மகள்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு, ரதி மெதுவாக வந்து வீட்டின் வாசலில் அமர்ந்தாள். அவள் கைகளை மடக்கிக் கொண்டு அமர்ந்தபடி, தெருவை நோக்கிப் பார்த்தாள்.

பள்ளிப் பேருந்து போன திசையில் அவளது பார்வை சில நொடிகள் நிலைத்தது. பிறகு, அவளது மனம் மெதுவாகக் காலத்தைப் பின்னோக்கி நடக்கத் தொடங்கியது.

அவள் தனது மகள்களிடம் ஒருபோதும் தன்னை ஒரு வீட்டு வேலைச் செய்பவள் என்று சொல்லவில்லை. அவர்களிடம் சிறு வயதிலிருந்தே, "தான் ஒரு டெக்ஸ்டைல் கடையில் வேலை செய்கிறேன்" என்றுதான் கூறி வந்தாள்.

அந்தப் பொய், அவளின் பெருமைக்காக இல்லை.

அவளுள் இருந்த பயத்திற்காக. மகள்கள் இருவரும், அவளது வேலையை நேசிப்பார்களா, வெறுப்பார்களா, அல்லது வெட்கப்படுவார்களா என்று அவளுக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு காலையிலும், அவள் சுத்தமான உடையை அணிந்து, ஒரு பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள்.

அந்தப் பைக்குள் உணவுப் பெட்டி மட்டும் இல்லை. அவளது உண்மையும் ஒளிந்திருந்தது.

தெருவைத் தாண்டி, பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி, டெக்ஸ்டைல் கடை இருக்கும் திசையைத் தாண்டி, அவள் வேறு ஒரு வீட்டின் வாசற் கதவைத் தட்டுவாள்.

அங்கேதான் அவள் வேலைச் செய்தாள். பாத்திரங்களின் சத்தம், துடைப்பத்தின் தூசி, சமையலறையின் சூடு, அதுவே அவளது தினசரி உலகம்.

சில நேரங்களில், அந்த வீட்டின் அம்மா புதிய புடவை வாங்கி வந்தால், ரதி அதை மடித்து அலமாரியில் வைக்கும் போது, தன்னுடைய மகள்கள் நினைவுக்கு வருவார்கள்.

"ஒருநாள் அவர்கள் இப்படிப்பட்ட கடைக்குள் வாடிக்கையாளர்களாக நுழைய வேண்டும். வேலைக்காரிகளாக அல்ல," என்று அவள் மனதில் நினைப்பாள்.

ஒருநாள் மாலை, குழந்தை அபி கேட்டாள், "அம்மா, நீ வேலைச் செய்யும் கடை எப்படி இருக்கும்? நிறைய புடவைகள் இருக்குமா ?"

ரதியின் இதயம் ஒரு நொடி வேகமாக துடித்தது. ஆனாலும் அவள் சிரித்துக்கொண்டு, "ஆமா... நிறைய கலர்ல புடவைகள் இருக்கும்... ரொம்ப அழகா இருக்கும்..." என்று சொன்னாள்.

அவள் பார்த்த புடவைகள் எல்லாம் உண்மைதான். ஆனால் அவள் நின்ற இடம் மட்டும் பொய்.

அந்த இரவு, அவர்கள் தூங்கிய பிறகு, ரதி நீண்ட நேரம் அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். "ஒருநாள் உண்மைத் தெரிந்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்ற கேள்வி அவளது மனதில் எழுந்தது.

ஆனால் அதைவிட பேராசை ஒன்று இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் இப்படிப் பொய் சொல்ல வேண்டிய நிலை வரக்கூடாது என்பதுதான்.

(தொடரும்...)