எங்கெங்கோ இருந்து
சிற்றீசல்களாக நாம்
ஒரு புற்றுக்குள் வந்தடைந்தோம்.
'அ' என்னும் உயிர் எழுத்தில்
தொடங்கி நம் பெயர்கள் உயிர்மெய்
எழுத்தில் முடிகையில்
நாம் இணைந்திருந்தோம்.
கூடி தினம் சோறு
நாம் உண்டோம்.
உணவில் பகிர்ந்துண்ண
கற்றுக்கொண்டதை நாம்
பரிட்சையிலும் பின்பற்றினோம்.
ஆசிரியரின் அடிகளில்
கோபம் கண்டு பின்
மகிழ்ச்சி அடைந்தோம்.
நண்பன் கொண்டு வரும்
சிறு துரும்பில் கூட
சுவைக் கண்டோம்.
பள்ளி வேலைகளில்
விடுமுறையைத்தேடினோம்
விடுமுறையில், பள்ளியைத் தேடினோம்.
மழைக்கான நமது பொருள்
மகிழ்ச்சிக் காரணம் விடுமுறை.
வகுப்புத் தேர்வுகள் நினைவிருந்தும்
அவற்றை மறந்தோம்.
நண்பன் எழுதி கொண்டுவந்த
வீட்டுப் பாடங்கள்
நட்புக்காகவே காணாமல் போயின.
நமக்கு இடையில் இருந்த போட்டி
யாரை வகுப்பு வாயிலில்
ஆசிரியருக்குத் தெரியும் படி
நிற்கச் செய்வது என்பதில் தான் இருந்தது.
ஆசிரியரை வெறுத்தோம்
ஆனாலும் விரும்பினோம்.
அன்று சேட்டைகள் துக்கத்திலேயே
முடிந்தன ஆனால் இன்று அவையே
மகிழ்ச்சி அளிக்கின்றன.
கண்ணியமாகத் தொடங்கிய
நம் பேச்சுக்கள் பின்
கன்னாபின்னாவென எதையெல்லாம்
பற்றியோ பேசி முடித்து இருந்தன.

0 Comments