வங்கியை விஞ்சும் அஞ்சலகம் | February 2026 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 


இந்திய அஞ்சல் துறையை நவீனமாக்கும் நன்முயற்சி நடப்பதாக நாள்தோறும் செய்திகள் செப்பப்படுகின்றன. செப்பு மொழியில் ஒப்புகொள்ளும் திட்டங்கள் குறித்த தெளிவு இல்லை. ஒளிந்து மறைந்து நெளிந்து செய்யும் திட்டங்கள நிறைவேறுவதில்லை. முறைகேடுகள் முனையும் முயற்சியை முறியடித்துவிடுவதை அனுபவத்தில் கண்டும் அதற்கேற்ப திட்டம் தீட்டி வெற்றியுறும் வழியை விழையாததேன்?

இந்தியாவில் 24/3/1766ல் ராபர்ட் கிளைவ் இந்திய அஞ்சலகங்களை உருவாக்கினார். 

1775ல் கல்கத்தா மும்பை தபால் போக்குவரத்து புகைவண்டியில் துவங்கியது. 02/12/1784ல் சிப்பம் Parcel Post துவங்கியது.

1837ல் இந்திய அஞ்சல் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 1/11/1849ல் பதிவஞ்சல் துவங்கியது. 28/5/1859ல் கப்பலில் தபால்கள் எடுத்து செல்லப்பட்டன. 1/10/1871ல் இராணுவ அஞ்சல் பிரிவு ஆரம்பமானது.

அஞ்சல் துறையில் கடித போக்குவரத்து காணாமல் போகவில்லை. துரித அஞ்சல் பட்டுவாடாவிற்கு (Speed post) ஏற்ற முறையில் வீணான பதிவு முறைகளை விட்டொழித்து கணிணி பதிவோடு நிறுத்தினால் தனியார் ஆதிக்கத்தைத் தவிர்க்கலாம். பதிவஞ்சல் பதிவு பார்சல் காப்பீடு (Insurance) தபால் உட்பட அனைத்திற்கும் இது பொருந்தும்.

இந்தியாவில் சுமார் 1,60,000 அஞ்சலகங்கள் உள்ளன. கிராமம் முதல் பெரு நகரஙகள் வரை அனைத்து அஞ்சலகங்களிலும் அனைத்து வங்கி கணக்குகளையும் துவக்கினால் மக்களின் சேமிப்பு எளிதாகும். எளிய நடைமுறைகள் ஏராளமான கணக்குகள் தாராளமாக பெருக பேருதவி புரியும். 

இந்திய அஞ்சல் துறை வங்கிகளைப் பரவலாக்கி பாமர மக்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை அனைவரும் பயனடைய ஆவண செய்ய வேண்டும்.

சேமிப்பு கணக்கு, மாதாந்திர சேமிப்பு கணக்கு, காலவைப்பு கணக்கு, எந்த வங்கிக்கும் பணபரிமாற்றம், எரிவாயு மின் கட்டணம், கைபேசி கட்டணம் செலுத்தல், அரசு மானிய வரவு முதலிய வசதிகள் இருப்பதை விரிவாக விளம்பர படுத்த வேண்டும்.

மக்கள் சேவையே மகத்தான பணி என்ற மகத்துவமான கொள்கையோடு மிகைத்து நின்றது அஞ்சல் துறை. நவீன காலத்தில் தொட்டதெல்லாம் இலாபம் ஈட்ட வேண்டும் என்றே திட்டம் தீட்டும் இந்த காலத்திற்கேற்ப அஞ்சல் துறையை வணிகமயமாக்க வேண்டும்.

வணிக வங்கிகள் கால் தடம் பதிக்காத கிராமங்களிலும் கிளை அஞ்சலகங்கள் உள்ளன. வணிக வங்கிகளுக்கான ஈடான வங்கி சேமிப்பு சேவை அஞ்சலகத்தில் உள்ளன. கிராம மக்கள் பயன்பாட்டிற்கேற்ப எளிதாக்கினால் அடித்தட்டு மக்களின் சேமிப்பும் அரசுக்கு உதவும். அவர்களின் அவசர தேவைகளும் நிறைவேறும். கடும் வட்டிக்கு ஆளாகி அவதியுறும் நிலையும் மாறும்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் (ஆசிரியர் குழு)

Published in Nagore Puranam February month magazine 2026

Post a Comment

0 Comments