நேர்காணல்

            பேட்டி (Interview) என்பது பழஞ்சொல். இப்போது வழங்கும் புதுச் சொல்லாக்கம் 'நேர் காணல்' என்பதே. நேர்காணல். உண்மையை உள்ளபடி அறியத் துணைசெய்வதால் எவ்வகைப்பட்ட ஆய்வுக்கும். முதன்மை - மூல உண்மைக் கூறுகளைச் சேகரிக்கும் முறைகளில் நேர்காணல் முறையும் ஒன்றாக ஆராய்ச்சி நெறிமுறையாளரும் இணைத்துள்ளனர். இதுவே Mass Media எனப்படும் வானொலிக்கும் தொலைக் காட்சிக்கும் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டது. பருவ ஏடுகளில் (Periodicals) நேர்காணல் முன்பு இடம்பெறும். இப்போது செய்தித் தாள்களும் (News papers) நேர்காணலை ஓர் இன்றியமையாத கூறாகக் கொள்கின்றன. ஒரு விபத்து நடந்தது என்றால் விபத்துக்குள்ளானவர்களையும் விபத்தைப் பார்த்தவர்களையும், விபத்தில் இறந்தவரின் - காயமுற்றவரின் உறவினர்களையும் பத்திரிகை நிருபர்கள் (Reporters) அணுகி நேர்காணல் நடத்தித் தாம் கண்டறிந்த செய்திகளை வெளியிடு கின்றனர். நேரு போன்ற புகழ்பெற்ற தலைவரை விரிவாகப் பேட்டி கண்டு அப்பேட்டியை மட்டுமே ஒரு தனிநூலாக வெளியிடும் வழக்கமும் உண்டு.


பேட்டி அல்லது நேர்காணல் என்பதைப் பொதுவாக ஐந்து வகைப்படுத்துவார்.

1. களமுறைப் பேட்டி (Field Interview)

2. வரலாற்றுப் பேடடி (Historical Interview)

3. அதிகாரத்துவப் பேட்டி (Authoritative Interview)

4. ஆவணப் பேட்டி (Documentary Interview)

5. மதிப்பாய்வுப் பேட்டி (Survey Interview)

பேட்டி காணச் செல்பவர் சிறந்த நுண்ணறிவும், சமயோசிதச் சொல்திறனும், அஞ்சாமையும், துணிவும் மிக்கவராக இருக்க வேண்டும். தம் வினாக்களால் பேட்டி தருபவர் மனம் புண்படாதபடி, ஆனால் தாம்பெற நினைக்கும் விடையைப் பெற்றே தீரும் ஆற்றலும் அமையப் பெற்றவராக இருக்க வேண்டும்.

பேட்டிக்குச் செல்லும்முன் பேட்டியாளரிடம் கேட்க விரும்பும் வினாக்களைச் சிந்தித்துத் தயாராக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டதாளில் எழுதி வைத்தக் கொள்வதன் மூலமோ, “உம்மிடம் 36 வினாக்கள் கேட்கப் போகிறேன்” என்று முன் அறிவிப்புச் செய்வதன் மூலமோ பேட்டி தருபவரை மலைக்கச் செய்யக்கூடாது, சிறு தாளில் குறித்துக்கொள்ள வேண்டும். 'உங்கள் பிறப்பு, வளர்ந்த சூழல், கல்வி, திருமணம் ஆகியவற்றை விளக்கு கிறீர்களா?', 'நீங்கள் எழுதிய அந்த நாவலின் கதைச் சுருக்கத்தைச் சொல்லுங்கள்' என்பன போன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது.

பேட்டியின் வினாக்கள் தெளிவாக இருக்க வேண்டும். பேட்டி யாளரைக் குழப்புவனவாக இருக்கக் கூடாது. பேட்டியாளரிடமிருந்து அவரது ஆளுமையை வெளிக்கொணர வேண்டுமே தவிர, பேட்டி காண்பவர் தனது திறமை வெளிப்பட வேண்டும் என்பது போல வினாக்கள் கேட்கக் கூடாது.

இவ்வகையில் நேர்காணல் பகுதிகளுக்கான சில பயிற்சிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


பயிற்சி - 1

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகில் 'இளம்புயல்' என்று எல்லா நாட்டவராலும் போற்றப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது உலகறிந்த உண்மை. இருபது வயதை எட்டிப்பிடிக்கும் முன்னரே 'டீன்ஏஜ்' பருவத்திலேயே, இதற்குமுன் யாரும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தித் தம் புகழையும் இந்தியாவின் புகழையும் நிறுத்தி வருகிறார். அவரது நேர்காணல் நேயர்களுக்கு உவகையும் உற்சாகமும் தரும் என்பதில் ஐயம் ஏது?

இதோ அவரது பேட்டி


நேர் காண்பவர்: இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் இளம் புயலே! நீங்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர் தானே?

