நீந்திக் கடக்க இயலாத கடல் | கவிஞர் சூ. சிவராமன் | December 2023

 


போர் நிகழும் தீவைப்பற்றிய கனவுகள் கொத்துக் கொத்தாக விழுந்து கொண்டிருக்கின்றன

அலைகளை அனுப்பிப் பார்க்கிறது கடல் சிவக்கிறது அலைவாய்

சிறுமி கரையில் நின்று பார்க்கிறாள் தளும்பி நிற்கிறது கடக்க முடியாத கண்ணீர்

எதிர்க்குரல்கள் பாவிய நெடிய மணல்வெளி போர் ஆயுதங்களால் உரத்துப் பேசுகிறது

கள்ளத்தோணியில் விரைபவர்களை கலங்கரை விளக்குகள் காட்டிக் கொடுப்பதில்லை எப்படியும் மூழ்கப்போகிறவர்கள் தானே...

கடல் நிர்வாண உடல்களை அலைகளால் மூட முயன்று முயன்று தோற்கிறது

நிலமிழந்தவர்கள் ஒதுங்கும் கரைகளில் துப்பாக்கிகளுக்கு ஓய்வே இல்லை

அம்மாவின் படகு கிழக்கில் மகளின் படகு வடக்கில் இருவர் உடலும் மேற்கில்

சுற்றி வளைத்திருக்கும் கடலில் குழந்தைகள் எதிர்காலத்திற்குள் நீந்திக் கரைசேர முயன்றுத் தோற்று ஒதுங்குகுகிறார்கள்

அன்பின் கடலே புவிக்கோளில் சினந்து சிவந்து பறக்கும் துயரங்களுக்கு ஈடாக வெண்மணலால் உலகிற்கொரு கொடி நெய்து தரக்கூடாதா?

- கவிஞர் சூ. சிவராமன் 

Published in Nagore Puranam December month magazine 2023

Post a Comment

0 Comments