பொங்கும் பொங்கலில் மங்கள சங்கமம். எங்கும் மகிழ்ச்சி.,என்றும் தங்கட்டும்.
தரணி போற்ற வாழ்ந்த வாழும் தமிழனின் விழாக்கள் விழுமிய கருத்தடங்கிய பொருத்தமான விழாக்களாக விளங்குவதை உலகம் அறியும்.இத்தகு பொன்னான விழாக்களில் ஒன்றே பொங்கல்.
தை முதல் நாள் தமிழனின் திருநாள். தரணி செழித்திடும் பெருநாள். இந்நந்நாளில் மாடு கட்டி ஏரோட்டி மண்ணைக் கிளறி மண்ணுக்குள் விதை விதைத்து விண்ணிலிருந்து மழை பொழிய விளைந்த நெல்லை அறுவடை செய்து மழை தந்த விண்ணிலிருந்து வெளிச்சம் போட்ட வெயிலில் காய வைத்து அரிசியாக்கி வேளாண்மை விளைச்சலில் வேகும் சோற்றை உண்ணும் மக்கள் உழவர் வாழ்வு உயர உறுதி பூண வேண்டும். உரிய உதவிகளை மக்களும் அரசும் இணைந்து ஆவண செய்ய வேண்டும். பாவனை வேண்டாம்.
உழவனின் பரிதாபம் நீங்கி உழவர் உலகில் உயர் உண்மையாய் உறுதியாய் நன்மையை நாடி நல்லன செய்து அல்லல் நீங்கி உழவர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டும்.
கரும்பைச் சுற்றி நிற்க வைத்து நடுவே பானையில் பச்சரிசி போட்டு பாலூற்றி பொங்கலிடும் நந்நாளில் பூவுலகம் மகிழ்ச்சியில் பூத்திட போரில்லா அமைதியில் அகில மக்கள் அகம் மகிழ அரவணைத்து ஆனந்தமாய் கூடி வாழ குவலயம் ஆளும் ஆண்டவன் அருள் புரிவானாக.
- மு. கவிஞர் மு.அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam January month magazine 2024

0 Comments