறவில்லை. பெருமானார் வரவுக்குப்பின், ‘பூகோள வரைபடத்தில் இருட்டுப் புள்ளியாய் இருந்த மதீனா புலர்காலைப் பொழுதானது’40 என மதீனாவைப் பற்றி இவர் கூறுவது கூட, பெருமானாரின் சிறப்பு கூறுவதாக உள்ளதேயன்றி, மதீனாவின் சிறப்பு கூறுவதாக இல்லை. அண்ணலாரின் வாழ்வில் அழியா இடம்பெற்ற இவ்விரு நகரங்களின் சிறப்புகளையும் இவ்விரு கவிஞர்களும் பாடாமல் விடுத்தது வியப்பினை அளிக்கிறது.
அரபுநாடு வேனிற்பருவம் ஒன்றனையே சிறப்பாகப் பெற்றிருப்பதால், ’வெம்பாலை மணல்வெளி’,41 ‘பாலையின் மணல் அடுப்பு, பற்றிய கதிர் நெருப்பு’42 என வேனிற்கால வருணனையன்றிப் பிற பெரும்பொழுதுகள் குறித்த வருணனைகளை இவ்விலக்கியங்கள் பேசவில்லை. ’கோடை ஒன்றே பருவமாகிப்போன மதீனா’43 எனும் தொடர் இதனை வலியுறுத்தும். ’புலரும் வைகறைப் பொழுது ஒவ்வொன்றும் புத்தாடை சூடியே புறப்பட்டு வருகிறது’44 என வைகறையும் ‘கூவுது சேவல் வானம் குளித்தது விழித்தெழுந்து’45 என விடியலும், ’கடிகாரச் சேவல் சூரியப்பூவைச் சூடமுடியாமல் அவிழ்ந்த கொண்டையோடு அலைந்தது’46 என நண்பகலும், ‘கதிரவன் காயம்பட்டுக் காணாமல் போகும் வேளை’47 என எற்பாடும், ‘பகலின் கொப்புளங்களுக்கு இரவு அஞ்சனம் அப்பிக்கொண்டிருந்தது’48 என மாலையும், ‘நடக்கத் தயங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு’49 என யாமமும், வருணிக்கப்பட்டுச் சிறுபொழுதுகளின் வருணனை சிறக்க அமைந்துள்ளது.
‘இருசுடர்த்தோற்றம்’50 இவ்விலக்கியங்களில் மிகச்சிறப்பாக அமைந்து இன்புறுத்துகிறது.
‘கதிரவன்
கண்ணைக் கசக்கினான்’
‘விண்மீன்கள் வாய்திறக்கும் மூடிக்கொள்ளும்
வெள்ளி நிலா அரசாட்சி வானமட்டும்’51
‘நட்சத்திரங்கள்
நிலவில்
தலைவாரக் கொண்டன’52
என இருசுடர்த் தோற்றமும் மறைவும் புதுக்கவிதைக் கவிஞர்களுக்கே உரிய தனித்தன்மையுடன் பாடப்பட்டுள்ளன.
முடிவு :
சிறந்த ஒரு இதிகாச புருஷனை, அல்லது சிறந்த ஒரு நாயகனைக் குறித்துள்ள சரிதத்தைப் பொருளாகக்கொண்டு, உலகினர்க்கு நன்மைபுரியும் நோக்கத்தை மேற்கொண்டு, சரிதத்தை அழகுபடுத்தி, சுவைபட விரிவாகக் கூறிச்செல்லும் நூலே காப்பியமாகும்.53 காப்பியங்கள் பழங்கால மக்களின் நாகரிகப் பண்பாட்டுக் கருவூலமாக இன்றும் கருதப்பட்டு வருகின்றன. கற்பனை வளமும், சிந்தனைத் திறனும், சுவை உணர்வும், இலக்கிய நயமும் மிக்க உன்னதப்படைப்பே காப்பியம். மனித சமுதாயமும் வாழ்க்கையுமே இதன் அடிப்படை54. இக்காப்பியக் கருப்பொருள்,
- மகாபாரதம் முதலிய கதையினின்று தோன்றிய சரிதம்
- ஏற்கனவே உலக வழக்கில் உள்ள சரிதம்
- கவிஞன் தனது அறிவுவன்மையால் கற்பித்துக்கொண்ட நன்மையைப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள சரிதம்.
