சிங்களமும் வங்கமும்:
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்"
மேற்குறிப்பிட்ட வரிகளில் சிங்களம் என இலங்கையை குறிப்பிடுகிறார். இலங்கை தீவிற்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும். மேலும் இந்தியா - இலங்கை இடையில் உள்ள சேதுபதியை உயர்த்தி வீதியாக அமைத்திட வேண்டும் என்கிறார். மேலும் வங்கத்தில் பாயும் அளவுக்கு அதிகமான நீரினை திசைத் திருப்பி, இந்தியாவின் நடுவிலுள்ள மாநிலங்களுக்கு கொண்டு வந்து வேளாண்மை செய்வோம் என்கிறார்.
வணிகம் :
நம் இந்திய திருநாட்டில் சுரங்கங்கள் பல வெட்டி தங்கம் போன்றவைகளையும், வேறு பல தாது பொருட்களையும் வெளிக்கொணர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேன்மை படுத்த வேண்டும் என்பதனை
" வெட்டுக் கனிகள் செய்து தங்க முதலாம் வேறு கனிகள்பல குடைந் தெடுப்போம்"
என்கிறார். மேலும் வெட்டியெடுத்த அப்பொருட்களை எட்டு திசை எங்கும் கொண்டு போய் வியாபாரம் செய்து அதனுள் வரும் லாபத்தை கொண்டு நாட்டை செழிப்படை செய்ய வேண்டும் என்கிறார்
பட்டும் பஞ்சும்:
"பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்; பண்ணி மலைகளென வீதி குவிப்போம் ; கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்'
பட்டினாலும் பஞ்சினாலும் பலவகை ஆடைகள் செய்து நாடெங்கும் அதனை சேகரித்து வைத்து செல்வங்கள் பல கொண்டு வரும் உலகளாவிய வியாபாரிகளிடம் அதனை விற்று வருமானம் ஈட்டுவோம் என்கிறார்.
பண்டமாற்று முறை:
கங்கை நதி கரையில் விளைகின்ற கோதுமை தானியத்தையும், காவிரி நதி கரையில் விளைகின்ற வெற்றிலையையும் பண்டமாற்றாக பெற்றுக் கொள்வோம் என்பதனை
"கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் "
அறிவியல்:
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம் -ராசபுத் தானத்து வீரர் தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்...
பாவலர்கள் காசி நகரத்திலில் ஆற்றுகின்ற சொற்பொழிவை. நகரத்தில் இருந்தபடியே நாம் கேட்டு இரசிப்பதற்கு ஒரு கருவியை உருவாக்குவோம் என்கிறார் இவ்வாறு தனது கவிதைகளின் மூலம் நாட்டு மக்களிடையே அறிவியல் சிந்தனைகளை தூண்டி மக்களை விழிப்படைய செய்தார்.
உகந்து செய்வோம்:
"உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்!"
இவ்வுலகில் என்னென்ன தொழில்கள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் ஆனந்தமாக குதூகலத்துடன் மனமுவந்து செய்வோம் என்கிறார்.
பாருக்குள்ளே நல்ல நாடு:
"பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள் பாரத நாடு "
அறிவு, வீரம், கொடை, நேர்மை என எல்லா பண்புகளிலும் சீரும் சிறப்பு மிக்கவர்கள் இந்திய திருநாட்டினர்கள். இதனை கருத்தில் கொண்டு மேற்கண்டவாறு பாரத நாட்டிற்கு புகழாரம் சூட்டுகின்றார் பாரதியார்.
பாரத நாட்டின் பெருமை :
இந்திய திருநாட்டின் பெருமைக்கு எது காரணம் என்பதையும் தனது பாடலின் மூலம் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
"மன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநில மீததுபோல் பிறிதில்லையே "
உலகில் உள்ள மிக உயர்ந்த இமயமலையை உடைய நாடு, மாநிலங்கள் என்ற பிரிவினைகள் இல்லாத நாடு.
"பூரண ஞானம் பொலிந்த நன் நாடு; புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு"
முழுமையான பூரண ஞானங்கள் பல பொழிந்த நாடு. கௌதம புத்தர் தோன்றிய பொன்னாடு.
"பாரத நாடு பழம்பெரும் நாடே; பாடுவம் இதை எமக்கில்லை ஈடே"
பழம்பெரும் சிறப்புகள் பல பெற்ற நாடு இந்த பாரத நாடு என்று இந்த பாரத (இந்திய) திருநாட்டின் புகழை பாடுவோம் என்கிறார் மகாகவி.
பாரத நாட்டு மக்கள்:
" செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்"
நம் இந்திய திருநாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் 18 மொழிகள் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது. இதனையே கருத்தில் கொண்டு பாரதியார் 18 மொழிகளை பேசுபவர்கள் ஆயினும் எல்லோரும் ஒரே சிந்தனையை உடையவர் என்கிறார்.
ஒருமைப்பாட்டுடைய தேசம்:
இந்திய திருநாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைக்கும் பல பாடல்களை பாடினார். அவற்றில் இவரது தேசிய உணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டு "எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள் " என்ற பாடல் வரிகள் ஆகும்.
ஆயிரம் உண்டிங்கு சாதி :
ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?
நம் இந்திய திருநாடு பல மொழிகள் பேசுபவர்களும் பல இனத்தை சார்ந்தவர்களும் வாழும் திருநாடாகும். இவ்வாறு பிரிந்து கிடக்கும் நம் நாட்டில் இருந்து அன்னியர்கள் ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்கிறார்.
பாரதியும் தமிழ்நாடும்:
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
தமிழ்நாடு என்று சொல்லும் போது அதனை செவியுறுபவர்களுக்கு எல்லாம் தேனி சாப்பிட்டது போல் இனிமையாக இருக்கும் என்கிறார்.
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
உலகில் உள்ள அனைவரும் அவரவர் நாட்டை தாய்நாடு என்று தான் அழைப்பார்கள் இருப்பினும் இந்த தமிழ்நாட்டை தாய்நாடு என்று சொல்வதைவிட தந்தை நாடு என்று சொல்லும் போது நாடு நரம்புகள் அனைத்தும் சிலிர்த்து ஒரு தனி சக்தி பிறக்குது என்கிறார்.
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு
மேலும் பல சமயம் சார்ந்த வேதங்களும் வேதங்களை கற்றுத் தேர்ந்த பண்டிதர்களும் வாழும் நாடு வீரத்திலும் விண்ணுலக உயர்வு கண்ட நாடு நம் தமிழ்நாடு என்கிறார் மகாகவி பாரதியார்.
பாரதியும் தமிழும்:
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் என பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த போதிலும் தமிழ் மொழி போன்ற இனிமையான மொழி எங்கும் கண்டதில்லை என்கிறார். மேலும் தமிழ் புலவர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில்
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
நான் அறிந்த புலவர்களில் கம்பராமாயணம் இயற்றிய கம்பனைப்போல், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப்போல், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவைப் போல் சிறப்பு வாய்ந்த புலவர்கள் இந்த பூமியிலேயே பிறந்ததில்லை. அதுமட்டுமின்றி மேற்கூறப்பட்டவைகள் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று கூறுகிறார். மேலும் " சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே " என்று புகழ்ந்து கூறுகிறார்.
- மு. முஹம்மது சுஹைப்
Published in Nagore Puranam December month magazine 2023

0 Comments