கற்பிக்கும் பொற்பு | September 2025 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 

பேராசிரியராய் பணியைத் துவக்கி பெரும் பொறுப்புகள் பலவற்றை ஏற்று பலரும் பாராட்ட பணி புரிந்து, சீரோடும் சிறப்போடும் இந்திய குடியரசு தலைவராக குவலயம் போற்ற இந்திய பெருமையாய் இகமெங்கும் அறியப்பட்ட அறிஞர் பெருமகன் முனைவர் இராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் நாள் இந்தியாவில்‌ ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது

தூசு தட்டி துலக்குவது போல் மாசு நீக்கி மாணவர்களைப் பளிச்சிட செய்து வாழ்வில் ஒளிர செய்பவர்கள் தளராத தரமான கல்வியைக் கற்பிக்கும் பொறுப்பு‌டைய ஆசிரியர்கள்.

இந்த நாளில் மாநிலங்களிலும் , மத்தியிலிலும் அரசுகள் போட்டிபோட்டு பள்ளி கல்லூரியில் துள்ளி ஓடும் பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் உரிய கல்வியைக் கற்பித்து அரிய சாதனைகள் புரிய‌ வைத்த ஆசிரிய பேராசிரிய பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கின்றன.

துவக்க பள்ளியில் கலக்கமில்லாமல் அரிச்சுவடியை அடிப்படையை ஆரம்பித்து உயர்நிலை & மேல் நிலை பள்ளிகளில் உயரும் உன்னத வழியைக் காட்டி இலக்கு நோக்கிய இயல்புக்கேற்ற படிப்பைப் பயின்று முயன்று முன்னேற வழி காட்டுவது. இந்த மூன்று அல்லது நான்கு நிலைகளிலும் ஆன்றவிந்த சான்றோனாக்கும் ஆசிரியர்கள் நன்றிக்கு மட்டும் உரியவர்கள் அலலர். என்றும் எங்கும் நன்றே செய்து நல்லறம்பேணி நல் வாழ்வு வாழ வழி காட்டிய ஆசிரியர்கள் அகிலத்தில் அனைவராலும் பாராட்டப்படும் பாங்காளர்கள்.

தீராத ஆவலோடு பாரதியிடம் சீராக பாடல் எழுத கற்ற சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார்.

பாரதிதாசனிடம் பயின்று பாடல் எழுதிய இராசகோபாலன் சுப்புரத்தின தாசன் ஆனார். அந்த பெயரின் சுருக்கமே சுரதா.

தமிழவேள் கோ. சாரங்கபாணியால் கோலோச்சும் எழுத்தாளர் ஆனவர் ஜே. எம்.சாலி.

நான்காம் சங்க நக்கீரர் நாகூர் குலாம் காதிறு நாவலர் தெ. பொ . மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்.தனி தமிழில் பேச எழுத கற்பித்த மறைமலையடிகள் குலாம் காதிறு நாவலரின் மாணவர்.

ஆசிரிய மாணவர் தொடர்பும் பயிற்சியும்‌ பரிணமித்து பளிச்சிடுவது உலக இயல்பு .

Post a Comment

0 Comments