வாழ்க்கைத் தத்துவங்கள் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

நாமே நமக்குத் துணையானால்,
     நாடும்பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
     சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?


நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு,
     நேயம் கொண்ட நெறியோர்க்கு,
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு
     வெல்லும் படைகள் வேறுளவோ?


உள்ளந் தேறிச் செய்வினையில்
     ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
     பாறை பொடியாய்ப் போகாதோ?


சாதிசாதி என்றுநிதம்
     சண்டை போட்டு, மண்டைகளை
மோதி மோதி உடைப்பதொரு
     மூடச் செயலென் றுணரீரோ?

        வாட்டும் உலகில் வழுத்தரிய
                    வாழ்க்கைத் துணையாம் மங்கையரை
          ஆட்டும் பொம்மை அடிமைகளாய்
                     ஆக்கி வைப்ப தழகாமோ?
\

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே?