ஜனவரி 12 ஆம் நாள் உலக இளைஞர் நாள்.
விளையும் பயிர் முளையிலே என்னும் பழமொழி பயிர் முளைக்க துவங்கையிலேயே அதன் வளர்ச்சி பயன் எப்படி இருக்கும் என்று கணிக்கும் அறிவுடைய தமிழர் அறிவித்தது.
இந்தப் பழமொழி பயிருக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் பொருந்தும். குழந்தைகள் இளம் பருவத்திலேயே திறமையைத் தெளிவாய் வெளிப்படுத்துவர். அதனை அறிந்து பெற்றோர் வளர்ப்பிலே வலிவும் பொலிவும் பெறும் குழந்தைகள் வரலாறு படைக்கின்றனர் வரலாற்றில் இடம் பெறுகின்றனர்.
" Twinkle Twinkle little star. How I Wonder What you are ? ". இந்தப் பாடலை மொசார்ட் அவரின் 5 வயதில் எழுதினார்.
நாகூர்ப் புராணம் மாத மின்னிதழ் துவக்கி தொடர்ந்து தடைபடாது பதிவிடும் பதிப்பாசிரியர் முஹம்மது சுஹைபிற்கு இதழ் தொடங்கும் பொழுது வயது 19.
லூயிஸ் பிறவியில் பார்வையற்றோர் பயிலும் பிரெய்லி எழுத்து முறையை 20 வயதில் கண்டுபிடித்தார்.
ஆன்மீகத்தில் ஆழ்ந்து சூழ்ந்திருந்த மக்களுக்குச் சொல்ல துவங்கிய பொழுது விவேகானந்தரின் வயது 24.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இளைஞர்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டி உயிரைத் தியாகம் செய்த பகத்சிங்கின் வயது 24.
உலகம் புகழ்ந்த இஸபெல்லா கவிதைக் காவியம் படைத்த ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ் 26 வயதில் இறந்தார்.
29 வயதில் இறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் பார்போற்ற பாடப்படுகிறது.
31 வயதில் இறந்த அண்ணாமலை ரெட்டியார் பாடியதே காவடி சிந்து.
உலகையே திணற வைத்த கணித மேதை இராமானுஜம் 32 வயதில் இறந்தார்.
வேத தமிழ் செய்த மாறன் என்றும் மாறன் சடகோபன் என்றும் இலக்கியங்கள் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் 32 வயதில் இறந்தார்.
உலகாளும் இலக்கோடு புறப்பட்டு பல நாடுகளை வென்ற அலக்ஸாண்டர் 33 வயதில் இறந்தார்.
இளைஞர்களே! இளமையில் துளிர்க்கும் திறமைகளை துணிந்து வெளிப்படுத்தி சாதனை படைத்து வரலாற்றில் இடம் பெற, இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட ,இன்றே எழுக! வென்று சாதனைப் படைத்திடுக! என்றும் எங்கும் உங்களின் பெயர் உரைக்கப்படும்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam January Month Magazine 2026

0 Comments