பாரதிதாசன் :
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) அவர்கள் ஒரு சிறந்த தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கியப் பங்காற்றியவர். இவர் 'புரட்சிக் கவிஞர்' என்றும், 'பாவேந்தர்' என்றும் போற்றப்படுகிறார். பாரதியாரின் தீவிர பற்றாளராகவும் சீடராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
புதுச்சேரியில் பிறந்த இவர், தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கவிதை, கட்டுரை, நாடகம், புதினம் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்.
சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், பெண்ணுரிமை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற கொள்கைகளைத் தனது கவிதைகள் மூலம் மக்களிடையே பரப்பினார். இவரது கவிதைகள் உணர்ச்சிப்பூர்வமானதாகவும், எளிய சொற்களைக் கொண்டதாகவும் இருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
'குடும்ப விளக்கு', 'பாண்டியன் பரிசு', 'இருண்ட வீடு', 'அழகின் சிரிப்பு' போன்ற பல புகழ்பெற்ற படைப்புகளை பாரதிதாசன் அளித்துள்ளார். இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியதுடன், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் வலு சேர்த்தது.
1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 73 ஆவது வயதில் பாரதிதாசன் காலமானார். இருப்பினும், அவரது படைப்புகள் மூலம் அவர் இன்றும் தமிழ் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
வரிப்புலியே தமிழ் காக்க எழுந்திரு!
தமிழ் மொழிக்கு ஒரு வளர்ச்சி என்றால் தமிழா அது உன்னுடைய வளர்ச்சி! இளந்தமிழனே! எழுந்திரு! விழித்துக்கொள்! நம் பழம்பெருமையை மீட்டுருவாக்கு! தமிழ்மொழியின் பல்வேறு துறைகள் வளர தொண்டு செய்! தமிழ்த்தாய் பெறும் வெற்றியெல்லாம் உனது வெற்றி! இளந்தமிழா! துடித்தெழு! அறம்செய்! நம் துயரையும், பழியையும், அடிமை நிலையையும் உணர்ந்து அதைத் துடைத்தெறி! தமிழின் எல்லாத் துறைகளையும் வளமாக்கு! இளந்தமிழா! நீ வாழ்வாயாக! தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை அது உன்னுடைய பெருமை என்று உணர்வாயாக.
பசியில் வாடுவோர் பலர் இருக்கிறார்கள். அந்த நிலையை நீ தான் மாற்றவேண்டும். இளந்தமிழா! வலிமையான பெரும்படை சேர்! பொருள் சேர்! இன்பத்தை உருவாக்கு! தமிழுக்குத் தொண்டுசெய்! தமிழ் உணர்வுகொண்டு எல்லாத்துறைகளையும் வளப்படுத்து.
தமிழ்த்தாய்க்கு ஒரு தீமை என்றால் அது உனக்கு வந்த தீமை என்றே உணர்ந்திடு. தமிழ்நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று துடிக்கும் சிங்கமே! தமிழைக் காப்பாய்! புத்துணர்வு கொள்வாய்! அதிர்ந்து எழு! எல்லாத்துறைகளையும் தமிழால் அழகாக்கு! இளந்தமிழா! வரிப்புலியே! நோய் நீக்க எழுந்திரு! எதிர்காலம் பேசும் அழகிய இலக்கியத்தை எழுதிடு! இளந்தமிழா! அறம் செய்! சுதந்திரமாக வாழ்! அழகிய நாட்டில் பணி செய்! தமிழுக்காக எல்லாத் துறைகளிலும் பணிசெய்! பழம்பெருமைகொண்ட நாட்டில் வாழ்பவனே அறியாமை என்ற நோயை நீக்க எழுந்திரு.
தமிழ்நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று துடிக்கும் சிங்கமே! தமிழைக் காக்க இன்றே புதுநாளை உண்டாக்கு.
புத்துணர்வுடன் அதிர்ந்து எழு! எல்லாத் துறைகளையும் தமிழால் அழகாக்கு! இதுதான் நீ செய்யவேண்டிய முதன்மையான பணி எழுந்திரு! இளந்தமிழா! வரிப்புலியே! எழுந்திரு!

2 Comments
Very pover
ReplyDeleteIt's was nice 👍
ReplyDelete