பொதுக்கட்டுரை - General Essay

    ஒரு எண்ணிய பொருள்பற்றி மனத்திலே எண்ணங்களை ஒழுங்குபட அமைத்த உரைப்பகுதியே கட்டுரை எனப்படும். சிலர் சிந்தனை செய்து முடிவு செய்து கொள்ளாது ஒன்றை எழுதப் புகுகின்றனர். ஒன்றைப் பொதுப்படச் சிந்தியாது பல்வேறு நிலைகளில் வைத்துச் சிந்திப்பது இலகுவானதும் அழகானதுமாம். அவ்வாறு சிந்தத்து எழுதிய கட்டுரை ஒழுங்கு, தெளிவு, விளக்கம் முதலிய பண்புகள் உடையதாகவும் இருக்குமாறு கூறுசெய்து எண்ணியவற்றைக் கட்டுரையிலும் தனித்தனியாக அமைக்க வேண்டும்.

கட்டுரையின் அமைப்பு

    ஒரு பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதும்போது முன்னுரை, பொருளுரை, முடிவுரை என எழுத வேண்டும். முன்னுரையாவது கட்டுரைப் பொருளின் நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். பொருளுரையாவது எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப உள் தலைப்பிட்டுப் பலவற்றை விளக்கி உரைக்க வேண்டும். கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்து முடிவுரையில் கூற வேண்டும்.

கட்டுரை எழுதுவதற்குச் சில குறிப்புகள்

1. செய்திகளைத் திரட்டுதல்

2. பொருளைப் பகுத்துக் காணுதல்

3. பத்தி பிரித்தல்

4. தலைப்புகள் தருதல்

5. தக்க மேற்கோள் காட்டல்

6. நடையழகு

7. நிறுத்தக் குறி இடுதல்

8. எடுத்தாளும் திறன்

9. கையெழுத்து

10. முறைப்படுத்தல்

11. மொழித் தூய்மை

12. இலக்கணப்பிழை விலக்குதல்

13. வாக்கிய மாற்றங்கள்

14. உவமை, பழமொழிகள் பயன்படுத்துதல்

15. மீள்பார்வை


எடுத்துக்காட்டு: 1. நூல் நிலையம்

முன்னுரை

    அதிகாரிகளின் நம் நாட்டில் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நூல் நிலையங்களைக் காண்கிறோம். அந்நிலையங்கள் கல்வித்துறை திட்டத்திற்கியைய அமைந்தனவாகும். மாணவர்கள் பிறநூல்களையும் கற்க வாய்ப்பளிப்பதற்காக அவை ஏற்படுத்தப்பட்டன. அந்த நோக்கத்தை மாணவர் பலர் அறிவதில்லை. பாடப்பகுதிகளை மாத்திரம் படித்தால் அதுவே போதுமானது என அமைகின்றனர். அதனால் அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறும் காலத்தில் தேர்வுக்குப் படித்தவை தவிர ஏனையவற்றில் சிறிதும் தெரியாதவராய் வாழ்க்கையைத் தொடருகின்றனர். "நூலளவே யாகுமாம் நுண்ணறிவு" என்பதையறியாது தேர்வில் வெற்றி பெறுதலையே கல்வியின் முழு நோக்கமாக கொண்ட மாணவர்கள் பட்டங்கள் பல பெற்றாராயினும் கல்வியின் பயனை அடையாதவரேயாவர்.

படிப்பின் முக்கியத்துவம்

சிலர் பள்ளிப்படிப்போடு கல்வி முடிகிறதென எண்ணுகின்றனர். 'கல்விக்கரையில கற்பவர் நாள் சில' என்பது பெரியோர் வாக்கு. அறிவினால் மற்றைய உயிர்களைவிட மேலானவனாகக் கருதப்படும் மனிதன் என்றும் தன்னறிவை வளர்க்கும் வாய்ப்புடையவனாய் இருக்கிறான். கல்லார் கழிப்பர் தலையாயர் என்ற நாலடியார் கூற்றிற்கியைய நம்முன்னோர்கள் சாந்துணையும் கல்வியை வளர்த்தார்கள். இன்றும் மேனாட்டவர் பலர் கல்வியிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்; ஊருக்கு உர் நகருக்கு நகர் நூல் வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்: வாய்ப்பு நேர்ந்தபோதெல்லாம் நூல் நிலையம் செல்கின்றனர்; பகல் முழுவதும் தொழில் செய்து களைத்தோரும் இரவில் பல நூல்களையும் படித்துத் தம் வாழ்வை உயர்த்துகின்றனர். நம் நாட்டிலோ சில ஊர்களில் மாத்திரம் நூல் நிலையங்கள் உள்ளன. அவைதாம் பெயரளவிலே உள்ளன. சில பத்திரிகைகளும் சில நூல்களும் அங்கே காணப்படும். அந்நிலையங்களை வாசகசாலைகள் என அழைத்தலே பொருந்தும். அங்கே படித்துப் பயன் பெறுவோர் சிலர் பேசிப் பொழுது போக்குவார் பலர்.