என மூன்றன் அடிப்படையில் அமையலாம்.55 இத்தகைய சரிதங்கள் இயல்புக்குப் பொருந்திய காப்பியத் தலைமையையும், காப்பியக் கட்டுக்கோப்பிற்கு உதவும் வகையில் மீவியற்கை நிகழ்வுகளையும் பெற்று, மக்களுக்குப் பயனளிக்கும் கலை, பண்பாடு, வரலாறு பற்றிய செய்திகளைத் தாங்கி, பழைய மரபுகளை ஏற்றும், தேவைக்கேற்பப் புதுநெறிகளை மேற்கொண்டும் படைக்கப்பட்டதாக அமைவதோடு, சமுதாய மேம்பாட்டையே இலக்கியநோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது மரபு56.
காப்பியங்களுள் ஒன்றாகிய மீவியற்கை நிகழ்வுகள் பழந்தமிழ் இசுலாமியக் காப்பியமான சீறாப்புறாணத்தில் பாடப்பட்டுள்ளதுபோல இக்காப்பியங்களில் பாடப்படவில்லை என்பது உண்மையே. எனினும், சீறாவில் இடம்பெறாத பெருமானாரின் மிஃராஜ் பயணம் மூவராலுமே பாடப்பட்டுள்ளது. பெருமானார் சந்திரனைப் பிளந்த நிகழ்வு வலம்புரியால் மட்டும் பாடப்பட்டுள்ளது சீறா எழுந்த சூழலில் மீவியற்கை நிகழ்வுகளுக்கு இருந்த முக்கியத்துவம் காலப்போக்கில் மாறிவிட்டதும், ஆதாரமற்ற செய்திகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இன்றைய மனித மனமும் இக்காப்பியங்களில் மீவியற்கை நிகழ்வுகள் இடம் பெறாமைக்குக் காரணமாதல் கூடும். எனினும், மிஃராஜ் நிகழ்வு இம்மூவராலும் பாடப்பட்டமைக்கு அதுபற்றிய குர்ஆன் ஹதீஸ் அடிப்படையே காரணம். அது போன்றே, கேசாதிபாத, பாதாதிகேச வருணனைகள், உலாச்செய்திகள் போல்வனவும் இக்காப்பியங்களில் இடம்பெறாமைக்குத் தனிமனித ஒழுக்கத்தைப் பெரிதும் போற்றிய பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றுக் காப்பியத்தில் இவை இடம் பெறுவது ஏற்புடைத்தன்று என்பது காரணமாகலாம்.
யாரேனும் ஒரு கதாநாயகனை எடுத்துக்கொண்டு, அவன் செயல்களை காலமுறைப்படி ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கூறுதல் சரித்திரநெறிக்குப் பொருந்துவதாகலாம். காப்பியநெறிக்குப் பொருந்தமாட்டாது. அழகுபெற வேண்டுமானால் கதாநாயகனது வாழ்வின் நோக்கமாயமைந்த பெருஞ்செயலை எடுத்துக்கொண்டு அதன் தோற்றம், வளர்ச்சி, முடிவுநிலை என்பனவற்றை அறுதியிட்டு, அம்முறைப்படிக் கதையை அமைத்து, கதையொருமை என்ற உணர்ச்சியை உண்டுபண்ணுதல் வேண்டும் என்பது மரபு57. இம்மரபைப் போற்றும் வகையில் காப்பிய நாயகரது வாழ்வின் நோக்கமாகிய “ஓரிறைக் கொள்கை” என்ற உயர்ந்த நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இக்காப்பியங்கள் அமைந்துள்ளன. சிறந்த கருத்துருவாக்கத்திறன், உயிரோட்டமுள்ள உணர்ச்சி, வெளியீட்டுமுறை, ஒலிக்கூறுகளைப் பயன்படுத்தும் திறன், உருக்காட்சியை வாசகன் மனக்கண்முன் தோன்றச்செய்தல், தேர்ந்த சொல்லாட்சி, உன்னத யாப்புமுறை எனப் பலவகையிலும் இக்காப்பியங்கள் மிகச்சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
வாழ்க்கையிலிருந்து பிறப்பதே இலக்கியம். அது குறிப்பிட்ட காலத்தில் தோன்றுகிறது; கால வெள்ளத்திற்கேற்பப் பல மாற்றங்களை அடைகிறது. சில சமயங்களில் மூழ்கி மறைந்துவிடுகிறது. சில இலக்கியங்கள் அழியாமல் நிலைத்து நிற்கின்றன.58 மேத்தா, வலம்புரிஜான், அபூஹாஷிமா மூவர் காப்பியங்களும் என்றென்றும் அழியா நிலைபேறுடைய இலக்கியங்களின் வரிசையில் இடம்பெற்றுத் திகழ்கின்றன எனத் துணிந்து கூறலாம்.
