Nagore Puranam
கனவுகளுக்காகச் சிந்திய கண்ணீர் (தொடர் - 02) | Vol.4, Issue 6 - JUNE 2026 | கவிஞர் ச . கார்த்திகேயன்

கனவுகளுக்காகச் சிந்திய கண்ணீர் (தொடர் - 02) | Vol.4, Issue 6 - JUNE 2026 | கவிஞர் ச . கார்த்திகேயன்


ஒருநாள் கடைக்கு வந்த தொழிலதிபர் ஒருவர். சிவசேனா ஐ.ஏ.எஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். 'தமிழா நீ? கலெக்டர் ஆக ஆசையா?" எனக் கேட்டார். 'இது என் ஆசையல்ல சார், என் பெற்றோரின் கனவு. அவர்களின் ஆத்மா சாந்தியடைய நான் கலெக்டர் ஆக வேண்டும்' என்றாள். அவள் நிலையை உணர்ந்த அவர், 'என் வீட்டில் வேலை செய்துகொண்டே படி' என்று அவளுக் குப்புகலிடம் அளித்தார்.

ஆனால் விதியோ அங்கேயும் சோதித்தது.

அந்தத் தொழிலதிபரின் மகன் சிவசேனா மேல் காதல் கொள்ளத் தொடங்கினான், கண்ணீரோடு கனவைச் சுமக்கும் அவளுக்குக் காதலில் எப்படி நாட்டம் வரும்? அவனிடம் எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவள் அவளாகவே தொடர்ந்தாள் ஒருநாள் அவன் காதலைச் சொல்லும்போது அவர் தந்தை அதைக் கண்டுவிட்டார். தன் கௌரவத்திற்குப் பங்கம் வந்துவிடுமோ என எண்ணி, சிவசேனாவை வீட்டை விட்டு வெளியேற்றினார்.

மீண்டும் ஒருமுறை உலகம் அவளைத் தெருவில் நிறுத்தியது. எத்தனை முறை இந்த உலகம் அவளைத் தனிமையில் நிறுத்தினாலும் கலங்காமல் கனவை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தாள். ஒரு மகளிர் விடுதியில் சேர்ந்து தன் படிப்பைத் தொடர்ந்தாள். நான்கு மாதங்களில் கையில் இருந்த பணம் தீர்ந்து போக, விடுதி நிர்வாகம் அவளை வெளியேறச் சொன்னது. எங்கு செல்வது எனத் தெரியாமல், தான் வந்து இறங்கிய அதே இரயில் நிலையத்திற்கு சென்றாள், அங்கே அமர்ந்து அழுதவள், பின் ஒரு முடிவுக்கு வந்தாள். தன் பெற்றோர் செய்த அதே முறுக்கு வியாபாரத்தைப் பகுதி நேரமாகச் செய்யத் துணிந்தாள்.

பகலில் படிப்பு, மாலையில் உழைப்பு என அந்த இரயில் நிலையமே அவளது உலகமானது. முறுக்கு விற்கும் போது தான் தன் பெற்றோரின் வலியையும் உழைப்பையும் அவள் முழுமையாக உணர்ந்தாள். பல பகல்களைப் பசியோடு, ஐ.ஏ.எஸ் கனவால் புத்தகத்தின் மூலம் அறிவுப் பசியை மட்டும் தீர்த்துக்கொண்டாள். எல்லா இரவுகளிலும் எதிர்பாலினத்தவரிடம் தன் இயல்பைக் காத்து அச்சத்தோடும் கடந்தாள். ஈர உடைகளை அணிந்த எத்தனையோ நாட்கள்... அவளுக்கு இருந்த இரண்டு உடைகளில் இருந்த நிலை அதுதான். கடின உழைப்பிற்குப் பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வந்தன. சிவசேனா மாநிலத்திலேயே முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றாள்!

கலெக்டர் தேர்வின் அந்த நேர்காணலுக்குச் செல்கிறாள். அவளிடம் கேட்கப்பட்ட கேள்வி : "நீங்கள் ஏன் கலெக்டராக விரும்புகிறீர்கள்?" அவளின் வார்த்தைகள் அவர்களின் நெஞ்சை நெகிழவைத்தது.

"எல்லாப் பூக்களும் மாலையாவதில்லை, நந்தவனத்தில் வளர்வதோ, மயானத்தில் வளர்வதோ வாசனை ஒன்றுதான். மயானதில் வளர்ந்த பூவாக எண்ணித் தூக்கி எறிந்த சமூகத்தை நான் சலித்துக் கொள்ளவில்லை. நான் பூவின் இயல்பிலே வாசனயைப் பரப்பிச் சமூகத்தைத் தாங்கிப்பிடித்துக் கட்டமைக்க வேண்டும். என்னைப்போல மயானத்தின் பூக்களாக இருக்கும் அனைவருக்கும் வாசம் உண்டு எனச் சமூகத்திற்கு உணர்த்த உதவிக்கரம் நீட்ட வேண்டும் ...அதற்காக!"

