ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நளன் தம்பதியினர் விவசாயக் கூலி வேலை செய்தும், சொந்தமாக விவசாயம் செய்தும் பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்களுக்குச் சிவசேனா என்ற மகள் இருந்தாள். ஆண்டுக்காண்டு விவசாயத் தொழில் நலிவடைந்து வருவதால், தங்கள் மகளை நன்றாகப் படிக்க வைத்து எப்படியாவது ஒரு பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவளும் நன்றாகப் படித்தாள்.
தினமும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்று வருவாள். வழியில் இரண்டு இரயில் தண்டவாளங்களைக் கடக்க வேண்டும். வசதிகள் குறைவாக இருந்தாலும், அன்பு நிறைந்த அவர்களது வாழ்க்கை வளமாக இருந்தது. தினமும் இரவு உணவு உண்ணும் போதெல்லாம் நளன், "உன்னை எப்படியாவது கலெக்டர் ஆக்கி விட வேண்டும் அம்மா” என்பார் மகளும் கண்டிப்பாக “ உங்கள் ஆசையை நிறைவேற்றுவேன் அப்பா' என்பாள்.
நளனும் நளினியும் விவசாய வேலை முடித்துவிட்டு, மாலை வேளையில் இரயில் நிலையங்களில் மிதிவண்டி கூடையில் முறுக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.
ஒருநாள், முறுக்குக் கூடை தவறித்
தண்டவாளத்தில் விழ, அதை எடுக்க நளன் முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக இரயில் வருவதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற நளினி பாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் இரயிலின் வேகத்திற்கு இரையாயினர்.
பள்ளி முடிந்து திரும்பிய சிவசேனா, தண்டவாளத்தில் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டாள்.
அங்கே சிதறிக் கிடந்த அம்மாவின் சேலைத் துண்டும், முறுக்குக் கூடையை விடாமல் பிடித்திருந்த அப்பாவின் துண்டிக்கப்பட்ட கைகளும் அவளைக் கதற வைத்தன.
ஆறாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமிக்கு அன்று உடைந்தது பெற்றோரின் உடல்களும் முறுக்குக் கூடையும் மட்டுமல்ல. அவளது கலெக்டர் கனவும்தான்...
அத்தனைத் துயரத்திலும் அவளது தாத்தா மட்டுமே அவளை அரவணைத்துக் கொண்டார்; மற்ற உறவுகள் எல்லாம் யாரோ போலக் கடந்து சென்றனர். "உன் அம்மா அப்பா இறந்தது உன் கலெக்டர கனவுக்காகத்தான்" என்று தாத்தா அவளுக்கு உணர்த்தினார். அழுது வீங்கிய விழிகளில் அன்று ஒரு வைராக்கியம் பிறந்தது.
தாத்தாவின் அரவணைப்பில் சில ஆண்டுகள் கடந்தன.
இருப்பினும் தினமம் தண்டவாளங்களைக் கடக்கும் போதெல்லாம் அந்தப் பிஞ்சு மனம் பெற்றோர் பாசத்திற்காக ஏங்கித் தவித்தது.
ஒருமுறை மிதிவண்டிபஞ்சர் ஆகி நின்றபோது, இருட்டிய அந்த மாலை வேளையில் தண்டவாளங்களைக் கடக்கையில், அவள் அப்பா கைகளில் லாந்தர் விளக்கோடு காத்திருந்த அந்த நாட்கள் கண்களில் ததும்பின.
அவள் பூப்பெய்தியபோது, சீர் செய்யவோ நலம் விசாரிக்கவோ ஒரு பெண் உறவுகள் கூட வரவில்லை. தாத்தா ஓர் ஆணாக இருந்ததால், அவளால் சில மாற்றங்களை அவரிடம் விவரிக்க முடியவில்லை.
பெண்மைக்குரிய அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லாத நிலையில், ஹார்மோன் மாற்றங்கள் என்று அறிவியலின் துணையோடு அந்த நாட்களை இயல்பாகக் கடந்தாள்.
ஒரு நாள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடந்தது. தலைப்போ "வயதுகள் அறியாத வலிகள்”, சிவசேனாவின் வாழ்க்கைச் சூழல் அதற்குக் கச்சிதமாகப் பொருந்தியது.
பேச்சுப் போட்டியில் தன் வாழ்வின் நிகழ்வுகளை இயல்பாகப் பேசிப் பரிசுகள் பெற்றாள்.
பரிசு பெற்ற அனைவரையும் பாராட்டவும், கொண்டாடவும் பெற்றோர்கள் இருந்தார்கள். இவள் மட்டும் கொண்டாட்டங்களின் வயதைத் தாண்டிய வலிகளோடும், இலைகள் உதிர்ந்த மரங்களாயும் வாட நின்றாள்.
பள்ளியில் வகுப்பறையில் கூட அனைவரும் அவளை ஓர் அனாதை என்றே புறக்கணிக்கத் தொடங்கினார்கள்;
ஒதுக்கத் தொடங்கினார்கள்.
அத்தனைப் புறக்கணிப்புகளையும் நினைத்து கவலைப்படாமல் அவள் கனவிலேயே கவனம் செலுத்தினாள்.
இருப்பினும் அவ்வப்பொழுது தன் நிலையும் தனிமையும் நிலைக்குலையச் செய்து விடுவதால் அழுதிடுவாள்.
எல்லாவற்றையும் எளிதில் கடக்கும் பக்குவம் அவள் வயதில் இல்லை என்றாலும், மனதில் வைராக்கியத்தோடு இருந்தாள்.
இருந்த ஓர் உறவும் கரைந்துவிட, கலெக்டர் என்ற கனவை மட்டும் துணையாகக் கொண்டு பயணத்தைத் தொடங்கினாள். பெற்றோர் சேர்த்து வைத்த சொற்ப பணத்தை எடுத்துக் கொண்டு, ஐ.ஏ.எஸ் பயில வேறு மாநிலத்திற்குச் சென்றாள்.
புதிய இடம், புதிய மொழி, புதிய சூழல் எனத் தயக்கம் இருந்தாலும், காலத்தின் கட்டாயம் அவள் கனவுகளுக்காகக் காற்றில் விட்ட பட்டம் போல அவளைப் பறக்க வைத்தது. யாரோ ஒருவரிடம் வழி கேட்டு, பசியால் மொழி தெரியாமல் அடைந்த வலிகள் மறறும் வயதின் காரணமாக வருவோர், போவோரெல்லாம் வசப்படுத்த நினைத்த நாட்களையெல்லாம் கடந்து, அந்த மாநிலத்தில் ஒரு தமிழர் நடத்தும் தேநீர்க்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள்.
தன் சொந்த மாநிலத்தவர் என்பதாலும், அவளது நிலையைக் கண்டு இரக்கம் காட்டியதாலும் கடைக்காரர் அவளைச் சேர்த்துக்கொண்டார். கடையில் பணிகளைப் பார்ப்பதும் படிப்பதும் அவள் வேலையாக இருந்தது. முதலில் இளங்கலைப் படிப்பை ஒரு கல்லூரியில் அவள் பள்ளி மதிப்பீடு அடிப்படையில் இலவசமாகப் படித்து முடித்தாள். பின் ஐ.ஏ.எஸ் படிப்பிற்கு வேலைப் பார்த்துக் கொண்டே படித்தாள்.
(தொடரும்...)
- ச . கார்த்திகேயன்

0 Comments