தமிழ் வழிக் கல்வி | நாகூர் செய்கு அப்துல் காதிர் | November 2023



தமிழ் வழி மருத்துவ கல்வி முடியும் முடியாது என்கிற கருத்து மோதல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் வள்ளுவரின் மருந்து அதிகாரத்தை மையப்படுத்தி காட்டுகிறார் அமெரிக்க மருத்துவர் சாமுவேல் ஃபிஷ் கிறீன், " நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற குரலில் உள்ள 'நோய்நாடி' என்பதாக யாழ்ப்பாணத்தில் பேசினார்.

இவர் தமிழ் மருத்துவ கல்வியை பயிற்றுவித்தார். தமிழில் முதல் அறிவியல் மேதை என அறியப்பட்டார். அறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று இருக்கின்றதா? என பெரும்பாலும் கேட்பதுண்டு நிச்சயமாக வளர்ச்சியே தவிர ஒரு போதும் வீழ்ச்சி அடைவதில்லை. அறிவியல் இதழ்களால் கண்டிப்பாக செயல்பாடு, மொழிநடை, கலைச்சொல் போன்றவைகளால் தமிழை பரப்ப செய்கின்றனர்.

"சொல்லும் திறமை தமிழுக்கு இல்லை என்று அந்த பேதை உரைத்தான்" அந்தப் பேதை உரைத்தான் என்று மிகக் கடுமையான சொற்களைப் பிரயோகித்து நிந்தனையும் செய்கிறார். "தமிழ் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதோடு சட்டம் செய்க" என்று பாரதிதாசன் அன்றே முழங்கினார்.

மருத்துவத்துறையிலும் தொழில்நுட்பத்திலும் தமிழ் பயிற்று மொழியாக இருந்தே தீர வேண்டும் அப்படி இருந்தால் தமிழ் சார்ந்த முழுமையான பயன்பாடுகள் தமிழ் பேசும் தமிழை அறிய முற்படும் மக்களுக்கும் கிடைக்கும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியினரின் தமிழ் மொழிக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிற அறிவியலுக்கு ஈடு கொடுத்து அதற்கான சொற்களை தானே உருவாக்கி கொடுக்கும் தன்மையும் பெரும் சிறப்பும் நம் மொழிக்கு எப்போதும் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் தமிழ் தொன்மை வாய்ந்த மொழி தமிழில் இலக்கிய இலக்கணங்களின் பெருமையும் சிறப்பையும் உலகம் அறியும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சீரோடும் சிறப்போடும் வழக்கில் இருந்து வரும் நமது தாய் மொழிக்கு அறிவியல் செய்திகளை தமிழில் தரும் வல்லமை உண்டு. நமது முன்னோர்கள் தமிழில் இலக்கியம் அல்லாத மற்ற துறைகளான மருத்துவம், அறிவியல் வானியல் போன்ற அனைத்தையும் கவிதைகளில் ஆக்கி வைத்துள்ளனர். தாய்மொழியில் அறிவியலை படிக்கும் பொழுது அந்நாட்டு பொருளாதாரமும் பகுத்தறிவும் பண்பாடும் முன்னேறும் என்று பெர்ட்ரான்ட் ரசல் போன்ற அறிஞர்களின் கூற்றாகும். தாய்மொழி வழி அறிவியல் கற்பிக்கப்படின் அறிவியல் கல்விக்கும், சமூகத்திற்கும் ஓர் நெருங்கிய தொடர்பு ஏற்படும்.

இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வடமொழியை நன்கு அறிந்தவர்கள் தான் அறிவியலை மொழியாக்கம் செய்த போது ஆங்கில மொழி சொற்களையும் வடமொழிச சொற்களையும் Human Anatomy-மனுஷ அங்காதிபாதம் என்றும், Chemistry கெமிஸ்தம் எனவும் மொழிபெயர்த்தனர்.

ஆனால் தமிழாய்ந்த தமிழ் பெருமக்கள் அறிவியலைத் தமிழில் கொண்டுவர முடியும் என்பதை வடமொழி சொற்களையும், ஆங்கிலமொழி சொற்களையும் ஒதுக்கித் தள்ளி விட்டு அற்புதமான தமிழ் சொற்களைத் தந்து உலகிற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். இதனை விவரிக்கும் வகையில் இராதா செல்லப்பன் அறிவியல் கருத்துக்களைத் தமிழில் தருவதில் கலைச்சொற்களே உயிர் நாடியாக விளங்குகின்றனர் என்பதாக. 1932இல் தமிழைப் பயிற்று மொழியாக அறிவித்த பின் அரசால் வெளியிடப்பட்ட கலைச் சொற்கள் பெரும்பாலும் வடசொல்லாகும் ஆங்கிலமாகவும் இருந்தனர்.

Analytical chemistry விபேதன ரஸாயனம் இதனைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, குலாம் காதிரு நாவலரின் ஆருயிர் மாணவர் மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் போன்றோர் தனித்தமிழ் இயக்கத்தை வேரூன்றச் செய்து தமிழின் தூய்மைக்காக முற்பட்டதால் நல்ல கலைச்சொற்கள் உருவாகின. Heart என்பதற்கு இருதயம் என எழுதப்பட்டது, பின்ன இதயம் என்று ஆகியது.

1987இல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 'அறிவியல் தமிழ்' கருப்பொருளோடு கூடிய அறிவியல் தமிழ் பண்பாட்டு மாநாடு நடைபெற்றுள்ளதை நாம் எளிதில் மறந்து விடமுடியாது. முன்னர் கூறியது போல் நிச்சயமாக தமிழ் வழி மருத்துவ கல்வி இன்றைய சூழ்நிலையில் சாத்திக்க சாத்தியமே.

"உயர்ந்த கருத்துக்களை வெளியிடுவதற்கு வேண்டிய சொற்கள் நமது தாய் மொழிகளில் இல்லையென்று எவரேனும் நினைப்பார்களானால் நாம் உயிரோடு இருப்பதை விட இறந்து விடுவதே மேலானதாகும்"

- காந்தியடிகள்.

"தமிழா, பயப்படாதே! ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்க"

- பாரதியார்.

மேற்குறிப்பிட்ட உணர்ச்சி ஊட்டக்கூடிய கருத்துகளை வழங்கிய மகாத்மா காந்தியடிகளும் மகாகவி பாரதியார் சொல்லியும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?. தமிழை தாய்மொழி அல்லாதவர்களும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும் அறிவியலில் தமிழ்வழி கல்வி கற்று வரலாற்றில் இடம்பெற்றோர் ஏராளம். வாழ்க தமிழ்.

- நாகூர் செய்கு அப்துல் காதிர்

Published in Nagore Puranam November month magazine 2023


Post a Comment

0 Comments