"ஏய்... பொம்பளையா? ஆம்பளையா?" என்று பள்ளி வாசலில் தினமும் கேட்ட கேள்விகள், அமுதாவின் மனதை ஆயிரம் முறை குத்தின. வகுப்பறையில் மாணவர்கள் சிரித்தனர். சில ஆசிரியர்களுக்குக் கூட அவளை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தடுமாறினர். வீட்டிற்குத் திரும்பினால், "படித்தால் என்ன பயன்? உன்னை யார் வேலைக்கு எடுப்பார்கள்?" என்ற உறவினர்களின் கேலிச் சொற்கள் காத்திருந்தன.

ஒரு கட்டத்தில் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தாள். அந்த இரவு, தன் பழைய தமிழ்ப் பாடப்புத்தகத்தைத் திறந்தபோது, அதில் இருந்த ஒரு வரி அவள் கண்களில் பட்டது: "கல்வியே மனிதனின் அழியாச் செல்வம்." அந்த ஒரு வரியே அவளுடைய வாழ்க்கையின் திசையை மாற்றியது.

மறுநாள் முதல் அவள் அழுதபடியே பள்ளிக்குச் சென்றாள்; ஆனால் இனி அவமானத்திற்காக அல்ல, தன் எதிர்காலத்திற்காக. பகலில் படிப்பு, இரவில் சிறிய வேலை. கையில் கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் புத்தகங்களுக்காகச் செலவிட்டாள். பல நாட்களில் வயிறு காலியாக இருந்தது; ஆனால் அவள் புத்தகப்பை மட்டும் காலியாக இருந்ததில்லை.

ஆண்டுகள் கடந்தன. பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம், அதன் பிறகு ஆய்வுப் படிப்பு. ஒருகாலத்தில் "நீ எதற்கும் தகுதியில்லை" என்று கூறிய சமூகம், இன்று "மேடைக்கு வாருங்கள் அம்மா" என்று மரியாதையுடன் அழைத்தது. கல்வி நிலையங்களில் அவள் உரையாற்றினாள். மாணவர்களிடம், "ஒருவரின் பாலினம் அல்ல, அவர்களின் முயற்சிதான் அவர்களின் உயரத்தை நிர்ணயிக்கிறது" என்று நம்பிக்கையை விதைத்தாள்.

ஒருநாள், அவள் படித்த அதேப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டாள். ஒருகாலத்தில் அவளை ஏளனமாகப் பார்த்த அதே வளாகத்தில், மாணவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அது அவமானத்தின் கண்ணீர் அல்ல; வெற்றியின் கண்ணீர்.

மேடையில் பேசத் தொடங்கிய அமுதா, "என்னைப் பலர் கேலிச் செய்தார்கள். சிலர் கதவுகளை மூடினார்கள். ஆனால் ஒரு கதவு மட்டும் எப்போதும் திறந்தே இருந்தது. அது கல்வியின் கதவு. அந்தக் கதவை நான் தட்டினேன்; அது என் வாழ்க்கையை ஒளிரச் செய்தது," என்றாள்.

அன்று பல மாணவர்களின் மனதில் ஒரு புதிய சிந்தனைப் பிறந்தது. கல்வி என்பது வேலைக்கான வழி மட்டுமல்ல; மனிதனின் மரியாதையை மீட்டெடுக்கும் ஒளிக்கண் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

கல்விக் கண்களைத் திறப்பதோடு மட்டுமல்ல; வாழ்க்கையையும் திறக்கிறது. ஒரு திருநங்கையின் வெற்றிக்குக் காரணம் இரக்கம் அல்ல, கல்விதான்.