Nagore Puranam
பறிக்கப்படும் நான் | மு. முஹம்மது சுஹைப் | March 2026

பறிக்கப்படும் நான் | மு. முஹம்மது சுஹைப் | March 2026

 


பிறந்ததிலிருந்து ஒவ்வொன்றையும்

எனக்கு கொடுத்துக் கொடுத்து பறிக்கிறார்கள்…


மூத்த பிள்ளையாய் பிறந்ததற்காக

மூச்சு முட்ட முத்தம் கொடுத்தவர்கள்,

மற்றொரு பிள்ளை பிறந்தவுடன்

முத்தமெல்லாம் கொஞ்சம் பறித்து

பகிர்ந்து கொடுத்தனர்.


பேருந்தில் செல்லும் போதெல்லாம்

ஜன்னலோர இருக்கை எனக்கு கிடைக்க,

அதனை ரசிப்பதற்குள்

மற்றொரு முதியவர் வந்துவிட்டார்.

“அவருக்கு உட்கார இடம் குடு” 

என சொல்லி எனக்கான ஜன்னலோர 

இருக்கையைப் பறித்து விட்டனர்.


பள்ளிப்படிப்பில் எப்பொழுதும் 

முதல் மதிப்பெண் பெறும் நான்,

ஒரேயொரு தேர்வில்

ஒரு மதிப்பெண் குறைந்ததற்காக

“முதல் மாணவன்” என்ற பட்டம் 

என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.


பள்ளி படிப்பை முடித்த பின்

“உனக்கான கல்லூரி படிப்பைத் 

தேர்ந்தெடுக்கும் உரிமை

உனக்கு முழுதும் உண்டு”

என்று சொல்லிவிட்டு,

“பொறியியல் துறையில் தான் 

ஊதியம் அதிகம் ”

என்று சொல்லி

என்னுடைய ஆசையை பறித்தார்கள்.


கல்லூரி படிப்பை முடித்த பின்

“திருமண வாழ்க்கைக்கும் 

உன் காதலுக்கும்

ஒருபோதும் நாங்கள் எதிரி இல்லை”

என்று சொல்லுவார்கள்.

ஆனால்,

நான் நேசித்தவளைக் கரம் பிடிக்க

பெற்றவர்களிடம் காதலை 

எடுத்துரைக்கும் போது

“ஐயோ! அவள் வேறு சாதி!”

“ஐயோ !அவள் வேறு மதம்!”

“அவங்க என்ன ஆளுங்க?”

என சொல்லி

என் காதலைப் பறிப்பார்கள்.


ஒருவேளை

 நான் பெண்ணாக பிறந்திருந்தால்,

திருமணம் பேசி புகைப்படம் பார்த்து

“இவர் தான் என் கணவர்” என்று

என் எண்ணத்தில் நிலைக்க செய்து,

பின்னர்

“பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீங்க?”

என சொல்லி

வரதட்சணையால்

என் திருமண கனவைப் பறிப்பார்கள்.


திருமணமாகி குழந்தையும் பிறந்த பின்,

வாங்குகிற ஊதியம் போதாமல் போனதால்

வங்கி கடனோடு வட்டிக்கு வாங்க தொடங்கி,

வரும் காசு வாயிற்கும் வயிற்றிற்கும் 

என்ற நிலையில்

அப்போது வட்டியும் சேர்ந்து கொண்டு

வாழ்க்கையைப் பறிக்கும்.


வயதாகி கூனிக்குறுகி

கிளப் பருவம் எய்திய போது,

“நாம் பெற்ற பிள்ளை நம்மை

பார்த்துக் கொள்ளும்”

என்ற நிலை மாறி

“இதுக்கு மேலேயும் 

உங்களைப் பார்த்துக்க

என்கிட்ட தெம்பு இல்ல”

என்ற பிள்ளைகளின் சொல்,

இத்தனை வருட பாச , நேச 

நம்பிக்கைகளைப்

பறித்துக் கொண்டது.


எத்தனை ஏமாற்றங்கள் 

எவ்வளவு வலிகள் 

என் ஏக்கங்கள் எல்லாம்

ஏக்கங்கலாகவே முடிந்தன.


இல்லை என்பதனை 

ஏற்கும் மனம் தான்,

கொடுத்து கொடுத்து 

பறிப்பதனை 

ஏற்க மறுக்கிறது.


இவ்வுலகில் 

பிறந்ததாலோ என்னவோ ?

என் வாழ்க்கையில்

ஒவ்வொன்றையும்

என்னிடம் கொடுத்து கொடுத்து

பறிக்கிறார்கள்…

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam March month magazine 2026


Post a Comment

0 Comments