Nagore Puranam
நான்‌ கண்ட பாரதி தொடர் - 06 | March 2024 | மு. முஹம்மது சுஹைப்

நான்‌ கண்ட பாரதி தொடர் - 06 | March 2024 | மு. முஹம்மது சுஹைப்

 


கல்வி சிறந்த தமிழ்நாடு -புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணத்தை தழுவி தமிழில் எழுதிய கம்பராமாயணம் போற்றத்தக்க படைப்பு வழியில் ஒன்றாகும். இந்நூலின் பெருமையை அறிந்தவர்கள் இதனை மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர். இதன் காரணமாகவே கல்வியில் பெரியவன் கம்பன் என்று அழைக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற பெரும் புலவன் கம்பன் பிறந்தது தமிழ்நாடு.

உலக அளவில் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் புகழை பெற்று தந்த நூல் திருக்குறள். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று கூறி புகழாரம் சூட்டுகிறார். வணிகத்திலும் வான் புகழ் பெற்றவர்கள் தமிழ்நாட்டினர். பண்டைய காலத்தில் இருந்தே உலகில் உள்ள பல்வேறு கொண்டிருந்தனர். இதன் நாடுகளுடனும் வணிகத் தொடர்பு காரணமாகவே கடல் கடந்தும் தமிழர்களின் புகழ் பரவி இருந்தது.

" சீன மிசிரம் யவனரகம் இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக நின்று வளர்த்த தமிழ்நாடு"

என்று குறிப்பிடுகிறார்.

முப்பெரும் படைப்புகள்:

பாரதியாரின் படைப்புகளில் மிகவும் போற்றுதக்க படைப்புகள் என்னும் தலைப்பின் கீழ்காணும் முப்பெரும் படைப்புகளை குறிப்பிடுகின்றனர்.

பாஞ்சாலி சபதம்: மகாபாரத கதையை பெண்ணுரிமை காப்பியமாக பா வகையில் எளிய தமிழ் நடையில் உருவாக்கப்பட்ட நூல்,

கண்ணன் பாட்டு: சமய எல்லைகளை தாண்டிய பக்தி இலக்கியமாக விளையும் வகையில் படைக்கப்பட்ட நூல்.

குயில் பாட்டு: தத்துவ உள்ளுரைகள் முதலியவற்றை தேவதைகளின் கதைகளாக பாடப்பட்ட நூல்.

பாரதியின் சொற்பொழிவு:

இந்தியாவின் முற்கால பெருமையும் தற்கால நிலைமையும் என்ற தலைப்பின் கீழ் மணலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய பாரதி பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என தொடங்கும் பாடல் வரிகளை பாடி சொற்பொழிவாற்றினார். இந்திய வரலாறு, இந்து மத வரலாறு, மற்றும் இந்திய விடுதலை குறித்தும் விரிவாக பேசினார். இந்தியாவின் வரலாற்றை ஐந்து பகுதிகளாக பிரித்து வேத இந்தியா, பௌத்த இந்தியா, ஹிந்து இந்தியா, மஹமதிய இந்தியா மற்றும் ஐரோப்பிய இந்திய என்று அதன் வரலாறுகளை தெளிவாக எடுத்துரைத்தார்.

தான் வாழும் காலமெல்லாம் இந்திய விடுதலை, இந்திய மக்கள், இந்திய சுதந்திரம் என்பதையே உயிர் மூச்சாகக் கொண்டவர் பாரதியார் என்பதற்கு மணலியில் நடைபெற்ற இச்சொற்பொழிவு சான்றாகும்.

பாரதியின் கனவு:

எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

என்ற சமத்துவ குரலை எழுப்பியவர் பாரதியார். இவரது கற்பனை பாரத தேசத்தில் இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைவரையும் உள்ளடக்கிய தேசம் உருவாக வேண்டும் என்று போராடினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைவது இந்து முஸ்லிம் இடையே உள்ள பாகுபாடாகும். முற்காலத்தில் இஸ்லாமியர்களை மகமதியர்கள் என்று குறிப்பிடுகின்றனர். தென்னிந்தியாவின் மகமதியர்களும், இந்துக்களும் ஓர் தாய் மக்களாக வாழ்கின்றனர். ஆனால் வட இந்தியாவில் இவ்விருவர்களுக்கும் இடையே ஒற்றுமையை இழந்து விட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர். இந்துவும் மகமதியரும் ஓர் தேசத்து மக்கள் என்பதையும் மறந்து விட்டனர்.

