இந்திய பாரத வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற புதுகை மு, தருமராசன் அவரின் இலக்கிய ஈடுபாட்டால் தமிழின் மீது கொண்ட தாளாத பற்றினால் புதுகைத் தென்றல் மாத இதழைத் துவக்கி இளம் மற்றும் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கிறார். புதுகைத் தென்றல் இந்த மாதம் அக்டோபரில் 23 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முதுகலை பட்டம் பெற்று படிப்பிற்குரிய வேலை தேடும் வேளையில் நாகூரைச் சேர்ந்த தமிழார்வமும் உடைய எழுத்தாற்றலும் மிக்க இளைஞர்கள் கூடி முடிவெடுத்து இளைஞர்களின் தமிழார்வம் தளராது வளர நாகூர்ப் புராணம் இதழை அக்டோபர் 2023ல் துவக்கி தடைகளைத் தகர்த்து இடையூறுகளை இடித்து 2025 அக்டோபரில் மூன்றாம் ஆண்டில் முனைந்து நடக்கிறது. இணைந்து எங்களோடு கை கோர்த்து நடக்க படைப்பாளிகளையும் படிப்பாளிகளையும் வேண்டுகிறது.
நாகூர் குலாம் காதிறு நாவலர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர். இவரின் மாணவர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரி தலைமை தமிழ் பேராசிரியர் இலக்கண கோடரி பிச்சை இப்ராஹீம் புலவர் வேண்டியபடி பொருத்த விளக்கம் என்று ஒரு நூல் எழுதினார். இந்த நூலின் விமர்சனத்தை சுதேசமித்திரனில் படித்த பாண்டித்துரை தேவர் பாஸ்கர சேதுபதியுடன் 1901ல் நாகூர் வந்து இவரைச் சந்தித்தார்.
அப்பொழுது குலாம்காதிறு நாவலரின் வேண்டுகோளை ஏற்று பாண்டித்துரை தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்தார். குலாம் காதிறு நாவலர் நான்காம் தமிழ்ச்சங்கத்து தலைமை புலவராக நியமிக்கப்பட்டார். புலவர்கள் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நோக்கி மதுரைக்குச் செல்ல வேண்டும் என்று வழிகாட்டி தமிழ்ச்சங்க புலவர் ஆற்றுபடையைப் பாடினார். இந்த நூலின் சிறப்பறிந்த புலவர் பெருமக்கள் இவரை நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர் என்று பாராட்டினர்.
குலாம் காதிறு நாவலர் எழுதிய நூல்கள் : நாகூர் புராணம், பிரபந்த திரட்டு, மதுரைக் கோவை, ஆரிபுநாயகம், கன்ஜுல் கராமாத்து, திரு மக்கா திரிபந்தாதி, குவாலீர் கலம்பகம், மதீனா கலம்பகம், பகுதாது கலம்பகம், சமுத்திரமாலை, பஹனசர் வசன காவியம், ஆரிப் நாயக வசன காவியம்.
நாகூர் புராணம் குலாம் காதிறு நாவலர் அவர்கள் எழுதிய முதல் காப்பியம். 1850 விருத்தப்பாக்களை உடையது. 1883 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. 1893ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது.
இஸ்லாமிய தலம் ஒன்றின் பெயரால் இயற்றப்பட்ட ஒரே தமிழ்க் காப்பியம். நாகூர் நாயகம் வாழ்நாளில் நிகழ்த்திய தவ வலிமையான செயல்களும், அந்த செயல்களால் ஏற்பட்ட நன்மைகளையும் நவில்வதே நாகூர்ப் புராணம்.
நாகூர் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு இந்தக் காப்பியத்தின் உத்தரவளித்த படலத்தில் உரைக்கப்பட்டுள்ளது.
நாகூர்ப் புராணத்தில் குலாம் காதிறு நாவலர் அவர்களின் வருணனைகள் சங்க இலக்கிய வருணனைகளைப் போன்று எழிலும், இனிமை நயமும், சொல் நயமும், பொருள் நயமும், உவமை உருவக நயமும், பாடல் வகைகளில் மிளிரும் பாங்கும் வண்ணக் கலவை எண்ணத்தில் என்றும் நின்று நிலைக்கும் நினைவகலா இணையில்லா இலக்கியம்.
இத்தகு இலக்கியக் காப்பிய பெயர் பூண்ட நாகூர்ப்புராண இணையவழி மாத இதழுக்கு படைப்பாளிகள் மற்றும் படிப்பாளிகளின் நல்லாதரவை மீண்டும் வேண்டுகிறோம்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam October month magazine 2025

0 Comments