இன்று ரயில்வே ஸ்டேசனுக்குப் போகல. ஏனோ தெரியல, பழைய நினைவெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து, நிகழ்காலத்தோட முட்டி மோதுகிறது. “நீ செஞ்சது சரியா? இல்ல தவறா?” என்று லீலா தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு படுக்கையைவிட்டு எழாமல் யோசித்தவள் மளமளன்னு எழுந்து, குளிச்சுட்டு வேகவேகமா அதே தெருமுனையில் உள்ள விநாயகர் கோவிலுக்குப் போனாள்.

கோவில் வாசலை அடைந்தவுடன், கால்களில் இருந்த செருப்பை ஓர் ஓரமாகக் கழட்டிவிட்டுக் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலிருந்தே மனமுருக வேண்டினாள்.

“அப்பா கணேசா, நான் என்ன பாவம் செஞ்சேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? மனசார நான் யாருக்கும் கெடுதல் நினைக்கல. அப்படி இருந்தும் ஏன் என்னைக் கண்டா ரெண்டு அடி தள்ளி நிற்கிறாங்க இந்த மனிதர்கள்? அப்ப நான் மனித சாதியில்லையா? வேறு கிரகத்திலிருந்து வந்த ஜந்துவா? ஒண்ணுமே புரியலையே. அவுங்களை மாதிரி இரத்தம் சதையுமாத்தானே பிறந்திருக்கிறேன். பின் ஏன் என்னை மட்டும் ஒதுக்கிவைத்துப் பார்க்கிறார்கள் இந்த மனிதர்கள்?”

ஒரு சிறிய அமைதி நிலவியது. மீண்டும் தன் அப்பன் விநாயகனிடம் முறையிடத் தொடங்கினாள்.

இருந்து இருந்து ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனா, அதைக்கூட நீ நிலைக்க விட்டையா? இல்லையே. கொடுக்கிற மாதிரி கொடுத்து, மீண்டும் என்கிட்டயிருந்து பிடுங்கிட்ட. அதை உன்னோட கைவண்ணமுன்னு நினைக்கவா? இல்ல என் துரதிர்ஷ்டம்னு எண்ணவா? இவ்வளவு உன்னிடம் முறையிடுகிறேன். ஒரு அப்பனா இந்தப் பிள்ளைக்குக் கொஞ்சம் ஏதாவது சொல்லுறையா விநாயகா?

வேலை கிடைச்சு என்னால் தக்கவச்சுக்க முடியலையே. எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னா எப்படி? எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு இல்ல. அதைச் சும்மா சீண்டிப் பார்த்தா எப்படி? அதான், அவனைக் காலுல போட்டுருந்த செருப்பைக் கழட்டி ரெண்டு அறை விட்டேன். இனி அவன் யாருகிட்டையும் இதுமாதிரி நடக்கக்கூடாதுன்னு ஒரே நோக்கத்துலதான் அந்தச் செயலைச் செய்தேன். அதற்குப் பலன் என் வேலைப் பறிபோனது.

நீயே சொல்லேன், எங்கள மாதிரி இருக்கிறவங்களெல்லாம் வாழ்க்கையில அட்ஜஸ்ட் பண்ணுனா மட்டும் வாழ முடியும்முன்னா! அப்ப, எங்கள மாதிரி உள்ளவங்க தங்களது மனசாட்சியை அடகு வைக்கணும் போல. ஏன்? திறந்த மனசோட இருந்தோமுன்னா, இதுதான் கதியா?

இல்ல, அதான் உன்கிட்ட கேட்கிறேன். வீட்டைவிட்டு நாடோடி மாதிரி திரியிறோம். எங்களுக்குன்னு ஒரு வீடு இல்ல. எங்கள பெத்தவுங்களும் எங்களை நடுத்தெருவுல விட்டுட்டாங்க. நாங்களே அங்கும் இங்கும் தடுமாறி இந்த உலகத்துல காலத்தைத் தள்ளுறோம். அப்படி இருக்கிறப்ப, குறிப்பா எங்களப் பார்த்தாமட்டும் அவனுகளுக்கு எப்படித் தோணுது? ஏன், அவுங்க வீட்டுல பெண்களே இல்லையா?

ஏதோ, எங்கப் பருவ வயதில் ஏற்படும் மாற்றத்தினால நாங்களே நிலைகுழைந்து போயிடுறோம், பெத்தவுங்க ஆதரவு இல்லாம. எங்க மனசைக்கூட அவுங்க பார்க்கிறது கிடையாது. அது நாள் வரைக்கும் நம்ம கூடவே இருந்த போதிலும், அந்த மாற்றத்தைப் புரிஞ்சுக்கிற அவர்களது அணுகுமுறை வேறு மாதிரித்தான் இருக்கு. எங்களுக்கு இயற்கையாக அந்த மனோபாவம் வந்து விடுகிறது அந்தப் பருவ வயதில்.

இப்ப சொல்லு விநாயக அப்பனே, நாங்க திருநங்கையாக உருமாறியது எங்க குத்தமா? ஒண்ணும் தெரியாத வயசுல நாங்களும் மத்த பசங்க மாதிரித்தான் ஆடி ஓடி விளையாடிட்டு இருந்தோம். எங்க உடம்புலையும் சரி மனரீதியாவும் சரி நாங்க பல வேதனைகளை அனுபவிச்ச பிறகே முழுமையா திருநங்கையா மாறிட்டோம். பெத்தவுங்கதான் ஏத்துக்க மறுக்கிறாங்க என்றால், பொது ஜனங்களும் எங்களை அப்படித் தள்ளிவச்சுப் பார்த்தா எப்படி?

ஏன் முத்திரை குத்துறீங்க நாங்கன்னா இப்படித்தான்னு? எனக்கு மட்டும் அந்த வேலை நிரந்தரமா இருந்துச்சுனா, இந்த சொசைட்டியில நாங்களும் ஒரு மதிக்கத்தக்க ஆளுங்கதான்னு நிரூபிச்சுக் காட்டியிருப்பேன்.

இந்தப் பாலாப்போன வயித்துக்காகத்தான் ரயில்வே ஸ்டேசனுக்குப் போயி பலரிடம் காசு வாங்குறோம் வாழ்க்கையை ஓட்ட. என் வாழ்வுல ஒரு நல்ல வழியைக் காட்டுப்பா. எல்லா கம்பெனியிலுமா அந்த ஆள் மாதிரி இருப்பாங்க? எங்களைப் புரிஞ்சுகிட்டு யாராவது ஒருத்தர் முன்வந்து வேலைக் கொடுத்தாலே போதும். நாங்க, எங்கள மாதிரி உள்ளவங்க, அவுங்களுடைய வாழ்வைச் சீரமைச்சுப்பாங்க.

அப்பனே விநாயகா, ஒண்ணு மட்டும் நல்லா விளங்குது. உலகம் மாறிக்கிட்டே இருந்தாலும், மனிதர்களும் அவர்களது கோட்பாடும் இன்னும் காலத்துக்கேற்ப மாற மாட்டேங்கிறது என்பதுதான் உண்மை. இல்லையினா, எனக்கு வேலை பறிபோயிருக்குமா? இல்ல நான் தான் அவனைக் காலுல போட்டிருந்த செருப்பைக் கழட்டி அடிச்சிருப்பேனா? எங்க மேல இருக்கிற பார்வையை முதல்ல மாத்தணும். நாங்களும் உங்க மாதிரித்தான்னு உங்க மனசும் ஏத்துக்கிடணும். எங்களுக்கும் நல்ல காலம் பிறக்குமுன்னுதான் நாங்களும் தினம் தினம் எண்ணுறோம். எங்கள நாங்களாக இருக்க விடுங்க. இந்த மாதிரி புறக்கணிப்பது, சீண்டுவது, ஏளனப்படுத்துவது எல்லாம் செய்யாமல் இருந்தாலே நாங்க நாங்களாக இந்த உலகில் வளர்வோம்.

இப்ப நீயே சொல்லு, நான் அவனை அறைந்தது சரிதானே! நான் செஞ்சது சரிதானே? என்று லீலா விநாயக அப்பனைப் பார்த்தாள்.