Nagore Puranam
ஆடு மேயு'மே புல்லுந் தேயு'மே | கவிஞர் சூ. சிவராமன் | February 2025

ஆடு மேயு'மே புல்லுந் தேயு'மே | கவிஞர் சூ. சிவராமன் | February 2025


ஆடு மேயு'மே புல்லுந் தேயு'மே 

அந்தி சாயு'மே வீடு திரும்பு'மே

ப்ரிய மறிகளே நம் கழுத்துகளுக்கான

கத்திகளின் பளபளப்பு குன்றவேயில்லை 

அசைபோட்டு ஆனதென்ன ஆடுகளே 

எத்திசையும் அதிரப் பாடுங்கள் 

ஆடு மேயு'மே புல்லுந் தேயு'மே 

அந்தி சாயு'மே வீடு திரும்பு'மே மே மே மே மே...

பரிவோடு நீட்டும் இலைக்கொழுந்துகளை 

அரைத்துத் தள்ள எஞ்சியதோ 

புழுக்கைகள் குட்டைச்சுவர்களில் ஏறிக் 

குதித்த பலன் கால்கட்டு எல்லை தாண்டி 

தலை நுழைக்கப் பெற்றதோ 

கழுத்துக்கிட்டி தேசத்தந்தையின் உணவு 

உம் பாலல்லவா உங்கள் புத்தி 

அகிம்சைப்புத்தி அந்த உதவாப் 

பெருமையை விட்டொழியுங்கள் 

ஆடு மேயு'மே புல்லுந் தேயு'மே 

அந்தி சாயு'மே வீடு திரும்பு'மே மே மே மே மே...

அடைய ஓர் பொன்னுலகு உண்டென்று

மனித மந்தைக்குள் ஓட்டி வந்தவனை

கூட்டி வந்தென்ன லாபம் தோழர்காள்

காலத்தே குளம்பு கிள்ள மறந்து அது

கால்களில் கொம்பென நீளக் கெந்திக்

கெந்தி நடப்பதுவோ நடப்பு காடுவிட்டு

வீடுவந்து கால்நொந்து தீயில் வெந்து

மரிப்பதா மறிகளின் நெறி அசமந்தமாய் இருந்து 

புல் மேய்ந்து புலவு நாறும் குழம்பாய்

மாறும் செய்கைக்கு விதியென வீதிசுற்றி மேய்தல் 

தகுமோ அசைவர்களோ பெருந்திரள் அதன் தலைமைக்கோ 

இரு குரல்(பட்டை,நாமம்) அதிக காரம்

உணவைக் கெடுக்கும் அதிகாரம்

உலகைக் கெடுக்கும் உழைப்பின் உப்பு.

- கவிஞர் சூ. சிவராமன்

Post a Comment

0 Comments