பாரதிதாசன் :

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) அவர்கள் ஒரு சிறந்த தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கியப் பங்காற்றியவர். இவர் 'புரட்சிக் கவிஞர்' என்றும், 'பாவேந்தர்' என்றும் போற்றப்படுகிறார். பாரதியாரின் தீவிர பற்றாளராகவும் சீடராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

புதுச்சேரியில் பிறந்த இவர், தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கவிதை, கட்டுரை, நாடகம், புதினம் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், பெண்ணுரிமை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற கொள்கைகளைத் தனது கவிதைகள் மூலம் மக்களிடையே பரப்பினார். இவரது கவிதைகள் உணர்ச்சிப்பூர்வமானதாகவும், எளிய சொற்களைக் கொண்டதாகவும் இருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

'குடும்ப விளக்கு', 'பாண்டியன் பரிசு', 'இருண்ட வீடு', 'அழகின் சிரிப்பு' போன்ற பல புகழ்பெற்ற படைப்புகளை பாரதிதாசன் அளித்துள்ளார். இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியதுடன், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் வலு சேர்த்தது.

1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 73 ஆவது வயதில் பாரதிதாசன் காலமானார். இருப்பினும், அவரது படைப்புகள் மூலம் அவர் இன்றும் தமிழ் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

அறம் செய்க 

தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும் மக்கள் கூட்டமும்,
வாழுமாறு - அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலர்கள் 'உலகப் பொன்னி லக்கியம்'
ஆக்கினார்! மறவரோ, அறிவு - அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந்தோளால் தொடங்குக 'பணியை'!

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக 'அறம் இன்பம்' என்றே!


தமிழர்களின் வாழ்வானது அறத்தின் வழியே நடக்க வேண்டும் என்பதை கற்பிக்கும் நோக்கிலேயே இக்கவிதை அமைந்துள்ளது. அத்தகைய அறம் நம் தமிழ் சான்றோர்கள் பின்பற்றியதாகவே அமைய வேண்டும் என்கிறார் கவிஞர் பாரதிதாசன். தமிழர்கள் நிலம், கடல், வான் என எங்கும் உயிர்களும் மக்களும் அமைதியாக வாழும் வகையில், அன்பை மட்டுமே குடையாகக் கொண்டு உலகை மாண்புடன் ஆட்சி செய்தவர்கள். அத்தகைய சிறப்புமிக்க வழியில் நமது பணியையும் அறத்தையும் தொடங்க வேண்டும். நம் புலவர்கள் உலகமே போற்றும் பொன்னான இலக்கியங்களைப் படைத்தனர். நம் தமிழ் வீரர்கள் அறிவற்றுச் செயல்படும் அறியாமையை எதிர்த்து, உலக அமைதியைக் காக்க இரவும் பகலும் விழித்திருந்தனர். ஒரு கையை வாளின் மீதும், மறுகையை அறத்தின் மீதும் வைத்து, அமைதியையும் இன்பத்தையும் அருவியெனப் பொழியச் செய்தனர். உலகம் முழுவதும் நமது நல்வாக்கையும் கட்டளையையும் ஏற்கும் வகையிலும், நமக்குத் தடையாய் இருக்கும் சுவர்கள் தகர்ந்து தூளாகும் வகையிலும் செந்தமிழ்ச் சொல்லாலும், திறம்பட்ட செயல்களாலும், வலிமையான தோள்களாலும் உழைக்கத் தொடங்குங்கள்! உலகில் உள்ள எண்ணற்ற மதங்கள்,  அழிவை ஏற்படுத்தக்கூடியவை கந்தகப் பொடி நிறைந்த வீட்டில் போட்ட நெருப்புப் பொறிகளைப் போன்றவை. எனவே, மனிதர்களைப் பிரிக்கும் சாதிக்குச் சாவுமணி அடிக்க வேண்டும். பழம்பெரும் தமிழகம் உலகத்திற்கே தலைசிறந்த இடமாக விளங்க, 'அறமும் இன்பமும்' மட்டுமே நமது இலக்கு எனக்கொண்டு செயலாற்றத் தொடங்குங்கள் என்கிறார் பாரதிதாசன். பாரதிதாசன் நம் முன்னோர்கள் பின்பற்றிய அறத்தினை போற்றி அதன் வழி நம்மை நடக்க வேண்டும் என்று இந்த கவிதை வழி அறிவுறுத்துகிறார்.