சூர்யா தன் கேமராவைத் திருப்பி, அவனுக்கு முன்னால் ஒரு புதிய அழகிய உலகத்தைக் கண்டான். வயல்களின் நெடுநெடுங்களிலும் நெற்கதிர்கள் காற்றில் நடனமாடிக் கொண்டிருக்க, அதற்குச் சற்றுத் தள்ளி சோளக்காடு பச்சைக் கம்பளம் விரித்தாற்போல இருந்தது.
இடி மின்னலால் இலைகள் உதிர்த்த மொட்டைப் பனைமரத்தில் கிளிகள் இரண்டு அன்பாய்க் கொஞ்சித் தன் காதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.
மறுபறம் சிறுவர்கள் நுங்கு வண்டியில் வட்டமடித்துக் காெண்டிருந்தனர்.
உச்சி நேர வெயில் ஏற, களைப்பாற மரத்தடி நிழலைத் தேடினான். அங்கும் அவனுக்கு ஒரு அழகிய காட்சி.
சிறுவர்கள் மரத்தின் கிளைகளிலிருந்து கிணற்றில் குதித்து உற்சாகமாய் விளையாடிக்கொண்டிருந்தனர். இத்தனையையும் தன் கேமராவின் வழியே படம் பிடித்தபடி நடந்தான். சிறிது தூரம் நடந்து ஒரு காட்சியைப் பார்த்தவன், அப்படியே அசையாமல் நின்றான். அங்கே சோளக்கதிர்களின் மேல் சில சிட்டுக்குருவிகள் அமர்ந்திருந்தன. காற்றுக்கு அந்த மெல்லிய கதிர்கள் வளையும்போது, குருவிகள் பயந்து பறக்கவில்லை; மாறாக, அவை அந்தச் சோளக்கதிர்களோடு சேர்ந்து ஊஞ்சலாடியபடி, அழகாக அருகில் இருந்த நெல்லைக் கொத்தித் தின்றுக் கொண்டிருந்தன.
ஒரு நிம்மதியான விருந்தை அந்தக் குருவிகள் அங்கே அனுபவித்துக் காெண்டிருந்தன. கேமரா 'க்ளிக்... க்ளிக்... என அந்தச் சுதந்திர தருணங்களைப் படம்பிடித்தான். அப்படியே சற்றுத் திரும்பியவன், மணியோசையோடு வந்த மாடுகளின் பாதைப் பக்கம் கேமராவைத் திருப்பினான்.
அங்கே மேய்ச்சலுக்காக வரிசையாக மாடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. அந்த மாடுகளின் முதுகில் கம்பீரமாக அமர்ந்து, கரிய நிறக் கரிச்சான் குருவிகள் சவாரி செய்து கொண்டிருந்தன. காடுகளெல்லாம் மாடுகளின் மீது அந்தக் கருங்குருவிகள் ஊர்வலம் போவது போன்ற அந்தக்காட்சி, ஏதோ ஒரு கிராமத்துத் திருவிழாப் போல அவனுக்குக் காட்சியளித்தது. லென்ஸிலிருந்து கண்ணை எடுத்த சூர்யாவின் உதடுகளில், பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நிஜமான புன்னகை அரும்பியது. "என்ன தம்பி... சிட்டி காரனா? கேமராவுல என்னத்தையோ தீவிரமா தேடிட்டு இருக்க?" - ஒரு கரகரப்பான, அன்பான குரல் கேட்டுத் திரும்பினான். கையில் அரிவாளுடன், தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு நின்று காெண்டிருந்தார் ஒரு பெரியவர். அவர் அந்த வயலின் சொந்தக்காரர்.
"ஆமாங்க ஐயா, நான் ரங்கசாமி மகன் சென்னையில வேலைப் பார்க்கிறேன். மனசுக்கு ஒரே பாரமா இருந்தது, அதான் கொஞ்சம் நிம்மதியைத் தேடி கேமராவோட கிளம்பி வந்தேன்" என்றான் சூர்யா, தன் கேமராவில் எடுத்த குருவிகளின் படங்களை அவரிடம் காட்டியபடி, பெரியவர் அந்தப் படங்களைச் சிரித்துக்கொண்டே பார்த்துவிட்டு, வயல்வெளியையும், வானில் பறக்கும் பறவைகளையும் நிமிர்ந்துப் பார்த்தார்.
