அவள் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்வது, அவளை நோக்குவது அவள் நோக்கும்போது புறம் நோக்குவது போன்ற காதல் விளையாட்டுகளுக்குப் பஞ்சமில்லை. சில நாட்கள் கழிந்தன.
ஜெனிஃபர் நீ கவனிச்சியா? அந்த ரெட் சர்ட் உன்னையே பாக்குறான்! அவள் பார்க்கும் முன் மறைந்து கொண்டான். ஒன் மினிட் என ஆனந்தை நோக்கி நடந்தாள்.
ஆனந்த்.. சாரி அன்னைக்கு நிறைய பேர் முன்னாடி கோவத்துல அடிச்சிட்டேன். என்னோட தப்பு தான். அப்புறம் உங்கள பத்தி விசாரிச்சேன், சீனியர்ஸ் கூட நீங்க போட்ட சண்டைப் பத்தி சொன்னாங்க. பெரிய ஆள் தான். சரி இனி நாம நண்பர்களா இருக்கலாம் என்றாள்.
ஆனந்த் சற்று தயங்கினான்.. முதல் நாள் உன்ன பஸ் ஸ்டாண்டு ல பாத்த ஜெனிஃபர். நீ செம்ம அழகா இருந்த, உன்ன ஃபாளோ பண்ணேன்..
ஜெனி போலாமா? என தோழிகளின் அழைப்பு... திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.
வகுப்பு முடியும்போதெல்லாம் அவளைப் பார்ப்பது, ஒன்றாகத் தேநீர் குடித்த தருணங்கள், புரட்சித்தலைவர்களின் புத்தகங்களை எடுத்து அவளை மட்டுமே வாசித்த நூலக நிமிடங்கள், அடிக்கடி வகுப்பு கட் அடித்து நண்பன் பைக்கில் ஊர் சுற்றுவது என ஒரு வருடத்தில் மறக்க முடியாத நினைவுகளைக் கட்டிக் கொண்டனர்.
நண்பர்களாக பழகினாலும் ஆனந்திற்கு அது மெல்ல மெல்ல காதலாக மாறியது. அவர்களுக்குள் நடக்கும் சிறு ஊடல்களும் ஆனந்தை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியது. இப்படியே உன் காதலை சொல்லாம இருந்தால் நீ தான் கஷ்டப்பட போற ஆனந்த். இதுக்கு மேல சொல்லாம இருந்தால் இனி எப்பவும் சொல்ல முடியாது என்று நண்பர்களும் சொன்னார்கள்.
ஜெனி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஒரு வாக் போலாமா? சரி ஆனந்த், என்ன விஷயம்?
நீ என் கூட சந்தோஷமா இருக்கியா ஜெனி? ம்ம்ம் ரொம்ப.. உனக்கு எப்படின்னு தெரியல நான் உன் கூட மட்டும் தான் சந்தோஷமா உணர்றேன்.
நீ இல்லாத ஒரு நாள் கூட என்னால நினைச்சு பார்க்க முடியல. அவள் அமைதியாக ஆனந்தை பார்க்கிறாள். உன்ன முதல் நாள் பார்த்த அன்னைக்கே நான் மொத்தமா மாறிட்டேன் ஜெனி. நான் உனக்கு நண்பனா மட்டும் இருக்க விரும்பல.
ஆனந்த் அது.. உன்ன எனக்கு பிடிக்காதுன்னு இல்ல. ஆனா காதலா நம்ம ரெண்டு பேரையும் நான் நெனச்சுப் பார்த்ததே இல்லை. அதே சமயம் நான் உன்ன இழக்க விரும்பல. எனக்கு உண்மையா என்ன சொல்றதுன்னு தெரியல ஆனந்த்...
ஜெனி என்ன பாரு.. அவள் அவனுடைய கண்களைப் பார்த்தாள்.
வாழ்க்கை முழுக்க இதே மாதிரி நம்ம சந்தோஷமா இருக்க நீ என் கூட இருப்பியா ஜெனி?
சற்று மௌனம்.. அவள் உதட்டில் சிரிப்பு தெரிந்தது. மெதுவாக நடக்கத் தொடங்கினாள் ஜெனிஃபர்.
அவளுடைய மௌனத்தில் பதில் இல்லை என்றாலும் மனதோரம் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் காத்திருந்தான் ஆனந்த்..
(தொடரும்...)

0 Comments