மற்றுமொருவர், "வேறு எதற்காக வேண்டும் ? என்று கேட்க:

"வறுமையின் விளிம்பில் வாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாயப்புக் கொடுத்தால் ஒருநாள் வாகை சூடுவார்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் கூடக் கனவாகிப் போன கடைசிக் கிராமங்களில் இருப்பவனின் மகளுக்கும் மகனுக்கும் கனவுகள் இருக்கின்றன. இங்குப் பணத்தை வைத்துப் பாராட்டுகள் வாங்குவோரை விட, திறமையை வைத்து வாய்ப்புகளின்றிப் போராடும் அனைவரையும் ஒருநாள் சிவசேனாவாக மாற்ற அத்தனை முயற்சிகளையும் எடுப்பேன், ஐயா, அதிகாரம் என்பது மற்றவர்களை ஆள்வதற்காக அல்ல, என்னைப் போன்றவர்களின் அழுகையைத் துடைப்பதற்காக என்று நான் நம்புகிறேன். என் கையில் இருக்கும் 'பேனா' போடும் கையெழுத்து, ஒரு ஏழையின் வீட்டு வாசலில் அரசாங்கத்தின் ஒளியைக் கொண்டு சேர்க்க வேண்டும். என் பெற்றோரின கைகள் தண்டவாளத்தில் முறுக்கு கூடையைப் பிடித்திருந்தன; இன்று அவர்களின மகளின் கைகள் அதே போன்ற பல்லாயிரம் குடும்பங்களைக் காக்கும் அரசாங்கத்தின் பேனாவைப் பிடிக்க விரும்புகின்றன."

நேர்காணல் அதிகாரி: "நீங்கள் இப்போதும் முறுக்கு விற்றதைப் பெருமையாகச் சொல்கிறீர்களே, அது ஏன்?"

சிவசேனா: "நிச்சயமாக ஐயா! அந்த முறுக்குக் கூடைதான் எனக்கு உழைப்பின் மதிப்பைக் கற்றுக்கொடுத்தது. என் அப்பா இரயில் தண்டவாளத்தில் விழுந்த கூடையை எடுக்கமுயன்றபோது தன் உயிரை இழந்தார்.

அந்தக் கூடை வெறும் வியாபாரம் அல்ல, அது என் பெற்றோரின் உயிர். இன்று நான் அணிந்திருக்கும் இந்தச் சீருடையை விட, அன்று நான் சுமந்த அந்த முறுக்குக் கூடை எனக்குக் கூடுதல் கௌரவத்தைத் தருகிறது. ஏனெனில், அது நேர்மையான உழைப்பால் உருவானது."

அவளுக்கு நேர்காணல் முடிந்த பின் அவளது சொந்த மாவட்டத்திலேயே பணி நியமன ஆணைக் கிடைத்தது.

'கலெக்டர்' என்ற பெருமையோடு முறுக்குக் கூடையைச் சுமந்தபடி தன் ஊர் இரயில் நிலையத்தில் இறங்கினாள். அன்று சிறுமியாக மிதிவண்டியை நகர்த்திய அவள், இன்று காவலர்கள் பாதுகாப்பில் காரின் ஓசைக்கிடையில் கம்பீரப் பெண்ணாக இறங்கினாள். கண் கலங்கியபடி தண்டவாளத்தைத் தொட்டுக் கும்பிட்டு பெற்றோரின் ஆசியைப் பெற்றாள். அதன் பிறகு பூட்டியிருந்த தன் வீட்டிற்குச் சென்று, அம்மாவின் வண்ணக்கோலத்தரையும் அப்பாவின் மண்வெட்டியையும் பார்த்து மார்போடு அணைத்துக் கண்ணீர் வடித்தாள். கனவுகளை அடைந்தாள். கடந்த நாட்கள் யாவும் அவளுக்கு ஒரு கனவைப்போல் இருந்தன.

அவள் கலெக்டராகப் பொறுப்பேற்ற அன்று, பூக்கள் சுமந்து வந்த உறவுகளை அவள் பொருட்படுத்தவில்லை. வாடியபோது வீசி எறிந்தவர்களெல்லாம், வாசம் வீசும் மலர்களோடு வாசலுக்கு வருவது வசந்தம் வந்த பின்னரே...

உறவுகள் உதவி செய்யத் தேவையில்லை ,உடனிருக்கிறேன் என்று சொல்லுங்கள் போதும். மரங்கள் தாங்கிப் பிடித்தால் போதும், கொடிகள் தானாகப் படர்ந்தோடும்.

ஆட்சியர் அலுவலகத்தில் அவள் இட்ட முதல் கையெழுத்து தனது ஊரில இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே.

இரண்டாம் கையெழுத்து நடைபாதை வியாபாரிகளுக்காகத் தன் சொந்தச் செலவில் நிரந்தரக் கடைகளைக் கட்டி தந்து அதற்கு 'நளன் - நளினி' எனப் பெயர் சூட்டினாள்.

மூன்றாவதாக ஓர் இலவச மகளிர் விடுதியைத் திறந்தாள்.

அடித்தட்டு மக்களின் துயரம் தீர்க்கும் போதுதான் ஒரு பதவி புனிதமடைகிறது. சிவசேனா தன் கனவுக்காகச் சிந்திய கண்ணீர், இன்று பல தலைமுறைகளின் கண்ணீரைத் துடைக்கத் தொடங்கியது

Post a Comment

0 Comments