சச்சின்: ஆமாம். அதிலும் பம்பாயைச் சார்ந்தவன். இதில் ஏன் உங்களுக்குச் சந்தேகம் வந்தது.

நேர்.கா: சச்சின் என்பது வங்காளத்திலும் மிகவும் புகழ் பெற்றபெயர். அதனால் கேட்டேன்.

சச்சின்: ஓ, அதனால் கேட்டீர்களா? உண்மையில் சச்சின் என்பது வங்காளப் பெயர்தான். இன்னும் சரியாகச் சொன்னால் வங்காளத்துப் புகழ்பெற்ற பாடகர் சச்சின் தேவ் பர்மன் (S.D. பர்மன்) என்னும் பெயரில் உள்ள சச்சின் என்பதை எடுத்து எனக்குப் பெயராகச் சூட்டினார்கள்.

நேர்.கா : உங்கள் குடும்பம் இசையில் ஈடுபாடு கொண்டது என்பது தெரிகிறது.

சச்சின்: ஆமாம். என் சகோதரனும் சகோதரியும் இசை விரும்பிகள். அவர்கள்தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துச் சூட்டினார்கள்.

நேர்.கா : பேருக்குத் தக்கபடி நீங்கள் இசை உலகில் நுழையாமல் கிரிக்கெட் உலகில், நுழைந்து விட்டீர்களே?

சச்சின்: நான் கிரிக்கெட் உலகில் நுழைந்தது உண்மை. ஆனால் இசை உலகில் நுழையவில்லை என்பது உண்மை அல்ல. இளமையிலிருந்தே எனக்கு இசையில் ஈடுபாடு அதிகம். இசையை விரும்பிக் கேட்டு, ரசித்து அனுபவிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் முதன்முதலாக வெளிநாடு சென்ற போது வெளிநாட்டில் நான் முதலில் வாங்கியது என்ன தெரியுமா? இசை கேசட்டுகள், இசை டெக் இவைதான்.

நேர்.கா: உங்கள் ஆட்டத்துக்கு யாரை முன்மாதிரியாகக் கொள்கிறீர்கள்?

சச்சின்: சுனில் கவாஸ்கரைத்தான்.

நேர்.கா: நீங்கள் பல வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறீர்கள். அதில் எதைச் சிறப்பானதாகக் கருதுகிறீர்கள்?

சச்சின்: இந்த ஆண்டு (1992) இங்கிலாந்தின் கண்ட்ரி கிரிக்கெட்டில் யார் க்ஷயர் அணியில் ஆட அழைத்தார்களே, அதைச் சிறப்பான வாய்ப்பாகக் கருதுகிறேன். ஏனென்றால், யார்க்ஷயர் அணியில் சேர்க்கப்படும் முதல் வெளிநாட்டு ஆட்டக்காரர் நான்தான்.

நேர்.கா.: உண்மைதான். அந்த வாய்ப்பு உங்களுக்குச் சிறப்புத் தருகிறது. எங்களுக்கும் இந்தியர்களுக்கும் சிறப்புத் தருகிறது. உங்கள் அருமையான பேட்டிக்கு நன்றி சச்சின் அவர்களே!

சச்சின்: நானும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேர்காணல் முடிந்தது. விடைபெற்றுப் புறப்பட்டபோது 'மரபினோர் புகழையெல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய்' என்னும் இலக்கியத் தொடரே என் நினைவுக்கு வந்தது.சச்சின் கிரிக்கெட் மரபினர் பெற்ற எல்லாவகைப் புகழையும் தன் புகழாக மாற்றிவரும் இளைஞர். இன்னும் பத்தாண்டுகளில் கிரிக்கெட் உலகச் சாதனைகளை முறியடித்து சாதனை புத்தகத்தின் (Record Book) எல்லாப் பக்கங்களிலும் தன் பெயரே இருக்குமாறு செய்யும் திறமை பெற்றவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.


பயிற்சி- 2 

ஒரு மாணவர் எழுத்தாளர் சுஜாதாவை நேர் காண்கிறார். அதற்குரிய வினாக்கள்.


அறிமுகம்: சுஜாதாவை அறியாதவர்கள் தமிழை அறியாதவர்களே. ரங்கராஜன் என்னும் இயற்பெயரைக்கொண்ட சுஜாதா எழுதாத பத்திரிகைகள் இல்லை. அவர் எழுத்தை அறிந்த நாம். இதயத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இப்பேட்டியின் நோக்கம்.


1. வணக்கம் சுஜாதா அவர்களே! ஓர் இன்ஜினியரான தாங்கள் எப்படி எழுத்துத் துறைக்கு வந்தீர்கள்?

2. முதலில் வெளிவந்த கதை எது?

3. அந்தக் கதையை எழுதும்போது பெரும்புகழ் பெறுவோம் என்னும் நம்பிக்கை இருந்ததா?

4. இதுவரை எத்தனை சிறுகதைத் தொகுதி, நாவல்கள் வெளியிட் டுள்ளீர்கள்?

