அழகிய வாழ்க்கை தானே வந்து அருகில் நின்று சிரிப்பதில்லை - அது அற்புதம் காட்டி பொற்பதம் தாங்கி ஆற்றல் சிறகை விரிப்பதில்லை.
பழகிய நல்ல பண்புகள் ஒன்றாய் படைத்திட மனத்தில் உருவாகும் அது பற்பல நிலையில் உலக அரங்கில் பயன்வழி ஏற்றுக் கருவாகும்.
இறையருள் நாடி இதயமும் கூடி என்றும் தொழுகை முதற்படியாய் - அது இருக்க செழித்து ஏற்றிடும் அருளை எடுத்து வழங்கிடும் படிப்படியாய்.
குறைவிலா எண்ணம் கூடிடும் வண்ணம் கொடுக்கும் சிந்தனை அணியாக - நம் கொள்கைப் பிடிப்பாய் ஆக்கி வைத்திடில் கோடி நன்மைகள் மணியாக.
கனிவாம் அன்பைக் காலம் முழுவதும் கண்ணியம் ஏற்று கடமையென - நாம் கைக்கொண் டாலே வாழ்க்கை இனிக்கும் காற்றும் வாழ்த்திடும் உரிமையென!
மனித நேயமும் மாண்புறு சேவையும் மக்கள் நலனே பெரிதாக நாம் மதித்துப் போற்றியே விதித்து வாழ்ந்தால் மேன்மை இமயம் அருகாக..
- கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ சே. அப்துல் லத்தீப்

0 Comments