நூலகப் படிப்பு

நூல்களைத் திரட்டவோ பாதுகாக்கவோ அவற்றைப் பயன்படுத்தவோ யாரும் அறியார். பிறநாட்டார் சிறப்பாக மேனாட்டார் நூல் நிலையங்களின் பயனை நன்கு அறிந்தவர். நூல் நிலையங்களைப் பயன்படுத்துவோர் பலராதலாலும் அவரும் பல திறத்தாலும் அவ்வெல்லோருக்கும் ஏற்ற பல புது வழிகளால் நூல்நிலையத்தைப் பயன் படுத்துகின்றனர். சில ஊர்களில் வீடுவீடாகச் சென்று நூல்களைக் கொடுத்து வாங்குகின்றனர். மக்களுக்குத் தேவையான நூல்களை வண்டிகளில் ஏற்றி இருநாளுக்கொரு முறையாக அல்லது வாரத்துக்கு ஒரு முறையாக ஊர் சுற்றுவர். இவ்வித ஊரும் நூல் நிலையங்களால் முதியோரும் உடல் தளர்ந்தோரும் பெரிதும் பயன் அடைவர்.

வீட்டில் நூலகம்

நடுத்தர வகுப்பினர்க்கும் எளிய வகுப்பினர்க்கும் பொது நிலையங்கள் இன்றியமையாதனவே. பெருஞ்செல்வர்கள் தம் வீட்டிலேயே நூல்நிலையம் அமைத்துக் கொள்ள முடியும். உணவறை, படுக்கையறை முதலியன எல்லார் மனையிலும் இருத்தல்போலக் கற்ற செல்வர் மனைகளில் நூல்நிலையமும் தனியிடம் பெற்றிருக்கும். அது அவர் பின்னோர்களுக்கெல்லாம் பெருமையையும் கல்வியில் நாட்டத்தையும் ஊட்டி நிற்கும். எல்லோர் இல்லிலும் நூல் நிலையம் இருப்பது நல்லதாகும். சிறிய அளவிலாயினும் இருப்பின் அது பொழுதைத் தவப்பொழுதாக்கும் பொழுது போவதோடு அறிவும் பெருகும். அறிவு நிறைந்த பெற்றோர்கள் தம் சிறுவரும் நுண்மதி உடையராய் இருக்கக் காண்வர்."

முடிவுரை

கால்கள் நான்கும் நேராக அமைந்தால்தான் நாற்காலி நேராக நிற்கும். கல்விக்குத் துணையான நூல்நிலையங்களும் யாண்டும் செவ்விதின் அமைந்து உயர்ந்தால்தான் மக்களினம் மாட்சிமிக்கதாகும். கல்லூரிகளிலும் நகரங்களிலும் ஊர்களிலும் ஒவ்வோர் இல்லத்திலும் நூல் நிலையம் விளங்க வேண்டும். இவ்வித விளக்கம் உள்ள நாடுதான் அறிவிலும் பண்பாட்டிலும் மேம்பட்டநாடு என்று அழைக்கப்படும்.


பயிற்சி

சமூகச் சிந்தனை, சுற்றுச்சூழல், நாட்டுணர்வு, சமீபத்திய நிகழ்வுகள் போன்ற கருத்துகளின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதிப் பழகுக.

1. இந்திய முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு

2. சுற்றுச்சூழல்

3. மது விழிப்புணர்வு

4. எதிர்கால இந்தியாவில் மாணவர்களின் பங்கு

5. கல்வி வளர்ச்சியில் தமிழகம்

6. கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு.

7. ஈழப்போர் குறித்த சிந்தனைகள்

8. தமிழ் வளர்ச்சியில் ஊடகங்கள்

9 பத்திரிகைகளில் இன்றைய தமிழ்

10. அரசியலில் மாணவர்கள்

11. கல்வியில் பெண்கள் நிலை

12. சமூகத்திற்கு எதிரான தீமைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

13. புத்தகங்கள் நல்ல நண்பர்கள்

14. சாதி ஒழிப்புச் சிந்தனைகள்

15. மனித உரிமைகள்