5. நாவல்களைவிடக் கதைத்தொகுதிகள் குறைவாக இருப்ப தற்குக் காரணம் என்ன?

6. பத்திரிகையாளர்கள் ஒரு தொடர்கதை வேண்டும் என்று பொதுவாகக் கேட்பார்களா? அல்லது இன்ன மாதிரி தொடர்கதை வேண்டும் என்று கேட்பார்களா?

7. உங்கள் நாவல் சினிமாவானது ஒருபுறமிருக்க சினிமா வுக்குத் தனியே கதைகள் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

8. சினிமாவுக்காக எழுதிய பழைய 'நினைத்தாலே இனிக்கும்'. புதிய 'விக்ரம்', இரண்டுமே உங்கள் தொடர்கதைகளைப் போல அவ்வளவு சிறப்பானவை அல்ல என்னும் கருத்து நிலவுகிறதே, அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

9. தமிழில் அறிவியல் நூல்கள் குறைவு. நாவல்கள் எழுத நிறையப்பேர் இருக்கிறார்கள். நீங்கள் அறிவியல் நூலைச் சுவையாக எழுதுகிறீர்களே, நாவலைக் குறைத்து அறிவியல் நூலில் ஏன் அதிகக் கவனம் செலுத்தக் கூடாது?

10. உங்கள் கதையில் வரும் வக்கீல் கணேஷ், சமயங்களில் ஜேம்ஸ் பாண்ட் வேலையும் செய்கிறாரே? இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் அப்படி ஒரு வழக்கறிஞரைக் காட்ட முடியுமா?

11. என்னதான் புகழ் வந்தாலும், "என் வீட்டு லாண்டரி கணக்கைக் கொடுத்தாலும் வெளியிடுவார்கள்" என்று ஒருமுறை சொன் னீர்களே. அது சரியா?

12. உங்கள் எழுத்துப்பணி, உங்கள் குடும்ப வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது?


பயிற்சி - 3


தொழிலதிபர் நா. மகாலிங்கம் அவர்களை நேர்காணல்:


தொழிலதிபர் நா. மகாலிங்கத்தை அறியாதவர் இல்லை. இவர் எத்தொழிலைத் தொடங்கினாலும் அது வெற்றிபெறும், வள்ளல் என்றும் அருட்செல்வர் என்றும் அன்போடு அழைக்கப்பெறும் மகாலிங்கம் அவர்களின் பல்வகைச் சிறப்புகளை அவர் வாய்மொழி மூலமே கேட்டறிவோம்.

1. திரு. மகாலிங்கம் அவர்களே! நீங்கள் தொழிலதிபராக இன்று திகழும் பெருமையில் உங்கள் இளமைப் பருவத்திற்கு என்ன பங்கு?

2. தொழிலாளர் பிரச்சனைகளால் பலர் தொடங்கிய தொழில்களை மூடுகிற காலம் இது. இப்பிரச்சனை தங்களைத் தீண்டிய தில்லையா? எவ்வாறு அதற்குத் தீர்வு கண்டீர்கள்?

3. தொழிற்சாலை நடத்துவது, ஒரு பொருளின் முகவராகி (Agent) அதை விற்பனை செய்வது ஆகிய இருதுறைகளிலும் ஈடுபட்டுள்ளீர்கள்? இரண்டில் எது சிறந்தது? ஏன்?

4. மக்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பெரும் பொருள் செலவிட்டுப் பல கல்வி நிலையங்களை நிறுவியுள்ள தாங்கள், ஒருமுறை கல்லூரிகள் மாணவரைச் சேர்க்கும் போது நன்கொடை வாங்க லாம் என்று கூறியது எவ் வகையில் சரியாகும்?

5. தொழில் துறையினரான உங்களுக்கு வள்ளலாரிடம் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

6. பெரும் புலவர்களைக் கொண்டு மொழியாராய்ச்சியும் கால ஆரராய்ச்சியும் செய்து வருவதாக அறிகிறேன். இதன் நோக்கம் என்ன? இதனால் விளைந்த பயன் என்ன?

7. 'ஓம் சக்தி' என்று ஒரு மாத இதழை நடத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

8. தஞ்சை மாவட்டத்திலும் கோவை மாவட்டத்திலும் கொங்கு வேளிர் விழா நடத்தப் பொருளுதவி செய்கிறீர்கள். பழம் புலவரில் கொங்கு வேளிரைத் தேர்ந்தெடுத்து இவ்வாறு சிறப் பிப்பது உங்கள் பரந்த மனம் மாவட்ட எல்லைக்குள் குறுகி நின்றுவிட்டதைக் காட்டாதா?

9. உங்களைத் தமிழ்நாட்டின் தொழிலமைச்சராக்கினால் நாடு முன்னேற என்னென்ன செய்வீர்கள்?

10. மாணவர்களாகிய எங்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?