தெருவில் ஓடிய வண்டிகளின் சத்தம்...
அவளை மீண்டும் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. அவள் உள்ளே சென்று, வேலைக்குச் செல்லத் தயாரானாள்.அந்த நாள் முழுவதும் வேலைச் செய்து சோர்வுடன் வீடு திரும்பியதும், சமையலறைச் சென்று மகள்களுக்குப் பிடித்த பால் கொழுக்கட்டைச் செய்துக் கொண்டிருந்தாள்.
கதவுத் திறந்த சத்தம் கேட்டதும், "அபி... வந்துட்டியா?" என்று சமையலறையிலிருந்து ரதி கேட்டாள்.
வழக்கமாக, "அம்மா..." என்று ஓடி வந்து அவளைக் கட்டிப்பிடிக்கும் அபி - இன்று அமைதியாக இருந்தாள்.
எந்தப் பதிலும் இல்லை.
ரதி தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
அபி கதவின் அருகில் நின்றுக் கொண்டிருந்தாள். தோளில் இருந்த பள்ளிப் பையைக் கூட அவள் கீழே வைக்கவில்லை.
அவளது கண்கள் ரதியைப் பார்த்துக் கொண்டே இருந்தன.
அதில் வழக்கமான பாசம் இல்லை.
ஏதோ ஒன்று உடைந்து விழுந்ததுபோல ஒரு வெறுமை இருந்தது.
"என்ன அபி... பரிட்சை எப்படி எழுதிருக்க?" என்று ரதி கேட்டாள்.
ஆனால் அபி பதில் சொல்லவில்லை.
"நீங்க... எங்க வேலைப் பாக்கறீங்க?" என்று அவள் திடீரென்றுக் கேட்டள்.
ரதி ஒரு நொடி நின்றுவிட்டாள்.
"என்ன கேக்கற?" என்று அவள் இயல்பாக நடிக்க முயன்றாள்.
"டெக்ஸ்டைல் கடையில்தானே?"
அந்தத் "தானே" என்ற ஒரு வார்த்த, ரதியின் உள்ளத்தில் ஏதோ ஒன்று அசைத்தது.
"ஆமா..." என்று மெதுவாகச் சொன்னாள்.
அபி உடனே தலையசைத்தாள்.
"பொய்."
அந்த ஒரு வார்த்தை, ரதியின் காதில் அறைந்தது போல இருந்தது.
"நான் பார்த்தேன்..."
ரதியின் மூச்சு நின்றது.
"இன்று... நான் பார்த்தேன்..."
அபியின் குரல் நடுங்கியது.
"நீங்க... அந்த வீட்ல... பாத்திரம் கழுவிட்டு இருந்தீங்க..."
அறை முழுவதும் அமைதி.
ரதி பேச முயன்றாள்.
ஆனால் வார்த்தைகள் வரவில்லை.
ஏன் அம்மா?"
அபியின் கண்களில் கண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.
"ஏன் பொய் சொன்னீங்க?"
அந்தக் கேள்வியில் கோபம் மட்டும் இல்லை.
அதில் உடைந்த நம்பிக்கை இருந்தது.
"நான்... நான்..."ரதி தொடங்கினாள்.
ஆனால் அபி திடீரென்றுப் பின்னோக்க ஒரு படி நகர்ந்தாள்.
"வேண்டாம்..."
அவள் தலையசைத்தாள்.
"எதுவும் சொல்ல வேண்டாம்..."
"என்னோட தோழிகள் கிட்ட.. நான் எவ்வளவு பெருமையா சொன்னேன் தெரியுமா? என் அம்மா கடையில வேலைப் பாக்கறாங்கன்னு..."
அவளது குரல் உடைந்து போனது.
அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை.
அந்த "ஆனா"க்குப் பிறகு வந்த அமைதி அதுதான் ரதிக்குத் தாங்க முடியாததாக இருந்தது.
அபி மெதுவாகத் தனது பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
வழக்கமாகச் செய்வது போல, ரதியின் கன்னத்தில் முத்தமிடவில்லை.
அவளைத் தாண்டி சென்றாள்.
அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
ரதி அங்கேயே நின்றாள்.
அவளது கண்களில் கண்ணீர் வந்தது.
ஆனால் அவள் அழவில்லை.
அழ முடியவில்லை.
(தொடரும்...)
(தொடரும்...)

0 Comments