இருமும் சுதந்திரம் இல்லை | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | February 2025

தந்தை தாய் என்பதில் தந்தைக்குத் தாயினும் முதலிடம் தந்தது விந்தை இல்லை. சிந்தித்தால் சீரான பதில் உண்டு. தந்தை சொல்லினும் மிக்க மந்திரம் இல்லை என்பது ஈரைந்து மாதங்கள் சுமந்து ஈன்ற தாயினும் சான்றோன் ஆகும் தந்தையே வாழ்வு ஆக்க பூர்வமாய் அமையும் நோக்கம் அறிந்து கல்வியை நோகாது வழங்குவது அதை வழங்குவதைக் குறிக்கிறது.

அந்த தந்தையின் கண்டிப்பில் கற்ற கல்வியால் அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்தேன். பின்னர் துணை அஞ்சலகங்களில் துணை அஞ்சல் தலைவராக பணியாற்றும் பொழுது அஞ்சலகத்தை ஒட்டிய குடியிருப்புகளில் குடியிருப்பது கட்டாயமாகியது அப்பொழுது எங்களுக்கு என் மனைவி குழந்தைகளுக்குத் துணையாக என் தந்தையையும் எங்களுடன் குடியிருப்பில் தங்க வைத்தோம்.

என் தந்தை இருமினால் என் மகளிடம் இருமல் மருந்தைக் கொடுத்து குடிக்க சொல்வேன் என் தந்தை பெயர்த்தி இடம் இந்த வீட்டில் எனக்கு இருமும் சுதந்திரமோ இருமலில் காரி உமிழும் உரிமையோ இல்லை உடனே உன் வாப்பா இருமல் மருந்தைக் கொடுத்து அனுப்புவார் என்று கூறி சிரித்துக்கொண்டே மருந்தைக் குடிப்பார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நன்மைக்கும் பொருந்தும் நான் தற்பொழுது பணி நிறைவு எழுதி என் மனைவி இறந்து விட்டதால் மகள் வீட்டில் தங்கி உள்ளேன்.

மருமகன் நீண்ட காலம் துபாயில் ஒரே குழுமத்தில் தொடர்ச்சியாக பணியாற்றியவர் குடும்பத்தினருடன் துபாயில் இருந்தார். என் மனைவி இறந்ததும் மகள் என்னை துபாய்க்கு அழைத்துச் செல்ல விரும்பினாள்.

நான் காரைக்காலில் பிறந்து காரைக்காலில் படித்தவன். பிரஞ்சு குடியுரிமை பதியும் வாய்ப்பு எனக்கு இருந்தது நான் சிறு வயது முதலே நான் இந்தியன் இந்தியாவிற்கே உழைப்பேன் வேறு நாட்டு குடிமகனாக விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறி இன்று வரை அந்த உறுதியிலிருந்து மாறாது வாழ்கிறேன்.

என் பிடிவாதத்தால் என் மகள் நாகூரில் தங்க நேரிட்டது. என் மருமகனும் எனக்காக அவர் பணி செய்த குழுமம் அவரை விடுவிக்க மறுத்தும் நிலைமையை எடுத்துச் சொல்லி எனக்காக தியாகம் செய்து ஊரிலேயே ஒரு மின் பொருள் கடையை நடத்துகிறார்.

நான் என் மகள் வீட்டில் வாயிலை ஒட்டியுள்ள முன் அறையில் தங்கி உள்ளேன் மற்றொரு வாயிலைக் கடந்து வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

இப்பொழுது மார்கழி தை மாத குளிரில் அடிக்கடி எனக்கு சளி இருமல் ஏற்படுகிறது என் மகள் வீட்டிற்குள் இருந்து சளி மருந்தைக் குடித்தீர்களா? என்று ஓடி வருவாள்.

அன்று என் தந்தை அவளிடம் கேட்ட இந்த வீட்டில் இருமும் சுதந்திரம் எனக்கு இல்லையா? என்ற கேள்வியை திருப்பி கேட்கிறேன்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Published in Nagore Puranam February month magazine 2025

Post a Comment

0 Comments