உலகநாதன் வீடு அமர்க்களப்பட்டது. டிஸ்டம்பரும் பெயிண்டும் அடித்து வீடு புது பொலிவுடன் தோற்றம் அளித்தது.
தனத்தம்மாள் பந்தக்கால் நடுவதிலிருந்து பலகாரம் செய்வதுவரை எது எது எப்படி இருக்க வேண்டும் என்று சுற்றியிருந்தவர்களிடம் விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தாள்.
உலகநாதன் ஆந்திராவில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆந்திராவில் யாரும் போக பயப்படும் காட்டுப் பகுதிகள் மாநிலத்தின் தள்ளிப் போன தாலூகாக்களில் எல்லாம் வேலை பார்த்தவர் உலகநாதன். அந்தப் பகுதிகளுக்கு மேலதிகாரிகள் அடிக்கடி வரமாட்டார்கள். இவர்தான் ராஜா. அதைப் பயன்படுத்தி கொள்ளையாக கொட்டிக் கொண்டவர் உலகநாதன்.
தஞ்சாவூரில் புது காலனிகள் அனைத்திலும் அவரின் வீடு இருக்கும்.அவரின் பெயரில் மனைவி பெயரில் மகள் பெயரில் பினாமி ஒன்பது வீடுகள் . தங்க நகைகளும் வங்கி பணமும் வளர்ந்து கொண்டே வருகின்றன.அவர்தான் ஓய்வு பெற்றாரே தவிர அவரின் வருமானம் குறையவில்லை. மாறாக வாடகையாக வட்டியாக பெருகி கொண்டே இருக்கிறது.
உலகநாதன் தம்பதியருக்கு ஆஸ்திக்கு ஒரு மகன் இல்லை. ஆசைக்கு ஒரு மகள் மட்டுமே.அவளும் நன்றாக படித்தாள். முதுகலைப் படித்து வங்கியில் சேர்ந்தாள். சில ஆண்டுகளிலேயே அத்தனை தேர்வுகளிலும் தேறி அதிகாரி ஆனாள்.
அவரின் மகள் வனிதா சிகப்புமிலை கருப்புமிலை மாநிறம். இலட்சணமாய் பார்க்க அழகாய் இருப்பாள். நவீன நாகரிக உடைகளும் அவள் நளினமும் அவளின் கவர்ச்சியை அதிகரித்தன. ஒல்லியான மெல்லியலாள். ஒய்யார சிங்காரி. இப்படியெல்லாம் இளவட்டங்கள் அவளுக்குப் பட்டம் சூட்டினர்.
அவளுக்குத் திருமணம் செய்ய நினைத்தனர் பெற்றோர்.வந்த வரன்களை எல்லாம் அவள் தட்டிக்கழித்த பொழுது பெற்றோருக்குப் பெருங் கவலை ஏற்பட்டது.
ஒரு கல்லூரி விரிவுரையாளர் கருப்பென்று சொல்லி தள்ளிவிட்டாள் வினிதா. ஒரு பஸ் முதலாளியின் மகன் முதுகலைப் படித்தவன், அந்த பஸ் கம்பெனியின் நிர்வாகி தடி என்று சொல்லி அந்த வரனைப் பொடியாக்கிவிட்டாள் நொடியில். ஒரு மருத்துவர் உம் என்ற முகம் இவரைக் கட்டி கொள்வதை விட சும்மா இருக்கலாம் என்று சொல்லிவிட்டாள். மற்றொரு வங்கி எழுத்தர். நானோ அதிகாரி அவர் எழுத்தர். எப்படிப் பொருந்தும் என்று பொரிந்தாள்.
அவள் யாரையேனும் காதலித்தால் அவனையே அவளுக்கு மணமுடிக்கவும் தயாராயினர் பெற்றோர்.
அவள் யாரையும் காதலிக்கவும் இல்லை. பேதலித்தனர் பெற்றோர்.
இந்த நிலையில் பெங்களூரிலிருந்து பெண் பார்க்க வந்தனர். பையன் பெங்களூர் மெட்ரோ வாட்டரில் இன்ஜீனியர். கை நிறைய சம்பளம். பைய நிறைய தினமும் வரவும் வரும். பையன் வாட்டசாட்டமாய் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு உள்ளே வரும்பொழுதே அனைவரையும் அசத்தி விட்டான். அறைக்குள் இருந்து அவனைப் பார்த்த வனிதாவும் மாடத்திலிருந்து சாடையாக இராமனைப் பார்த்த சீதையைப் போலானாள்.
வழக்கமான சம்பிரதாய சடங்குகள் முடிந்தன. தனத்தம்மாள் வாயெல்லாம் பல்லாக சிரித்து உலகநாதன் காதில் முணுமுணுத்தாள்.
பேச்சு வார்த்தை துவங்கியது. உலகநாதன் உடனே எதையும் ஒத்துகொள்ளாமல் கொஞ்சம் பேரம் பேசி ஒத்துகொண்டார். அவர்கள் புறப்பட எழுந்தபொழுது என் சொத்துகளின் வாரிசு அவள்தான் ஒரே மகள் என்றார்.
மாப்பிள்ளையின் அம்மாவும் புன்னகை மாறாமல் நாங்கள்தான் சம்மதம் சொல்லி விட்டோமே சாஸ்திரிகளைக் கலந்து தேதி குறித்து எழுதுகிறோம். கல்யாண ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு புறப்பட்டாள்.
உலகநாதன் வீட்டில் கல்யாணம் கலை கட்டியது. காரியங்கள் தடபுடலாய் நடந்தன.
பத்துநாள் கழித்துவந்த மடலைப் படித்துவிட்டு சோர்வாக சோபாவில் சாய்ந்தார் உலகநாதன்.
பயில்வான் போல இருக்கும் பையனுக்கு ஈர்க்கங்குச்சிமாதிரி இருக்கும் உங்கள் பெண்ணுக்கும் பொருத்தப்படாது என்று எல்லாரும் சொல்கிறார்கள். வருத்தப்பட வேண்டாம்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam March month magazine 2026

0 Comments