இன்றைய இளையத் தலைமுறையினர் மட்டுமின்றி, பெரியோர்கள் மற்றும் சிறார்கள் என எல்லா தரப்பினரிடமும் இரவில் கண்விழித்திருப்பது சர்வசாதாரணமாகி வருகிறது.

“உங்களுக்காக இரவை ஓய்வாக ஆக்கியவன் அவனே.” - அல்குர்ஆன் 10:67

“நாங்கள் இரவை ஆடையாக ஆக்கினோம். தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.”( அல்குர்ஆன் 78:10-11)

“ இஷா தொழுகைக்கு முன் தூங்குவதையும், அதற்கு பின் தேவையில்லாமல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதையும் நபிகள் நாயகம் அவர்கள் வெறுத்தார்கள்.” (ஸஹீஹுல் புஹாரி 567, ஸஹீஹ் முஸ்லிம் 647).

இரவைக் கெடுப்பவன் உடலையும் கெடுப்பான்;

தூக்கத்தை மதிப்பவன் வாழ்வையும் காப்பான்.

இரவு உறக்கத்தை முறையாகப் பேணுபவர்களுக்கு:

  • மூளை புத்துணர்ச்சி பெறும்
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • மன அழுத்தம் குறையும்
  • உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்

மேலும், மெலட்டோனின் மற்றும் செரோட்டோனின் போன்ற சுரப்பிகள் இரவில்தான் சீராகச் சுரக்கின்றன. இச்சுரப்பிகள் உடலின் இயற்கை கடிகாரத்தை சீராக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்துகின்றன; மன அமைதியை அதிகரிக்கின்றன; நினைவாற்றலை மேம்படுத்துகின்றன; மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. இதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்த்து மருத்துவ செலவுகளையும் குறைத்துக்கொள்ளலாம்.

மின்சார விளக்குகள், மின்னணு சாதனங்கள், இணையவழி சேவைகள் என விஞ்ஞானம் வளர்ந்ததால் மனிதன் பல நன்மைகளை அனுபவிக்கிறான்.

ஆனால் அதே சமயம், இவற்றின் காரணமாக இரவு தூக்கத்தை இழந்து தங்களின் உடல் நலனையும் மனநலனையும் கெடுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் சமூக சீர்கேடுகளும் பரவி வருவது கவலைக்கிடமானதாக உள்ளது.

எனவே, இரவு உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம் !

உடலையும் உள்ளத்தையும் முறையாகக் காப்போம் !