பாரதியார் குறித்த தகவல்கள் :
மகாகவி எனப் போற்றப்படும் இவர், டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக பன்முகத்தன்மை கொண்டவர்.
தனது பதினோராம் வயதிலேயே கவிதை எழுதும் திறமையால் 'பாரதி' என்ற பட்டத்தைப் பெற்றார். தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்று கொண்ட இவர், தேசிய உணர்வுள்ள பாடல்களால் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.
பெண் விடுதலை, சாதி மறுப்பு போன்ற புரட்சிகரமான கருத்துக்களைத் தனது படைப்புகள் மூலம் வலியுறுத்தினார். 'பாஞ்சாலி சபதம்', 'கண்ணன் பாட்டு', 'குயில் பாட்டு' போன்ற பல புகழ்பெற்ற காவியங்களைப் படைத்த பாரதியார், செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு மறைந்தார்.
அவரது படைப்புகள் இன்றும் தமிழ் இலக்கியத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா”
பொதுவாக காக்கை என்பது அழகற்ற பறவை. இப்பிரபஞ்த்தில் கரிய காகமும் ஒன்று. ‘நின்றன் கரிய நிறம்’ என்று சொல்லப்பட்டதில் ஆழ்ந்திருக்கும் பொருள் ஒன்று உண்டு. கருமை என்பது இருள். கருமை என்பது புதிர். படைப்புக்கள் வெளிச்சத்திற்கு வரும் முன் இருந்த நிலை கருப்பு. அந்த ஆதி நிலையைத்தான் காக்கைச் சிறகினில் கரிய நிறம் தனக்கு நினைவூட்டுவதாக பாரதி பாடுகிறான்.
பாரதியின் பார்வை அடுத்து மரங்களின் மீது விழுகிறது.
“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா”
பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான். அந்த ஒளியாக விளங்குபவன் இறைவன் என்பதை இவ்வரிகள் நினைவூட்டுவதாகப் பாரதி குறிப்பிடுகிறார்.
அடுத்து பாரதியின் கவனம் இன்னும் நுட்பமான ஒன்றை நோக்கி நகர்கிறது.
அதாவது கண்ணிலிருந்து காதுக்கு நகர்கிறது.
“கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா”
ஓசையைக் கேட்பார் பலருண்டு. கீதம் கேட்பார் சிலரே. இசையில் ரசனை இல்லை எனில் அந்த இசையும் வெறும் ஓசை அன்றி வேறல்ல. ஓசை என்பது மண் போல். பானை மண்ணால் ஆகிறது. மண் இன்றிப் பானை இல்லை. அதுபோல், இசை, ஓசையால் ஆகிறது. ஓசை இன்றி இசை இல்லை. ஆன்ம கீதம் என்பது அதனினும் நுட்பமானது. அந்த ஓசையைக் கேட்கவேண்டுமென்றால் உட்செவி திறக்க வேண்டும். மனம் ஒருநிலைப்பட வேண்டும்.
இறைவனுக்குத் தொண்டனாய் மட்டும் இருந்த பாரதி, இங்கே நேசனாக உயர்ந்திருக்கிறார். அதனால்தான் முன்பு ‘தோன்றுது ஐயே’ என்று பாடியவர். இங்கே தோன்றுதடா என்று பாடுகிறார். இது நெருக்கத்தின் அடையாளம்.
அடுத்த அடி ஆன்மிகத்தின் உச்சத்தை உரைக்கிறான் பாரதி,
“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”
‘நின்றன்’ என்று முன்னம் சொன்ன நிலை இங்கே ’நின்னை’ என்று மாறிவிட்டது. தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தரும் அந்தத் தீ எந்தத் தீ? அது கடவுள் மீது வைத்த காதல் தீ ! கடவுளிடம் உண்மையாக காதல் வைத்தால் தீ கூட நம்மை சுடாது என்பது இங்கு உணர்த்தப்படுகிறது. நாம் சுகப்படுவதற்குச் சிறந்த வழி ஆண்டவனைத் தவிர வேறுண்டோ? அந்த அனுபவத்தில்தான் இப்பாடலைப் பாரதி முடிக்கிறார்.
மனதில் உறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
மனிதில் உறுதி வேண்டும் – பொருள்
மனதில் உறுதி இருப்பவர்கள் எதையும் சாதிக்கும் துடிப்பு மிக்கவர்களாக இருப்பர். மனதில் உறுதி இருந்தால் எந்தச் சோர்வும் அண்டாது. இதை மனதில் வைத்துதான் பாரதி மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலைப் பாடியிருக்க வேண்டும்.
மனதில் உறுதி வேண்டும் :
உறுதி மட்டும் இருந்தால் போதுமா? பேச்சினில் இனிமை வேண்டும். பேச்சு ஒன்று செயல் ஒன்று என்று மாறுபாடாக இருக்கக் கூடாது. நம்முடைய எண்ணம் நல்லதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் நம் மனம் விரும்பும் பொருளை நம்மால் அடையமுடியும். அதனால் மனம் நன்றாக இருக்கும்.
எல்லோரிடத்திலும் நாம் இப்படி இருக்க வேண்டும். அப்படி வாழ வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவு வெறும் கனவாகவே கழிந்துவிடக் கூடாது. நாம் விரும்பிய கனவு வாழ்க்கையை நனவில் கொண்டு வந்து சேர்க்கப் பாடுபட வேண்டும். செல்வம் இல்லை என்றால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. செல்வம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் நிலைபெறும். அதனால் செல்வமும் இன்பமும் வேண்டும் என்று பாரதியார்பாடுகிறார். கல்விக் கண்கள் திறந்திடல் வேண்டும். அப்போதுதான் அறியாமை எனும் இருள் நீங்கும். அதனால் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் துளிர்க்கும். நாடு நலம் பெறும். நல்லவை நடக்கும். அல்லவை தேயும். நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
சமூகத்தில் பெண்களுக்கு விடுதலை வேண்டும். பெண்கள் அடிமைகளாக இருக்கும் நிலை மாற வேண்டும். பெண்களை மதிக்கும் நாடுதான் முன்னேறிய நாடாகக் கருதப்படும். வீட்டிலும் நிம்மதி இருக்கும். எது இருந்தாலும் பாதுகாப்பு என்பது இருக்க வேண்டும். மக்களைப் பெரிய கடவுள் பாதுகாக்க வேண்டும். கடவுளின் பாதுகாப்பில் இருந்தால் மட்டுமே அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ முடியும். மண்ணில் பயிர்கள் நல்ல விளைச்சளைத் தந்து பூமி செழித்திட வேண்டும். அதனால் வானம் வசப்படும். வானம் வசப்பட்டுவிட்டால் வாழ்வே வசந்தமாகிப் போகும் வாக்கினில் உண்மை வேண்டும். உண்மை மட்டும் இருந்தால் எல்லா நற்பண்புகளும் கூடவே வந்துவிடும். அதனால்தான் பாரதி உண்மை நின்றிட வேண்டும் என்று பாடுகிறார். எல்லா தரப்பிலிருந்தும் சிந்தித்து எழுதப்பட்ட இப்பாடலின் பொருளை நாம் அனைவரும் பின்பற்றுவோமாக .

0 Comments