மனிதனே வா

நீ கொண்டு வந்த

அர்ச்சனைப் பூக்களை 

ஏற்ற வந்த மெழுகுவர்த்தியை

சடங்குப்பொருட்களை 

சற்றே தள்ளி வை...


சொல்வதைச் 

செவியில் போடு 


மனிதனை நேசி 

சிறந்த வழிபாடதுவே


நேயத்துடன் பேசு

அதுவே

சிறந்த அர்ச்சனை !


பக்தியும் முக்தியும் 

பரவசத்தால் அடைவதல்ல 

பாசத்தால் அடைவது

புரிந்து கொள்


உன் எண்ணங்களை

இருட்டில் தொலைத்து விட்டு

என்னை ஏன் வெளிச்சத்தில் தேடுகிறாய்?


உலக போதையில் 

மயங்கி கிடக்கும் மனிதனே 

தெளிந்து வா 

என் பாதையில்...


கைக்கூப்பி வணங்குமுன்னே

கறை இருந்தால்

கழுவி வா

தழுவி கொள்கிறேன் 


எங்கும் நான் 

எதிலும் நான் 

விளங்கிக் கொள்...


மனக் கதவை

முதலில் திற

கோவில் கதவு

தானாகவே 

திறந்து கொள்ளும்.


- கவிஞர் காஞ்சி கிருபா 

Published in Nagore Puranam February month magazine 2026