மேற்கோள் பட்டியல் :
- கி.வா.ஜகந்நாதன், தமிழ்க்காப்பியங்கள், ப. 12
- மு.வரதராசன், இலக்கியத்திறன், ப. 45
- கி.வா.ஜகந்நாதன், முன் குறிப்பிட்ட நூல், ப. 11
- எம்.எஸ்.பஷீர், தக்கலை, இக்கால இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள், ப. 5
- A. Homby, E.V. Gatenby & Others, the Advanced Learners Dictionary of Current English, P. 332
- ச.வே.சுப்பிரமணியன், காப்பியப் புனைதிறன், ப. 2
- அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார உரைசிறப்புப் பாயிரம் உரை,ப. 7-8
- மு.மேத்தா, நாயகம் ஒரு காவியம், ப. 34
- வலம்புரிஜான், நாயகம் எங்கள் தாயகம், ப. 56
- அபூஹாஷிமா, அண்ணலே யாரசூலுல்லாஹ், ப. 29
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 70
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 95
- அபூஹாஷிமா, மு.கு.நூல், ப. 48
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 133
- அபூஹாஷிமா, மு.கு.நூல், ப. 98
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 146
- சீறாப்புராணம், 40:13
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 2
- கூ, ப. 13
- கூ, ப. 122
- கூ, ப. 90
- சு.செல்லப்பன், சிலம்பொலி, முன்னுரை, மேலது, ப. 18
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 75
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 149
- கூ. ப. 50
- சாமுவேல் தாசன், முன்னுரை, அண்ணலேயாரசூலுல்லாஹ்
- கூ. நூல், ப. 129
- கூ. ப. 175
- கூ. ப. 94
- கூ. ப. 171
- கூ. ப. 173
- கி.வா.ஜகந்நாதன், மு.கு.நூல், ப. 141
- மாறனலங்காரம், நூல், 72
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 100
- கூ, ப. 143
- அபூஹாஷிமா, மு.கு.நூல், ப. 15
- கூ, ப. 33
- கூ, ப. 138
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 155
- கூ, ப. 176
- கூ, ப. 177
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 41
- கூ, ப. 199
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 243
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 138
- கூ, ப. 172
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 171-172
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 110
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 167
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 171
- மு.மேத்தா, மு.கு.நூல், ப. 160
- வலம்புரிஜான், மு.கு.நூல், ப. 167
- எஸ்.வையாபுரிப் பிள்ளை, காவியகாலம், நூற்களஞ்சியம். தொகுதி – 1, ப. 230
- இரா.காசிராசன், முன்னுரை, உலகக்காப்பியங்கள், ப.5
- எஸ்.வையாபுரிப் பிள்ளை, காவியகாலம், மு.கு.நூல்,ப. 227
- இரா.தமிழரசி, தமிழ் இலக்கியக் கொள்கை, 1981: 56-57
- எஸ்.வையாபுரிப் பிள்ளை, மு.கு.நூல்,ப. 156-157
- ச.வே.சுப்பிரமணியன் & தா.வே.வீராசாமி (ப.ஆ) முன்னுரை, இலக்கியக் கொள்கை ஓர் அறிமுகம், தொகுதி - , ப. 7
0 Comments