"இந்தா பாரு தம்பி... இந்த வயல்ல இருக்குற நெல்லுக்கும் சோளத்துக்கும் நாங்க காவல் காக்கிறதே இல்லை. ஏன்னா, இந்த இயற்கையில நமக்கான பங்கை விட, சிறகு இருக்குற பறவைங்க பங்குதான் அதிகம். அதுங்க இங்க வந்து சுதந்திரம ஊஞ்சலாடி கொத்தித் திங்கும்போதுதான் இந்த நிலத்துக்கே ஒர் அழகு' என்றார். சற்றுப் பொறுத்து சூர்யாவின் தோளைத் தொட்ட பெரியவர்', 'பறவைங்க மட்டுமில்ல தம்பி... மனுஷனுக்கும் சுதந்திரம் இங்கதான் இருக்கு சிறகு இருக்குற பறவைங்க இயற்கையைத் தேடி பறந்து வந்துடுது. ஆனா, மனசுங்குற சிறக வச்சிருக்க நீங்கதான் வழியறியாம சிட்டிக்குள்ள கான்கிரீட் கூட்டுல மாட்டிக்குறிங்க. இப்ப உன் மனசு எப்படி இருக்கு?" என்றார் அர்த்தமுள்ள புன்னகையோடு,
பெரியவர் சொன்ன அந்த வார்த்தைகள் சூர்யாவின் மனதிற்குள் ஏதோ ஒரு பூட்டை உடைப்பது போல இருந்தது. 'மனசுங்குற சிறக வச்சிருக்க நீங்கதான் வழியறியாம கான்கிரீட் கூட்டுல மாட்டிக்குறிங்க.. - எவ்வளவு எதார்த்தமான உண்மை! என்று எண்ணி அன்று நாள் முழுக்க அவன் அந்த வயல்வெளியிலேயே அமர்ந்து பொழுதைக் கழித்தான், மெல்ல அந்தி சாயும் நேரம் வந்தது. சோளக்கதிர்களில் ஊஞ்சலாடிய குருவிகளும், மாடுகளின் மேல் ஊர்வலம் போன கருங்குருவிகளும் தங்களின் கூடுகளை நோக்கிப் பறக்கத் தொடங்கின. அவற்றுடன் சேர்ந்து சூர்யாவின் மனதில் இருந்த பாரமும், அழுத்தமும் எங்கோ பறந்துப் போய்விட்டிருந்தன.
இப்படியாக ஒரு வாரத்தை இயற்கையோடு கழித்தான்...
அடுத்த நாள் காலை சூர்யா மீண்டும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். அவன் மகிழுந்தின் பின் சீட்டில், கிராமத்து மனிதர்கள் அன்போடு கொடுத்தனுப்பிய பையும், அவன் கேமராவும் இருந்தன. இப்போது அவனுடைய மகிழுந்து சென்னை போக்குவரத்து நெரிசலில் நுழையும் போது அவனுக்குள் பழைய சோர்வோ, பயமோ இல்லை. அவனுடைய கேமரா மெமரி கார்டில் மட்டுமல்ல... அவன் மனக்குவளையிலும் அந்தப் பசுமை வயல்களும், நெற்கதிர்களின் நடனமும் அசைந்து கொண்டே இருந்தன. பெரியவரின் அர்த்தமுள்ள புன்னகையுமே நிறைந்திருந்தது.
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் மீண்டும் வந்து நின்றான். அதே மின்கம்பத்தின் மேல் அந்த ஒற்றைக் காகம் அமர்ந்திருந்தது. ஆனால், இன்று சூர்யா அதைப் பார்த்துச் சலிப்படையவில்லை; மாறாக, புன்னகையோடு ஒரு பிடி சோற்றை அதன் அருகில் வைத்தான். நகரத்தின் இரைச்சல்களுக்கு நடுவிலும் அவனால் இப்போது பறவைகளின் கீச்சொலியைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஏனெனில், 'இயற்கையைத் தேடிய இதயம்... என்பது வெறும் அந்தப் பறவைகளுக்க மட்டுமல்ல... இத்தனை நாட்களாக இந்தக் கான்கிரீட் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தது தன் உடல் மட்டுமல்ல, தன் ஆன்மாவும் தான் என்பதை அவன் உணர்ந்த நொடி அது. கிராமத்துச் சோளக்கதிரில் பயமில்லாமல் ஊஞ்சலாடிய சிட்டுக்குருவிகளைப் போல, தனக்கும் இந்த இயற்கையில் ஒரு பங்கு இருக்கிறது என்பதை அவன் அதுவரை மறந்தே போயிருந்தான். இத்தனை நாட்களாகத் தன் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் துடித்தது அவனுடைய இதயத்தின் இறக்கைகளுக்கும்தான் என்பதை அவன் முழுமையாக உணர்ந்திருந்தான்!
