தமிழ் நாட்டில் தமிழ் மாதங்களான ஐப்பசி கார்த்திகையில் ஆண்டு தோறும் மழை பொழியும். இந்த தமிழ் மாதங்கள் நடைமுறையில் உள்ள ஆங்கில மாதங்களான அகடோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வருகின்றன. நாள்,வார மற்றும் மாத கணக்கிலும் பெய்யும். விட்டு விட்டும் பொழியும். வழியும் நீரும் வாய்க்கால் வழியே ஓடி நீர் நிலைகளை நிறைக்கும். அதனால்தான் மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. மழையின்றி மாநிலம் இல்லை என்று நான்மணிக்கடிகை நவில்கிறது. நிறையும் நீரால் உழவு முதல் அனைத்து உற்பத்திகளும் உற்சாகமாய் துவங்கும்.
நீர் நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்று புறநானூறு 118 ஆவது பாடல்,
" அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெள் நீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ "
என்று கூறுகிறது, நீளம் குறைந்து கொள்ளளவு அதிகம் கொண்ட எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
நம் இதழ் நாகூர்ப் புராணம் பதிப்பிக்கும் நாகூரில் புது வெள்ளம் முதலில் கால்வாய்களுக்கு வரும், அங்கிருந்து வாய்க்கால் வழியே அமராவதி குளத்திற்கு வரும், அங்கிருந்து செட்டியார் குளத்திற்கு வரும், அங்கிருந்து தங்கச்சி மண்டபம் குளத்திற்கு வரும், அங்கிருந்து ஈச்சங்குளத்திற்கு வரும், அங்கிருந்து வண்ணார் குளத்திற்குச் செல்லும் , அங்கிருந்து பெருமாள் கோயில் குளம் சிவன் கோயில் குளம் இறுதியில் தர்கா குளம் சென்று முடியும், இடையிடையே தொடர்பில் இல்லாத குளங்களுக்குச் சிறு குறு இடை வாய்க்கால் வழியே நீர் சென்று குளத்தை நிறப்பும், ஒவ்வொரு குளத்தைச் சுற்றியும் செடி கொடி மரங்கள் உள்ள தோப்புகள் சுற்றுச் சூழலை சுகமாக்கும்.
முதலில் மதகுகள் இடிக்கப்பட்டன. அடுத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
அக்காலத்தில் கீழை நாடுகளைக் கைப்பற்றும் மேலை நாடுகள் கீழை நாடுகளைக் காலனிகளாக ஆக்கியது போல நீர் நிலைகள் குடியிருப்புகளாக காலனிகளாக மாறிய பரிதாபம்.
சிறுபஞ்ச மூலத்தில் காரியாசான் பொது கிணறு வரத்துகால் மிகை நீர் வெளியேற்று கலிங்கு மதகுகள் அமைப்போர் சொர்க்கம் புகுவர் என்று கூறுகிறார்
மீதமிருக்கும் நீர் நிலைகளைக் காப்பாற்றி புது நீர் நிலைகளை உருவாக்கி வாய்க்கால்களை அடைக்காது காத்து வழிந்தோடும் நீரைக் குளங்களில் நிரப்பி ஆண்டு முழுவதும் நீரைப் பெற ஆவன செய்ய வேண்டும்,
நீர் நிலைகள் வழி செல்லும் காற்றால்மேகம் குளிர்ந்து அவ்வப்பொழுது தேவையான மழையைப் பொழியும், பெய்தாலும் பெய்யும் காய்ந்தாலும் காயும் என்ற நிலை ஏற்படாது.
- கவிஞர் மு. அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam November month magazine 2025

0 Comments