மழைக்காயிதம் | March 2024 | கவிஞர் சூ. சிவராமன்

முன்னேறித் துள்ளும் அலைகளால் செம்படவர்கள் மேட்டு நிலத்தில் வாழ்வை விரித்து உலர்த்தினர்.

சேரிச்சிறுவனின் கப்பலை குடியானவர் தெருக்களில் தவழவிட்டு திடீர்க் குப்பத்திற்கு அழைத்துச் செல்கிறது மழை

மழை தன் உபரியை சிறுவர்கள் வசிக்கும் வீதிகளில் தேக்கி வைக்கிறது.

சூழ்ந்துவிட்ட நீருக்குள் குன்னி நிற்கிறது குடிசை குழிந்த கரங்கொண்ட இயந்திரம் பறிக்கத் துவங்குமொரு குழிக்குள் தத்தளிக்கிறது பிள்ளைப்பூச்சி

தூளிக்குள் நிலம் தாலாட்டுகிற மழையின் துளிகள் எறவாண ஈர்க்குகளில் காய்க்கிறது.

காளான்களின் வரிசையில் ஒரு குட்டிக் காளான் எத்தனைச் சமத்து.

- கவிஞர் சூ.சிவராமன்

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments