இஸ்லாத்தில் ஊன்றுகோல் (கைத்தடி) என்பது நடைமுறைப் பழக்கமாகவேக் கருதப்படுகின்றது. முஹம்மது நபி அவர்கள் பயணம் செய்யும்போதும் சொற்பொழிவாற்றும் போதும் ஊன்றுகோலைப் பயன்படுத்தியுள்ளார். பயணிக்க இயலாதவர்களுக்கு துணையாக இருந்து கீழே விழாமல் தாங்கிப் பிடிப்பதுதான் ஊன்றுகோல்.

குடும்பங்களில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஊன்றுகோலாக இருக்கும்போது அந்தக் குடும்பத்தில் எத்தகைய தீயப்புயல் அடித்தாலும் அந்தக் குடும்பம் சாயாமல் நிலைத்து நிற்கும்.

கோபால் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பினார். அவர் முகம் மிகவும் வாடிப் போயிருந்தது. மனைவியையும் பிள்ளைகளையும் கூப்பிட்டார். அவர்களிடம் என்னோடு பணிபுரிந்து வந்த துணையாளன் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டான்.

கணக்குப் புத்தகங்களைப் பார்க்கும்போது தான் அவன் செய்த பணக்கையாடல் வெளிச்சத்திற்கு வந்தது. அதைப் பார்த்து என் மனசே ஆடிப்போனது. எக்கச்சக்க பணமோசடி நடந்து விட்டது. அவனை நம்பி நான் மோசம் போய் விட்டேன். இனிமேல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை என்றுச் சொல்லும்போதே கோபாலின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதைக்கேட்ட அவரது மனைவி வாங்க வந்து உட்காருங்க. ஆர அமர அப்புறம் பேசலாம் என்று ஆறுதலாகக் கூறினாள். பிள்ளைகளும் அமைதிக் காத்தனர்.

ஆனால் கோபாலின்; இணையார் கமலா முகத்தில் கவலைக்குப் பதில் ஒரு தெளிவு தெரிந்தது. இரவு உணவிற்காக அனைவரும் ஒன்று கூடினர். உணவைப் பார்த்து எல்லோரும் மலைத்துப் போயினர். அவர்கள் கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. அருமையான சுவைமிக்க, உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கோபாலுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவர் என்ன இதெல்லாம் ? என்று இணையிடம் ஆச்சரியமாகக் கேட்டார். இது கொண்டாடப்பட வேண்டிய விடயம் அல்லவா. நாம் அனுபவிக்கும் இந்த இன்பமான நிகழ்வுக்காக எத்தனை நாட்கள் நான் ஏங்கியிருந்தேன் தெரியுமா? இது நாள் வரை நீங்கள் வேலை முடித்து இரவு வருவதற்குள் பிள்ளைகள் தூங்கி விடுவார்கள்.

ஒவ்வொரு நாளும் சாப்பிடும் போதும் அப்பா வரலையாம்மா ? என்று பிள்ளைகள் கேட்டு ஏக்கத்தோடு சாப்பிடுவதும் பிறகு படுக்கச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது. அப்போதெல்லாம் நான் எவ்வளவு வேதனையடைந்தேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்றாள். ஒரு கதவு மூடினால் ஒரு கதவு திறக்கும் என்றுச் சொல்வது போல ஒரு நட்டம் வந்தால் அது நமக்குள் ஒரு மாற்றத்தைக் கட்டாயம் கொண்டுவரும் என்பதை நம்புகிறவள் நான். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுபோல உங்களுக்கு ஏற்பட்ட நட்டமும் நன்மைக்கே என்று நினைத்துப் பழக வேண்டும். என்ன நேர்ந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு தெம்பாக இருப்போம் என்றாள் நிதானமாக.

அப்புறம் சொல்ல மறந்து விட்டேன். இன்று வேலைக்காக நேர்முகத் தேர்வுக்காகப் போன என்னை வேலைக்குத் தேர்வு செய்துள்ளார்கள். நாளையிலிருந்து நான் வேலைக்குப் போகப் போகிறேன் வீட்டைப் பற்றியோ எப்படி மனைவி மக்களைக் காப்பாற்றப் போகிறேன் என்ற கவலையோ உங்களுக்கு இனி வேண்டாம். நீங்கள் கவலையின்றி அந்த நினைப்பிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்று சொன்னதும் கோபாலின் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. “வாழ நினைத்தால் வாழலாம், வதங்கிப் போனால் மாளலாம் “ என்பது கோபாலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

ஒவ்வொரு குடுப்பத்திலும் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ஊன்றுகோல் தான். ஒருவருக்குத் துன்பம் வரும்போது துன்பத்திலேயே துவண்டு விடாமல் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்து வாழும் போது அதன் பலன் மிகுதியாக கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கணவன் மனைவி இருவரும் அன்பும் கருணையும் கொண்டு ஒருவருக்கொருவர் துணையாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்று திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது. இல்லற வாழ்க்கை என்பது பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனவும் குர்ஆன் போதிக்கின்றது.

உடல் இச்சையைப் பூர்த்தி செய்வதற்காக வாழ்வது அல்ல மனித வாழ்க்கை. அப்படி வாழ்ந்தால் அது மனித வாழ்க்கை அல்ல. அது மிருக வாழ்க்கை. ஒரு சில மிருகங்கள் அதிலும் கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பதையும் காண முடிகின்றது.

அமைதியைப் பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்கான ஜோடிகளை அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும் என்று அல்குர்ஆன் 30.21ல் காணலாம். அதோடுகூட அவர்கள் உங்களுக்கு ஆடையாக இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள் என்பதை அல்குர்ஆன் 2:187ல் காணலாம்.

இதனால் தம்பதியர் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் குறைகளை ஊதிப் பெரிசுபடுத்தாமல் அவைகளை மறைப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

மேலும் அவர்களுடன் (மனைவியருடன்) நன்முறையில் வாழுங்கள் (அல்குர்ஆன் 4:19) என்று குர்ஆன் கணவர்களுக்குக் கட்டளையிடுகின்றது. மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்புடன் நடத்த வேண்டும். அதுதான் இல்லற வாழ்க்கைக்கு அர்த்தம். ஒருவரை ஒருவர் ஊன்றுகோலாகத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

இன்பத்திலும் துன்பத்திலும் இருவரும் ஒருமித்து பயணிக்கும்போது அவர்களது அன்பு, உறவு, ஒற்றுமை, நேசம், பண்பு, பாசம் என்ற கைத்தடிகள் அவர்களை சிறப்பான வழிகளில் வழி நடத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.