அடுக்குமாடி குடியிருப்பின் பதினைந்தாவது மாடியிலிருந்து கீழே பார்த்தான். அலைபேசி கோபுரங்களும், வாகனப் புகைகளும் அவனுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்தின. இங்கு வாழ்வது வாழ்க்கை அல்ல, வெறும் பிழைப்பு!
மடிக்கணினியில் மின்னஞ்சல்கள் வந்து குவியும் அந்தப் பழகிய சத்தம் மீண்டும் கேட்கத் தொடங்கியது. மேலாளரிடமிருந்து 'இலக்குகளை முடித்துவிட்டாயா சூர்யா?" என்ற குறுஞ்செய்தியும் வந்து நின்றது. கடந்த வாரம் வரை இந்தச் சத்தம அவனுக்கு ஒரு இரும்புச் சங்கிலியாய், மனதை அழுத்தும் பாரமாய் இருந்திருக்கும். ஆனால் இன்று. அவன் முகத்தில் பதற்றமோ, சலிப்போ இல்லை. கிராமத்து விடியலும், அந்தப் பெரியவரின் வார்த்தைகளும் அவனுக்குள் ஒரு புதிய விழிப்புணர்வைத் தந்திருந்தன.
சூர்யாவுக்குள் ஒரு மெல்லிய புன்னகையோடு அந்த உண்மை புரிந்தது. "எந்த ஒரு வேலைக்கும், இயந்திரத்தனமான ஓட்டத்திற்கும் நடுவே... நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள, ஆன்மாவை புதுப்பித்துக் கொள்ள ஒரு பயணமோ, சுற்றுலாவோ இப்படி தனக்கு பிடித்த ஏதோ ஒன்று எவ்வளவு அவசியமானது! என்பதை உணர்ந்தான்.
ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் தூய்மையாகாது; ஓடிக்கொண்டே இருக்கும் நதிதான் எப்போதும் தூய்மையாக இருக்கும். மனிதனும் அப்படித்தான்.
வருடக் கணக்கில் ஒரே சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்தால் மனபாரம்தான் உண்டாகும். ஆனால், இயற்கையை நோக்கிய ஒரு சிறிய பயணம், அவன் சோர்வையெல்லாம் துடைத்தெறிந்து, மீண்டும் அவன் வேலையை நூறு மடங்கு உற்சாகத்தோடு செய்ய ஒரு உன்னத மருந்தாய் அமைந்தது!"
மீண்டும் மடிக்கணினியின் திரையை நோக்கினான். அவனுக்கு இப்போது புரிந்திருந்தது... அவன் தன் வேலையை வெறுக்கவில்லை, அவனுக்குத் தேவைப்பட்டது ஒரு சிறிய இடைவெளிதான்! அந்த ஒரு வார கிராமத்துப் பயணம், அவனுக்குள் ஒரு புதிய சூர்யாவைப் பெற்றுத் தந்திருக்கிறது.
கேமராவின் 'க்ளிக்' சத்தத்தை விட இப்போது அவன் புன்னகையோடு தட்டச்சு செய்யும் சத்தம் அவனுக்கு ஒரு தனி ராகமாக ஒலித்தது. கட்டாயத்திற்காக ஓடுவதல்ல வாழ்க்கை; கடமைகளைச் செய்பவன், நடுநடுவே நமக்கு உற்சாகத்திற்காகப் பிடித்ததைச் செய்து நம் மனதின் சிறகுகளை விரித்துப் பயணிக்க வேண்டும் என்பதை சூர்யா தன் மனதின் ஆழத்தில் உணர்ந்திருந்தான்.
பால்கனி மின்கம்பத்தில் இருந்த காகம் இப்போது தன் சிறகை விரித்து நீல வானில் கம்பீரமாகப் பறந்தது. அதைப் பார்த்தபடியே, சூர்யாவும் புன்னகையோடு தன் வேலையைக் கொண்டாடத் தொடங்கினான், அவனது நாட்காட்டியின் அடுத்த சில மாதங்களுக்குப் பிந்தைய பக்கத்தில், அவனது அடுத்த இயற்கையை தேடிய இதயத்திற்கான பயண தேதியை இப்போதே குறித்து வைத்தான்!

0 Comments