(மேற்கூறப்பட்ட இக்கருத்துக்கள் பாரதியாரின் உரைநடைகளில் ஒன்றான நமது மகமதிய சகோதரர்கள் எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்துக்களாகும்)

பாரதியார் குறித்து அறியாத செய்திகள்:

பாரதியார் என்றாலே அவர் நாடு, மொழி, பெண்விடுதலை போன்ற தலைப்புகளில் எழுதிய கவிதைகள்தான் பலருக்கு நினைவில் வரும். ஆனால், பாரதியார் ஒரு வேதாந்தி என்பதும் ஆன்மிகத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது என்பதும் பலருக்குத் தெரியாது

ஏசு கிறிஸ்துவை புகழ்ந்து பாடிய கிறித்தவரல்லாத கவிஞர் பாரதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான், எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்; நேசமா மரியாமக்த லேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள். தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்: தேவர் வந்து நமக்குட் புகுந்தே நாசமின்றி நமை நித்தங் காப்பார், நம்அகந்தையை நாம்கொன்று விட்டால்

மேலும் இஸ்லாமியர்கள் வணங்கும் கடவுளான அல்லாஹ் குறித்தும் தனது பாடலில் பாடியுள்ளார்.

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள் எல்லாத் திசையிலுமோ ரெல்லை வெளி வானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன், சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாதபெருஞ்ஜோதி (அல்லா, அல்லா, அல்லா)

கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும் பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும் நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும் எல்லோரும் வந்தேத்துமளவில்யமபயங் கெடச்செய்பவன் (அல்லா, அல்லா, அல்லா)

பாரதியின் இலக்கிய தொண்டு (முக்கிய குறிப்புகள்):

எட்டயபுர மன்னனின் அழைப்பிற்கிணங்க அரசவை கவிஞராக திகழ்ந்தார்.

இளமையிலேயே கவி பாடும் திறமை பெற்றிருந்த இவர் எட்டயபுர சமஸ்தான அரசவையில் பாரதி என்ற பட்டமும் பெற்றார்.

சுதேசமித்திரன் நாளிதழில் துணை ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

மதுரையில் இவர் எழுதிய பாடல்கள் விவேகபானு இதழில் வெளியானது.

1907 ஆம் ஆண்டில் இந்தியா என்ற வார இதழின் ஆசிரியராக பணிபுரிந்தார்.

1908 ஆம் ஆண்டில் சுவதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டார்.

1909 ஆம் ஆண்டு பாரதியின் இரண்டாம் கவிதை தொகுப்பான ஜென்ம பூமி எனும் நூலை வெளியிட்டார்.

1912 ஆம் ஆண்டு கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற கவிதை நூல்களை வெளியிட்டார்.

முடிவுரை:

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் மகாகவி பாரதியார் ஆவார். தனது எளிய தமிழில் பாமர மக்களும் விளங்கும் பொருள் கொண்ட பல பாடல்களை இயற்றி நாடு விடுதலை, நாட்டு மக்கள் நலன் பெற வேண்டும் என்று விரும்பியவர். பெண் அடிமை, சுதந்திரப் போராட்டம், சாதி மத பாகுபாடு, நாட்டுப்பற்று என பல்வேறு கருத்துக்கள் குறித்து பாடல்கள் பல இயற்றியவர். இருண்டு கிடந்த மக்கள் வாழ்வில் தன் எழுத்துக்களால் வெளிச்சம் கொடுத்தவர். தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கவிஞர் பாரதி என்றால் அது மிகையாகாது. பாரதி காட்டிய வழியில் பாரத தேசம் அமைப்போம் என்று உறுதி கொள்வோம்.

மேற்கோள்கள்:

1) பாரதியும் பாரத தேசமும் தமிழறிஞர் பெரிய சாமிதூரன்.

2) பாரதி வாழ்கிறார் - கு.வெ.பாலசுப்ரமணியன்,

3) பாரதியின் உரைநடைகள் தமிழறிஞர் பெரிய சாமிதூரன்.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments