காலை ஆறு மணி இருக்கும். சென்னையின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பதினைந்தாவது மாடி பால்கனியில் நின்றிருந்தான் சூர்யா. கையில் இருந்த காஃபி ஆறிக்கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தால் கான்கிரீட் சுவர்கள் ஒருபுறம், புகையைக் கக்கிக் கொண்டு நகரும் வாகனங்களின் சத்தமும் மறுபுறம் தூரத்தில் தெரியும் அலைபேசியின் கோபுரங்களும் அவன் கண்களில் பட்டுக் கொண்டிருக்க, இயற்கையின் ஒரே அடையாளமாக, பக்கத்து வீட்டு மின்கம்பத்தின் மேல் ஒரு காகம் மட்டும் ஒற்றையாய் அமர்ந்திருந்ததைப் பார்த்துக் காெண்டிருந்தான்..

அவனுடைய மடிக்கணினியில் மின்னஞ்சல்கள் வந்து குவியும் சத்தம் கேட்கத் தொடங்கியது. இலக்குகளை முடிக்க வேண்டிய நிர்பந்தம், மேலாளரின் கேள்விகள் எனக் கடந்த சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை இயந்திரம் போல ஓடிக்கொண்டிருந்தது

மன அழுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த அந்தத் தருணத்தில்தான், அவனுக்குள் இருந்த அந்தப் பழையப் புகைப்படக் கலைஞர் எண்ணம் விழித்துக் கொண்டது. அலமாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த தன் புகைப்படம் எடுக்கும் கருவியை கையில் எடுத்தான். "இனிமே இங்க இருந்தா பைத்தியம் பிடித்துவிடும்...' என்று எண்ணி, ஒரு வாரம் விடுமுறை போட்டுவிட்டு மகிழுந்தைத் தான் சிறுவயதில் வாழ்ந்த கிராமத்தை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.

நள்ளிரவில் தன் சொந்த கிராமத்தை அடைந்தான், பழைய ஓட்டு வீட்டில் இரவு கழிந்து மறுநாள் விடிந்தது.

சென்னைப்போல அலரச் சத்தமோ, நகரத்து இரைச்சலோ அங்கு இல்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் வாசல் தெளிக்கும் சத்தமும், தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணியோசையும் சூர்யாவை மெதுவாக எழுப்பின.

படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தவனுக்கு, அந்தக் கிராமத்து காலைப் பொழுது பச்சைப்பசேலெனக் காட்சியளித்தது. இரவு பெய்த பனித்துளிகள் வயல்வெளிகளின் மேல் இன்னும் அப்படியே தங்கியிருந்தன. சூரியனின் இளங்கதிர் வீச்சுகள் அந்தப் பனித்துளிகளின் மேல் படும்போது, நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் வைர முத்துக் கோர்த்தது போல மின்னுவதைக் கண்டு சூர்யா ரசித்து நின்றான்.

காற்று சற்றே சிலிர்ப்பாக வீசியது. அந்தப் பனிக் காற்றில் மண்வாசனையும், வேப்பம்பூவின் வாசனையும் கலந்து வீசிய அந்த ஒரு நொடி, அவனுக்குள் இருந்த எல்லா சோர்வையும் மொத்தமாகத் துடைத்தெறிந்தது.

தெருக்களில் மாடுகள் கழுத்து மணியை ஆட்டியபடி மேய்ச்சலுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தன.

வீடுகளின் வாசல்களில் பெண்கள் அரிசி மாவினால் இடப் பட்ட கோலத்தின் மேல் சில சிட்டுக்குருவிகளும், எறும்புகளும் தங்களின் உணவைக் கைப்பற்றிக்கொண்டிருந்தன. புகையில்லாத அந்த நீல நிற வானத்தில பறவைகள் கூட்டமாக "வி" வடிவத்தில் சிறகடித்துப் பறந்த காட்சி, இயற்கையே வரைந்த ஒரு பிரம்மாண்டமான ஓவியம் போல இருந்தது.

சூர்யா தன் கைகளில் ஒரு மண் குவளையில் சுடச்சுடக் கிடைத்த பசும் பாலை வாங்கிக் குடித்தபடி அந்த விடியலைத் தன் மனதுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டான். நகரத்தில் எத்தனையோ ஐந்து நட்சத்திர உணவகங்களில் குடித்த காபியை விட, இந்த வயல்வரப்பு விடியலில் குடித்த பாலும், இந்தத் தூய்மையான காற்றும் அவனுக்குக் கொடுத்த நிம்மதி அளவிட முடியாதது.

கேமராவைத் தோளில் மாட்டிக்கொண்ட வயல்வெளிப் பாதையில் நடக்கத் தொடங்கினான் சூர்யா. அவன் காலடி எடுத்து வைத்தபோதே. குளிர்ந்த காற்று முகத்தில் அறைந்தது. காதுகளில் ஏதோ ஒரு இனிய ராகம் கேட்பது போல இருந்தது. ஆம், அங்கே இருந்த வயல்களெல்லாம் காற்றோடு சேர்ந்த "பசுமை பேசி" அவனுடன் உரையாடுவது போன்ற ஒரு கற்பனையோடு நடந்தான்.

சிறிது தூரத்தில் ஒரு புறம் நாற்றுகள் பறிக்கும் ஆண்களின் கலகலப்பும், மறுபுறம் நடவுநடும் பெண்களின் நாட்டுப்புறப் பாடலையும் ரசித்தபடி மனதை சற்று இலகுவாக்கிக்கொண்டான். விளைந்த பெரிய நெல்வயலைக் கண்டவன், அப்படியே மெய்மறந்து போனான்